Monday, April 09, 2007

ஊட்டியது யார் ?

" ஆண்களுக்குச் சமானமாக நின்று பேசத்தெரியாமல், அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு 'ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் ' என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலா வரும். அவையும் அவையின்ர வெட்கமும்... " இது வாரஇறுதியில் நான் சந்தித்த ஒரு இளைய எழுத்தாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியின் முதலாவது கதையின் மேற்கோள் வாசகம்.. "

வார இறுதியில் குடும்பமாக வெளியே சென்று வரும் போது, பிள்ளைகளோடு பேசுகையில் என் பெரிய பெண், தன் வகுப்பில் விவாதிக்கப்பட்ட ஒரு விசயத்தைச் சொன்னாள். ஐரோப்பிய சமூகத்தைச்ச சார்ந்த ஒரு இளம்பெண் தனது ஆண்நண்பனுடன் ஏற்பட்ட மனமுறிவைச் சீர் செய்ய, தனது செல்லிடத்தொலைபேசியிலுள்ள ஒளிப்பதிவுக்கருவி மூலம் தன்னை நிர்வாணப்படமெடுத்து, தொலைப்படமாக அனுப்பிவைத்திருக்கிறாள். அதை அவளின் ஆண் நண்பன் தன் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி மகிழ்ந்திருக்கிறான். ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். இந்தச் சிந்தனையாக்கம் சின்ன சின்னச் சந்தோசங்களினால் எல்லோராலும் கட்டி எழுப்பப்படுகிறது. அது சீர்குலைந்து, தன் பிரமாண்டத்தைக் காட்டும்போது மட்டும் ஆளையால் குற்றம் சாட்டி மற்றவர் தப்பித்துக்கொள்கின்றோம். அவ்வளவுதான்..


எழுத்தாளர்களிடம் நேரடியாக நூல்பெறும் போது அவர்களின் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ளும் என் வழக்கத்தின் படி அந்த இளம் எழுத்தாளரிடமும் கேட்க, அவர் சிரித்துக்கொண்டே கையெழுத்திட்டுத் தந்தார். எதிர்காலத்தில் பலர் கையெழுத்திட்டு வாங்கக் காத்திருக்கக்கூடும் என்னும் நம்பிக்கையை, அவர் எழுத்துக்கள் தோற்றுவிக்கின்றன...

"அர்த்தம்" எனும் அச்சிறுகதைத்தொகுப்பின் முதலாவது கதையான "கேள்விகளில்" உள்ளே வரும் உரையாடல்களில் ஒன்று..
“ எங்களில கன பிள்ளையள்கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ? எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப எல்லா நாட்டு கல்வியறிவும் இருக்கிறதுதான். அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை
"

27 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். இந்தச் சிந்தனையாக்கம் சின்ன சின்னச் சந்தோசங்களினால் எல்லோராலும் கட்டி எழுப்பப்படுகிறது. அது சீர்குலைந்து, தன் பிரமாண்டத்தைக் காட்டும்போது மட்டும் ஆளையால் குற்றம் சாட்டி மற்றவர் தப்பித்துக்கொள்கின்றோம். அவ்வளவுதான்..//

ரொம்ப உண்மை!

இதற்கு என்ன செய்வது என்பதை நாம் விவாதித்து நம்மாலான அளவிற்கு ஏதேனும் செய்யவேண்டும். சுயமரியாதையென்பது எவ்வளவு அவசியமான அற்புதமான விசயம் என்பதை நான் என்னால் முடிந்தளவு எனக்குத் தெரிந்த சிறுமிகளுக்குச் சொல்லிவருகிறேன். ஆயினும் சமூகத்தாக்கங்களுக்கு எதிராக நீச்சல் போடுவது கடினமே.

விரிவாகப் பேசவேண்டிய விதயமிது.
பேசவேண்டும்.

நல்லதொரு கருத்துப்பரிமாற்றமாக அமைந்தால், அதிலிருந்து பல விதயங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தமுடியும்.

(சொல்லிவிட்டுப்போய்விடவில்லை. விரைவில் வருகிறேன். ;) )
-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//" ஆண்களுக்குச் சமானமாக நின்று பேசத்தெரியாமல், அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு 'ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் ' என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலா வரும். அவையும் அவையின்ர வெட்கமும்..."//

மலைநாடான்,

அந்த இளம்படைப்பாளியைப்பற்றியும் அவருடைய புத்தகத்தைப்பற்றியும் விரிவாக எழுதுங்களேன். எல்லோரும் தெரிந்துகொண்டதுபோலவும் இருக்கும். புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற விவரமும் கொடுங்கள்.

-மதி

வெற்றி said...

/* ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். */

மலை, மன்னிக்கவும். மேலே உள்ள உங்களின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் பணிவன்புடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

எதற்கெடுத்தாலும் எம் பிழைகளை உணராமல், எம்மைச் சுயவிமர்சனம் செய்யாமல் உடனடியாக எம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேல் பழி போடுவது எமக்குப் பழக்கமாகிவிட்டது போலும்.

"You're not a failure until you start blaming everyone else around you"

இவ் வாசகத்தை எங்கேயோ படித்த ஞாபகம். யார் சொன்னது என்பது ஞாபகமில்லை.

அந்தப் பெண் சுய புத்தி இல்லாமல் பொறுப்பற்ற விதமாக , அறிவீனமாக நடந்து கொண்டதற்கு சமூகம், சினிமா, ஊடகங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

அந்தப் பெண்ணை நிர்வாணப் படம் எடுக்கும் வண்ணம் ஒருத்தரும் வற்புறுத்தவில்லையே!

பார்ப்பதில், கேட்பதில், படிப்பதில் எமக்கு எது நல்லதோ அதை எடுத்து எமக்குப் பாதகம் விளைவிக்கக் கூடியவற்றை விடுவதும் எம் கையில்தான் இருக்கிறது. அதனால் தான் மனிதன் ஆறறிவு கொண்ட ஜீவன் என்று விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துகிறோம்.

ஆக, ஒருவர் பகுத்து அறியாமல், தன் சுய சிந்தனை இல்லாமல் செய்யும் தவறுக்குச் சமூகத்தைக் குறை கூறுவது சரியல்ல என்பதே என் கருத்து.

உங்களின் வாதத்தின் படி பார்த்தால், ஒரு பெண்ணைக் கற்பழிப்பவன், கொலை செய்பவன், கொள்ளையடிப்பவன் எல்லாம் சமூகத்தின் தவறால்தான் செய்கிறான் எனச் சொல்ல முடியும்.

இன்றைக்கு எதில்தான் ஆபாசம் இல்லை? சும்மா ஒரு விளம்பரத்தை எடுத்தாலே ஆபாசம் நிறைந்திருக்கும். அதற்காக அவற்றைப் பார்க்கும் அனைவரும், கேட்கும் அனைவரும் இப்படியான முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ன?

தமிழ்நதி said...

யார் அந்த இளம் எழுத்தாளர் என்று அறியத்தருவீர்களா...?

துளசி கோபால் said...

பெண்கள் முதலில் சுயமரியாதையைப் படிக்கணும்.

எங்கியோ எப்பவோ தப்பான விஷயங்களைப் பெண்கள் மனதில் விதைச்சவங்களைத்
தான் சொல்லணும்.

உடை விஷயத்தை எடுத்துக்குங்க. நடுங்கும் குளிரில் விழாவுக்கு வரும் ஆண்கள் வுல்லன் கோட் சூட்.,
சில/பல பெண்கள் எப்படி வர்றாங்கன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமே.

என்னென்னவோ சொல்லணுமுன்னுதான் தோணுது. அப்புறமா வர்றேன்.

மலைநாடான் said...

//நல்லதொரு கருத்துப்பரிமாற்றமாக அமைந்தால், அதிலிருந்து பல விதயங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தமுடியும்//

நண்பர்கள் நிச்சயம் இதை ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்துக்கு எடுத்துச்செல்வார்கள் என்றே நம்புகின்றேன். அதனால்தான் பதிவினைக் கூட சுருக்கமாக இட்டுள்ளேன். பார்ப்போம்...

(மதி! நீண்ட காலத்திற்குப் பின் வந்திருக்கிறீர்கள்.வருவேன் என்றிருப்பதும் மகிழ்ச்சியே. கருத்துப்பரிமாற்றத்தில் கண்டிப்பாக வாருங்கள்.)

மலைநாடான் said...

மதி!, தமிழ்நதி!
நிச்சயமாக அந்த இளம் கலைஞரை இங்கு அறிமுகம் செய்ய வேண்டும். சற்று அவகாசம் கொடுங்கள்.:)

வெற்றி!
விவாதத்திற்குரிய கருத்து உங்களிடமிருந்து வந்துள்ளது. சற்றுப் பார்ப்போம். வேறு யாரும் இக்கருத்துன் உடன்படவோ மறுப்புக்கொள்ளவோ வருகிறார்களாவென்று. இல்லையெனிலும் எனது கருத்தை நிச்சயம் தருவேன்.

துளசிம்மா!
உங்கள் கருத்தைச் சொல்லிச்சென்றிருக்கின்றீர்கள். வருவீர்கள்தானே..:)?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன்//

மலை நாடர்!
நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.
இது மனநோயின் வெளிப்பாடு. அதாவது காச்சல் தடுமல் போல் ;இவர்களுக்காக நாம் மூன்றாம் நபர்கள் பரிதாபப்படலாம் ;பெற்றோர் நல்ல விசர் வைத்தியரிடம் காட்டுவதே உத்தமம்.
இதெல்லாம் விதிவிலக்கானதுகள். இவர்கள் மேல் வெளிச்சம் போடுவதே தவறு. அந்தப் பிள்ளைக்கு
சூரியக் குளியல் போல் இது சுணையற்ற விடயம்.
மற்றும் புகழ் தேடும் வியாதியும் இருக்கும்; ஈபிள் கோபுரத்தில் ஒவ்வொரு தட்டையும் சுற்றி ;வலைப் பாதுகாப்பு ஏனெனில்; சில தற்கொலைக் கேசுகள் தேர்வு செய்வது; இந்த இடமாம்.
காரணம் உயிர் போகும் போது புகழ் வரும்; சரித்திரத்தில் பெயரை நிறுத்துமாசை!!
இதுவும் அப்படியான நாடகம் போல் தான் உள்ளது.
உடன் வைத்தியம் செய்வது நன்று.
என் சிற்றறிவுக்கும்; இங்கே சிலகாலம் வாழ்தவனெனும் வகையிலும் பட்டது. இதுவே!!

✪சிந்தாநதி said...

இது ஒருவகை மனப்பிறழ்வுதான். ஊடகங்கள் நேரடியாக இதற்குக் காரணம் இல்லை என்ற போதும் சிறுகச்சிறுக நிகழ் ஊடகங்களின் ஊடாக வெளிப்படும் தான்தோன்றித் தனமான சில காட்சிப் படிமங்கள் ஆழ்மனதில் தங்கி slow poison போல உருவாக்கும் மீட்டுருவாக்கம் எனலாம். மனமுதிர்ச்சியற்ற நிலையில் நினைவிலி மனம் இதை மாற்றுருவாக்கம் செய்து இதுபோன்ற பாலுணர்வுச் சடைவுகளாக வெளிப்படுத்துகின்றது.

இதற்கு சரியான தீர்வு எதுவும் இல்லை. ஆனால் வளர்பருவத்தில் பெற்றொரின் சரியான கண்காணிப்பு மட்டுமே இதை குறைக்க முடியும்...

Vasanthan said...

அந்த இளைய எழுத்தாளரைப் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் அறிய பலரைப் போலவே நானும் ஆவலாயிருக்கிறேன்.
கையெழுத்து வாங்கின நீங்கள் குடுத்து வைச்சனியள்.

சின்னக்குட்டி said...

//அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை "//

எங்களைப்போல ஆக்கள் இளம் திறமையுள்ள வலைபதிவர்களை கேட்கிற மாதிரி கிடக்கு

மலைநாடான் said...

வெற்றி!

எந்தக்குழந்தையும் மண்ணிற் பிறக்கையில் நல்ல குழந்தைதான். அது வளரும்போது, தன்சூழலில் இருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது. சரி, பிழைகளையும் அவ்விதமே. அதற்குப் பெற்றோரிலிருந்து, சமுகம் வரைக்கும் ஒவ்வொரு காலப்பகுதியில், வெவ்வேறு விதங்களிலும், அளவுகளிலும், காரணிகளாகின்றார்கள். இதை இலகுவில் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனது சித்தனையும், ஏதோ ஒருவிதத்தில் பாதிப்புக் குள்ளானதே என்றுதான் ஆய்வாளர்கள் சொல்லுகின்றார்கள். என்ன ஒரு வித்தியாசம், எல்லோரும் ஒவ்வொரு அளவுவிகுதத்தில் வேறுபடுகின்றோம் அவ்வளவே.

எங்கள் சமூகத்தில் பெண்கள் மீதான பலாத்காரம் கலாச்சார இறுக்கதினூடு வைக்கப்படுகின்றதெனில், மேற்கத்தையக் கலாச்சாரத்தில் அது தளர்வினூடு வைக்கப்படுகிறது. ஆனால் இரு இடங்களிலுமே அது நிகழ்கிறது என்பது உண்மை.

எங்கள் சமூகத்தில் பெண்பிள்ளைகளுக்கு நீங்கள் அழகாக இருக்கவேண்டும், அப்படி இருந்தால்தான் நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என அறிவுரை சொல்லப்படுகின்றதெனில், மேற்கில் இளம்பெண் தன்னை அழகுபடுத்தினால்தான் ஆண்களைக்கவர முடியும் என அறிவுறுத்தப்படுகிறது. இவை வாழ்க்கையின் சராசரி நடைமுறை களினூடே ஊட்டப்படுகிறது. ஆக பெண் தூய்மையாக இருக்க வேண்டுமென்பது யாரோ ஒரு ஆணுக்காக என்பதே எல்லாவிடங்களிலும் சொல்லப்படுகின்றது. இவ்வித அறிவுறுத்தல் ஆண்களுக்குச் சொல்லப்படுவதில்லையா என்றால், இல்லை அல்லது குறைவு எனலாம்.

எல்லாத்தளங்களிலும் பெண்களிடத்தில், தன்னம்பிக்கை முனைப்பும், சுயமரியாதையுணர்வும், ஏற்படுத்தப்படுவது குறைவாகவேயுள்ளது.

இத்தகைய தன்மைகளினால்தான் அப்பெண் அத்தவறான முடிவுக்கு வந்தாள், அல்லது வழிநடத்தப்பட்டாள் என்பதே என் எண்ணம். ஆனால் இது ஏதோ ஒரு கணப்பொழுதில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. மெல்ல மெல்ல நிகழ்ந்த மனமாற்றம் அல்லது மனப்பிறழ்வு.

இந்தப் பதிவில் சுட்டப்பட்ட நிகழ்வில் பெண் மட்டுமா தவறு செய்தாள். அவளது ஆண் நண்பனும்தானே? ஆனால் பாருங்கள், நாம் அணைவரும் அப்பெண்ணைப்பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த ஆணைப்பற்றிய ஒரு கூற்றுக் கூட வரவில்லையே.

கொழுவி said...

வெற்றியும் முரண்படுறார்.. யோகண்ணரும் முரண்படுறார்.. என்ன மாதிரி நேரே கதைக்கும் போது பேசித் தீர்ப்பீங்களா.. இல்லாட்டி இங்கேயே கதைப்பியளோ..

மலைநாடான் said...

யோகன்!
புத்திபேதலிப்பது எப்போது? ஏதோவொரு பாதிப்பில்தானே. இப்படியான பேதலிப்புக்களுக்குக் காரணம், ஏதோ ஒரு நிகழ்வு என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் நடைமுறையில் உள்ள விடயங்களினால் மெல்ல மெல்ல அந்த மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் என் வாதம். இந்த நிலையிலிருந்து காப்பாற்றும் பெரும்பங்கு பெற்றோர்களிடமும் மிகுதி சமூகத்திடமும் உள்ளது. மேற்கில் இப்படியான பிள்ளைகளின் செயல்களுக்குப்பின்னால், அவர்களின் குடும்பச்சூழலை ஆராய்ந்தால், அது ஆரோக்கியமற்றதாகவே இருக்கிறது. அந்தப் பாதிப்பே பல இடங்களில் பிள்ளைகளை இப்படியாகத் திசை திருப்பிவிடுகிறது. இந்த நிலை தற்போது புலத்தில் தமிழ்சமுகத்திலும் மெல்லத் தொடங்குகின்றது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.

பகீ said...

மலைநாடான் அண்ணா,

முதலிலேயே சொல்லி விடுகின்றேன் நான் வெற்றியின் கருத்துடன் ஒத்துப்போகின்றேன்.

நீங்கள் சொல்கிறீர்கள் ஆணும்தானே தவறு செய்தான் அவனைப்பற்றி ஒரு கருத்தும் வரவில்லையே என்று? நிச்சயமாக தவறு செய்திருக்கிறான் தான் ஆனால் அந்தத் தவறிற்கு காரணமும் சமூகம் தான் என்று சொல்லி விட்டு ஏன் பேசாமல் இருந்து விடக்கூடாது?

ஆண்டவன் தந்த பகுத்தறிவை மூலையில் போட்டுவிட்டு படமெடுத்து அனுப்பினால் அதில் சமூகத்தை எவ்வாறு குறை சொல்லுவது? அல்லது யோகன் அண்ணா சொல்லுவது போல பைத்தியமாக இருக்க வேண்டும் அவர்கள் தான் பகுத்தறிய தெரியாதவர்கள்.

எடுத்ததற்கெல்லாம் சமூகத்தை காரணம் சொல்ல முடியாது. இந்த சமூகத்தினுள்தான் மொத்த சனத்தொகையுமே இருக்கின்றது. எல்லோருமே தவறு செய்வதில்லையே.

எனது கருத்து நாம் செய்யும் தவறுகள் எல்லாவற்றிற்கும் நாமேதான் காரணம். சமூகமல்ல.

மலைநாடான் said...

சிந்தாநதி!

கருத்துக்களை அழகாகத் தந்துள்ளீர்கள். பிள்ளைகளின் இத்தகைய மனப்பிறழ்வுகளுக்குப், பெற்றோரது கவனிப்பு அல்லது அரவணைப்பு இல்லாதிருப்பதென்பது மிக முக்கிய காரணம். ஆனால் அதற்கப்பால் சமூகமும் சரி பங்கு வகிக்கிறது.

கருத்துக்கு நன்றி

மலைநாடான் said...

வசந்தன்!

அந்த எழுத்தாளரைப்பற்றி நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். அந்தப் புத்தகத்தை வாசித்தபின் செய்வது நல்லது என்பதால் சற்றுப் பொறுமை காக்கவும்.

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

நீர் வேற. ஏற்கனவே எரியிற நெருப்பில எண்ணை ஊத்தப்பாக்கிறீங்கள்:)

கொழுவி!
முடிவதை முடிவதுபோல் செய்வோம். நல்லதே நடக்கும்.:)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

முதலில் அவசியமானதொரு விதயத்தை எடுத்தமைக்கு நன்றி மலைநாடான்.

பொதுவாக, நான் விவாதம் மயிர்மட்டையென்றெல்லாம் இறங்குவதில்லை. அதை இங்கேயும் செய்யப்போவதில்லை. ஆனால், இம்மாதிரியான விவாதங்களிலிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன்.

இனிமேல், பதின்ம வயதுப்பெண்களிடமும் பெண் குழந்தைகளிடமும் இந்த விதயத்தைப்பற்றிப் பேசும்போது உங்களின் இந்த இடுகையையும் பற்றிப் பேசுவேன். முக்கியமாக, இங்கே வந்திருக்கும் பின்னூட்டங்கள். என்ன நடந்தாலும், என்ன செய்தாலும் அதற்கு உன்மேல் பழி போடுவதற்குத்தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்று சொல்லி அதற்குக் காட்டாக சிலதைச் சொல்ல இப்பின்னூட்டங்கள் உதவின. they are worth atleast that much! ;)

இங்கே வந்திருக்கும் பின்னூட்டப்பிதற்றல்களை ஆராய்ந்து விவாதித்து யாரும் மாறப்போவதில்லை. அப்படி மாறவேண்டும் என்று சக்தியை விரயம் செய்வதிலும் எனக்கு விருப்பமில்லை. இவர்களைவிட சிறு பெண்களிடம் இதுபற்றிப் பேசுவது அதிக பயன் தரும். அதைத் தொடர எண்ணம்.

கூடவே, உங்களுடைய மற்றும் சிந்தாநதி ஆகியோரின் பின்னூட்டங்களையும் காட்டி புரிந்துணர்வுள்ளவர்களும் இருக்கிறார்கள். so, dont come to conclusions. என்றும் சொல்லவேண்டும்.

-மதி

பி.கு.: அந்த ஆண் நண்பனின் நடத்தையைப்பற்றி ஒரு வார்த்தைகூட வராததைச் சுட்டிக்காட்டியதற்கு பிரத்தியேக நன்றி மலைநாடான்!

செல்லி said...

first learning starts from home. என்கிற மாதிரி வீட்டில் பெற்றாரின் அன்பு, அரவணைப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாடு என்பன பிள்ளைகட்கு இருந்தால் தவறுகள் பெறுமளவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்பதே என் கருத்து.
அநாகரீகமாக ஆடை அணியும் தாய் எப்படி தன் மகளை நாகரீகமான உடையைப் போடச் சொல்ல முடியும்?
நன்கு படித்தவர்களே இவ்வாறு நடப்பதுதான் அதிர்ச்சி தருகிறது. இங்கு உடையை மட்டும் சொல்லவில்லை இன்னும் பல விடயங்களையும் இதில் அடக்கலாம்.இது பலருக்கும் தெரிந்ததே.

பின்னர் மகள் தவறாக நடந்துவிட்டா ல்(தெரிந்தோ அல்லது சந்தர்ப்ப வசத்தாலோ) நண்பர்களையோ அல்லது ஒட்டு மொத்த சமூகத்தயோ திட்டுவதில் பிரயோசனமில்லை. ஆகவே எனது கருத்து சமூகத்த மட்டும் குறை கூற முடியாது என்பதுதான்.

மலைநாடான் said...

// இந் நிலையில் பெண்ணியம், தலித்தியம் ஆகியன தனித்திக் கூறுகளாக தலை விரித்திருக்கும் காலமிதில், தலித்தியம், பெண்ணியம் சார்ந்த சொற்களைப் பாவிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கொள்கைளவில் எமது உள்ளம் வேற்றுமைகளைக் கடந்து நிற்க முனைப்பட்டாலும், நாம் வாழ்ந்த சூழலுக்குரிய ஆழ்மனப் பதிவுகள் சில ஆணுக்குரிய அல்லது ஆதிக்க சாதிக்குரிய குணாம்சங்களுடன் எம்மை அறியாமலே வெளிவந்துவிடுகின்றன. அல்லது நாம் வாழ்ந்த சமூகச் சூழலைப் பிரதிபலித்து விடுகின்றன. உதாரணத்திற்கு சமூகத்தில் உயர்சாதி, கீழ்சாதி ஆகிய பகுப்புக்கள் வெறும் கற்பிதங்களே! புதிலாக ஆதிக்க சாதி, தாழத்தப்பட்ட சாதி இல்லது அடிமைப்படுத்தப்பட்ட என்பவற்றை வரலாற்று நிஜங்களாகக் கொள்ளலாம். இவை சார்பாகவும் மலைநாடான் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.//

பகீ!
மேலேயுள்ள வரிகள், என்னை நன்கு அறிந்த என் நண்பர் ஒருவரால் வைக்கப்பட்ட மிக அருமையான ஒருவிமர்சனம். எத்தனையோ வருடங்களாக, மாற்றுச் சிந்தனையில் வளர்ந்த என்னிடம் காணப்பட்ட குறையொன்றினை அந்நண்பர் துல்லியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூகத்தின் மீதான சிந்தனைப் போக்குடைய என்னுள்ளே, என்னையும் அறியாமல் சொற்களைக் கையாளும்போது தவறு வந்துவிடுகிறது. இதுபோல்தான் நடைமுறைவாழ்வில் பலரும், எதுவும் அறியாத வண்ணமே, இயல்பாகத்தவறிழைத்து விடுகிறார்கள், என்பதைத்தவிர வேறென்ன சொல்லி உங்களுக்கு விளங்கப்படுத்துவது.

நன்றி.

செல்வநாயகி said...

நல்ல பதிவு மலைநாடான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இதைப் பார்க்கிறார்கள் என்பது பின்னூட்டங்களில் தெரிகின்றன. நானும் ஒரு பார்வையாளராக இதை ஆர்வமுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

பதின்ம வயதுப் பாலியல் உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. அவை பற்றிய விளக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இதை பெற்றோர், ஊடகங்கள், அரசு எனப் பலரும் செய்யவேண்டும். அவை சரியாகக் கிட்டாத அல்லது புரியவைக்கபடாத மனங்கள் எந்தவொரு அபத்தத்தையும் செய்யத் தயங்குவதில்லை.

மலைநாடான் said...

செல்லி!

உங்கள் கூற்று மறுப்பதற்கில்லை. அதேவேளை சமூகத்திற்கு இந்தச்சிந்தனையுருவாக்கத்தில் பங்கில்லை என்று சொல்லி விடமுடியாது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். சுவிஸில் 18 வயதுக்குட்பட்டோருக்கு, புகைப்பொருட்கள், மதுபாணங்கள் விற்கமுடியாது என்பது சட்டம். இது வர்த்தகநிலையங்களில் அறிவித்தலாகக் கூட வைக்கப்பட்டுள்ளது. நான் வேலை செய்யும் வணிகவளாகத்தில் 18 வயதுக்குட்பட்ட பயில்நிலைமாணவர்கள் சிலர் வேலைசெய்கிறார்கள். அவர்களுக்கு பதினாறு வயதுதான். ஆனால் உணவுவிடுகையின்போது, ஒய்வுமண்டபத்தில், வளாக இயக்குநரும், அவர்களும் சமமாக இருந்து புகைபிடிப்பார்கள். அப்படியானால் அந்த அறிவிப்பு யாருக்கு? அந்த வளாகத்தில் அந்த அறிவிப்பைத் தரும் அதிகாரி யார்?

வேடிக்கையாகஇல்லை.

மலைநாடான் said...

//பதின்ம வயதுப் பாலியல் உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. அவை பற்றிய விளக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இதை பெற்றோர், ஊடகங்கள், அரசு எனப் பலரும் செய்யவேண்டும். அவை சரியாகக் கிட்டாத அல்லது புரியவைக்கபடாத மனங்கள் எந்தவொரு அபத்தத்தையும் செய்யத் தயங்குவதில்லை. //

செல்வநாயகி!
சரியாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

இங்கு சுவிசிலுள்ள ஒரு மாநிலத்தின் பொதுப்பணித்துறை பதின்மவயதுப் பெண்பிள்ளைகளுக்காக பலமொழிகளிலும்(தமிழிலும்) தயாரித்திருந்த அறிவுறுத்தல் கையேட்டினைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவ்வளவு எளிதாகவும் விளக்கமாகவும் அந்தக் கையேடு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் தயாரிக்கப்பட்ட அந்தக்கையேட்டை ஒரு தமிழ்பெண்பிள்ளையிடம் யாராவது விநியோகிக்கும்போதோ அல்லது அதுபற்றிப் பேசப்படும்போதோ, தமிழ்ப்பெற்றோர்களிடமிருந்து உடனடியாக வருவது, "நாங்களொன்றும் எங்கட பிள்ளையள அப்பிடி மோசமாக வளர்க்கவில்லை .." என்ற வாசகங்களுடனான மறுப்பே. இந்த இடத்தில் சுயமரியாதையெனும் பெயரில் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கக் கூடிய ஒரு நல்ல ஆலோசனையை நிராகரித்துவிடுகிறார்கள். இது ஒரு தவறு என்பதை உணர்ந்துகொள்ளமலே பல பெற்றோர்கள் செய்வது புலத்தில் கண்கூடு.

இவ்விடயத்தில் இது ஒரு கூறுமட்டுமே. இப்படிப் பலவிடயங்கள் விரிவாகப் பார்க்கப்படவேண்டும். இன்னும் சொல்வதானால், ஒரு சுற்றுவட்டத்துக்குள் வாழப்பழகிக்கொண்ட பெற்றோர்கள், குறுகிய காலத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பப் புரட்சியினாலும், இன்னபிறவிடயங்களாலும், ஒருவிரிவான தளத்தில் வாழுகின்ற, தமது பிள்ளைகளின் வாழ்நிலைத்தன்மைகளை, தமது பழைய வாழ்நிலைகளோடு ஓப்பிடு செய்து, அளவிடமுனைவது அபத்தமானது.

Anonymous said...

இது பெண்களின் இயல்பான பலவீனத்தின் ஒரு வெளிப்பாடு.
" ஒரு ஆண் பாலின்பத்திற்காக ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழக விரும்புகின்றான். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணிடம் நெருங்கிய உறவை ஏற்படுத்த பாலின்பத்தைத் தர முனைகின்றாள்" என்ற ஒரு அமெரிக்க உளவியலாளரின் கருத்து நினைவுக்கு வருகின்றது.
அது சரி ரஷ்சியப் பழமொழி என்ன சொல்கிறது? " பெண்களும் நரிகளும் இயற்கையில் பலவீனமானவர்கள். ஆனால், தந்திரத்தால் ஜெயிக்கின்றார்கள்".

புள்ளிராஜா

நளாயினி said...

தாய் தந்தையின் வளற்பே இதற்கு காரணம். அல்லது குழப்ப மனநிலையில் செய்த செயல். அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தை குறை சொல்ல முடியாது.
இவ்வளர் நிலையில் தோழியர் உசார்படுத்தினாலும் நடந்து முடிகிற செயல்கள் இப்படியானவையாக உள்ளது.வழிநடத்தவேண்டியது பெற்றோரே.

மலைநாடான் said...

நளாயினி!
கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

உங்களிடமிருந்து இப்படியான ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கருத்தை மேலு சற்று விரிவாகத் தரமுடியுமாயின் தாருங்கள் பார்க்கலாம்.