Monday, November 13, 2006

வடக்கில்.. தெற்கிருத்தல்

நண்பர்களே! அண்மித்த சில நாட்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ளச் சில விடயங்கள் இருந்தபோதும், எழுதும் மனநிலை இருக்கவில்லை. எழுதவேண்டும் என எண்ணியவாறு அமர்ந்தால், எண்ணங்களை அலைக்கழிக்கும் அவலங்கள் என் மண்ணில். என்றில்லை அது ? எனக்கேட்டாலும், அண்மைக்காலங்கள் அதிக கனந்தருபவையாக, பயங்காட்டுபவையாக அமைந்து வருகிறது.... என்னத்தைச் செர்லவது..?

வேலை, வீடு, தமிழ்மணத்தில் சில வாசிப்புக்கள், சில பின்னூட்டங்கள், என்றளவில் மனம் மட்டுப்படுத்திக் கொண்டது. திரும்பத்திரும்பச் சில நினைவுகள்...சில காட்சிகள்.. வலிக்கிறது.

அந்நாட்களில் அரசர்கள் பலர் தம் அந்திம நாட்களில் “தெற்கிருந்தல் “ எனச்சொல்லி, தென் திசை நோக்கித் தவமிருப்பார்களாம் என வாசித்ததுண்டு. இன்று ஈழத்தின் வடக்கிருக்கும் என் சொந்தங்களின் நிலை கூட ஒரு “தெற்கிருத்தல் “ போலத்தான் எனத் தோன்றுமளவுக்கு, அங்கிருந்து வரும் செய்திகள் பயங்காட்டுகின்றன.

நேற்று என் நண்பனொருவன், பருத்தித்துறையிலிருக்கும் தன் தமக்கையுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளான். இன்றளவும் அம்மண்ணைவிட்டு வெளியேற விரும்பாத அவன் அக்கா, இனிப்பட முடியாது என அழுதிருக்கிறாள். ஆயிரம் அறிக்கைகள், அளவிலா மாநாடுகள், என எல்லாம் நடந்தபோதும், அம்மக்கள் வாழ்வு, மரணத்துள் வாழ்வு என்றாகிற்று.

அதியுயர் சம்பளத்தில், அரச பணியில் வாழ்வு நடத்தும் அந்தப் பெண், வாழ்வாதாரத்தை தொடர்வதென்பது பெருந்துயராகிப் போனதெனப் புலம்புமளவிற்கு நிலமை வந்துள்ளதெனில், அன்றாடக் கூலிவேலையாட்களும், கடற்தொழிலாளர்களும் படக்கூடிய துன்பம் எப்படியிருக்குமென எண்ணிப்பார்க்கப் பயமாயுள்ளது.

இராணுவச்சூழலுக்குள் செல்லும் அரச ஊழியர்களும், பள்ளி மாணவர்களும் படும் அவலங்கள் அதைவிட மோசமானவை. தினம்தினம் செத்துப்பிழைக்கும் நிலைதான். தேசிய அடையாள அட்டையுடன் செல்வோர், காப்பரனில் அவற்றைச் சமர்ப்பித்து, சோதனைக்குட்பட்டு, பின் கிடைக்கும் பிரத்தியேக அட்டையுடன் உள் நுழையவேண்டும். மாலையில் மீண்டும் திரும்பவும், அதே சடங்குகள் அரங்கேறும். அருகில் நிற்பவன் அல்லது நிற்பவள் பற்றித் திரும்பிப் பார்க்க முடியாத பயங்கரம்.

இந்தனை அவஸ்தைகளுடன் சென்று வரவேண்டுமா? சென்றுவரத்தான் வேண்டும். இல்லையேல் சித்திரவதை வீட்டு வாசல்வரை தேடி வரும் திறந்தவெளிச்சிறைக்குள் அல்லவா அவர்கள் வாழ்வாகிப்போயிற்று. காலை செல்லும் ஒருவனோ ஒருத்தியோ திரும்பி வரலாம் வரமாலும் போகலாம்.

இத்தனைக்குள்ளும் அவள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் என்ன தெரியுமா? இத்தனை இடர்களுக்கு மத்தியிலும்கூட, இந்தவருட உயர்தரப்பரீட்சையிலும் கூட நல்ல பேறுபேறுகளுடன் எங்கள் இளைய தலைமுறை சித்தி பெற்றுள்ளதாம்...

இறுதியாக அவள் சொல்லி முடித்தது, இருபது வருடங்களின் பின்நோக்கிய நிலையில், இப்போது வாழ்கின்றோம் என்பதே. எண்பதுகளின் தொடக்கத்தில் ஈழத்தமிழர் வாழ்வு எப்படி இருந்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே..

“இதுவும் கடந்து போகும் “ என்பது ஒரு ஆன்மீகப்பதம். இப்பொழுது அதையே சொல்லி ஆறுதல்படுவதுதைத்தவிர, தற்போதைக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை......

9 comments:

Anonymous said...

மலை நாடர்!
இதே மனநினையே!! இதுவும் கடந்து போம் என்ற நம்பிக்கையே!!!!
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

//அதியுயர் சம்பளத்தில், அரச பணியில் வாழ்வு நடத்தும் அந்தப் பெண், வாழ்வாதாரத்தை தொடர்வதென்பது பெருந்துயராகிப் போனதெனப் புலம்புமளவிற்கு நிலமை வந்துள்ளதெனில், அன்றாடக் கூலிவேலையாட்களும், கடற்தொழிலாளர்களும் படக்கூடிய துன்பம் எப்படியிருக்குமென எண்ணிப்பார்க்கப் பயமாயுள்ளது.//


நிலமையின் மோசம் தெரிகிறது.... எண்ணி பார்க்க முடியாமால் இருக்கிறது..

துளசி கோபால் said...

நிலமை வரவர ரொம்பவே மோசமாகி வருது.

எப்போ விடியும்> (-:

கானா பிரபா said...

அங்கிருக்கும் எம் உறவுகள் சொந்தமண்ணில் ஏதிலிகளாக, இங்கிருக்கும் நாம் என்னெசெய்வதென்றெ தெரியாத நிலை. என்ன செய்வது....

மலைநாடான் said...

யோகன்!
வேறென்ன செய்யமுடியும்?

சின்னக்குட்டி!
நிலமை மிகமிக மோசமாகியுள்ளது. என்ன செய்வதென்று புரியவில்லை.

மலைநாடான் said...

//நிலமை வரவர ரொம்பவே மோசமாகி வருது.

எப்போ விடியும்> (-: //

ஆமாம் துளசிம்மா!

நிலமை ரொம்ப மோசமாகிற்று. இராணுவச்சோதனைச் சாவடியைக் கடக்கும் வரிசையில், இறுதியாக வரும்,மாணவன் அல்லது மாணவியின் மனநிலை எப்படி இருக்குமென்று எண்ணிப்பாருங்கள்.. பயங்கரம் புரியும்.

வருகைக்கு நன்றி!

Chandravathanaa said...


“இதுவும் கடந்து போகும் “


இப்பொழுது அதையே சொல்லி ஆறுதல்படுவதுதைத்தவிர, தற்போதைக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை......

நவன் said...

மலைநாடான்,

எம் மண்ணுக்கு ஏன் இந்ததலைவிதி வந்தது என்று எண்ணி முற்றிய இந்த அவலங்களை எல்லாம் பார்க்கும் போது உள்ளம் விம்முகிறது.

நமக்கு எப்போதுதான் விடிவு காலம்?

காலமே பதில் சொல்லு.

மலைநாடான் said...

நவன்!

நிச்சயம் நாளை இது மாறித்தான் போகும்.