Sunday, November 05, 2006

எங்களுக்கான சினிமா மொழி

AANIVAER, ஆணிவேர்


“ சினிமாவில் அரசியல்பேச அமெரிக்காவால் மட்டுமா முடியும்? இதோ இங்கே எங்களாலும் முடியும்..” சுவிற்சர்லாந்தின் விமான சேவையான “சுவிஸ் எயார்” நிறுவனத்தின் இறுதிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்களை உள்ளடக்கி வந்த, “கிறவுண்டிங்” திரைப்படத்திற்கு, சுவிற்சர்லாந்தின் இத்தாலிய மொழிப்பத்திரிகை ஒன்று தந்த விமர்சனம் இது.

சினிமாவில் அரசியல் என்பது தமிழர்களுக்குப் புதிதல்ல. அந்தச் சினிமா அரசியல் கற்பித்த அனுபவம் என்பது கற்கண்டாக இனித்ததில்லை என்பதும் புதிதல்ல. மேலும் அது ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்ததாக இருந்ததுமில்லை. இத்தகைய சூழலில், ஈழத்தமிழரின் போரியல் வாழ்வையும், அதுசார் அரசியலையும் சுட்டி, முதலாவது ஈழத்தமிழரின் வெண்திரைக்காவியம் எனும் அடைமொழியுடன் வந்திருக்கும் திரைப்படம் ஆணிவேர்.

எங்களுக்கான சினிமாமொழியின் ஆரம்பம், ஆணிவேர்

தமிழ்த்திரைக்கண் நிறுவனத்தின் தயாரிப்பில், உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் அவர்களின் இயக்கத்தில், நந்தா, மதுமிதா, நிலீமா, ஆகிய தமிழகக்கலைஞர்களும், தமிழீழக்கலைஞர்களும் நடிக்க, சஞ்சயின் ஒளிப்பதிவில், எங்களுக்கான சினிமாமொழி, திரையில் எழுதப்பட்டிருக்கிறது.

கற்பனைகளில்லில்லாத, உண்மைச்சம்பவங்கள். தமிழீழ மண்ணின் போராட்ட களத்தில் நடந்த உண்மைச்சம்பவங்கள், காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன. இரத்தமும் சதையும், துன்பமும் துயரமும், நிறைந்த வாழ்வு திரையில் விரியும்போது, அவை நன்றாகவிருக்கிறது எனச் சொல்ல மனமிசையாவிடினும், காட்சிகளின் கடுமை மனதை நெருடினாலும் கூட, அதுதானே எமது மண்ணின் யதார்த்தம். திரையில் காட்ட முடிந்தவற்றை மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது என, இப்படத்தின் இயக்குனர் ஜான் செவ்வியொன்றில் கூறியுள்ளார். அதுதான் உண்மை என்பது, மண்ணின் துன்பக்களங்களில் நின்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

மொத்தப்படத்திலும் மனதை வருடிவருவது, அழகான ஒளிப்பதிவு. காட்சியின் யதார்த்தத்திற்குப் பொருத்தமான ஒளியளவுடன், பதிவாகியிருக்கும் காட்சிகள் அத்தனையும் அழகான ஒளிஓவியங்கள். அப்பப்பா அவ்வளவு அருமை. பெரும் பொருட்செலவில், வெளிநாடுகள் சென்று குப்பைத் தொட்டிகள் மேலும், தெருக்கோடிகளிலும், குத்தாட்டம் போட்டுப் படமாக்கும் சினிமாக்காறர்கள் கட்டாயம் இப்படத்தைப் பார்க்க வேண்டும். ஏன் தென்னிந்திய வர்த்தக சினிமா ரசிகர் வட்டமும்தான்

தமிழ்ச்சினிமாவின் பேச்சு மொழி எது? தென்னிந்தியத்தமிழா? தமிழீழத்தமிழா? வட்டார வழங்கு மொழியா? என்பதற்கு விடையளித்திருக்கிறது ஆணிவேர். சினிமாவிற்கான மொழி, பார்வையும் பதிவும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறது. மொழி என்பது இரண்டாம் பட்சமாகிப்போய், சினிமாவெனும் கட்புல ஊடகப்பெறுமானம் நிருபனமாகிவுள்ளதெனலாம்.

இது ஒரு ஆவணப்படமா? அரசியல்படமா? கலைப்படமா? வர்தகப்படமா? என வரையறுக்க முடியவில்லை என முணுமுணுப்பவர்களுக்கு, இது எங்கள் வாழ்க்கைப்படம். எங்கள் மண்ணையும், மண்ணின் அழகையும், போரியல்வாழ்வின் அனுபவங்களோடு காட்சிப்படுத்திக் கண்டுள்ளோம் எனச்சொல்லலாம்.

போரின் துன்பகரமான அனுபவங்களைக் கோர்த்துச் செல்லும் ஒரு திரைக்கதை. திரைக்கதைக்குத் தேவையான காட்சிக்களம். கதைமாந்தர்களை கச்சிதமாகப் பிரதிபலிக்கும் கலைஞர்கள் என அத்தனையும் பொருத்தமாக அமைந்துவிட ஆணிவேர், ஆழமாகப் பதியனாகிறது.
வர்த்தகக் கவர்ச்சிக்காகவே பல படங்களில் வலிந்து சேர்க்கப்படும் வல்லுறவுக்காட்சிச் சினிமாக்களின் மத்தியில், பெண்களுக்கெதிரான அடக்குமுறை ஆயுதமாக வல்லுறவை இராணுவம் கையாளும் வகைதனை, எந்தவித ஆபாசமான காட்சியமைப்பும் அல்லாமல், உணர்வுளின் அவஸ்தையாகச் சொல்லியிருக்குமிடத்தில், எழுந்துநின்று இயக்குநருக்கு மரியாதை செய்யத் தோன்றுகிறது. துயரங்களையும், துன்பங்களையும், அவற்றின் வலியோடு, உணர்வோடு சொல்லியிருக்கிறார்.

வன்னி நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம், விடுதலைப்புலிகளின் பிரச்சாரப்படமாகத்தான் இருக்கும் என நினைத்துச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். அத்தனை கச்சிதமாகச் சினிமாவாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகச் செய்திகள் சொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை.

எல்லாமே நன்றாக இருந்தது என்றால், குறைகளே இல்லையா? இல்லையே குறைகள் இல்லாமலில்லையே. குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சி, செய்தியொன்றைச் சொல்வதற்காக வலிந்து சேர்க்கப்பட்டது வடிவாகத் தெரிகிறது. காட்சிகளின் ஒழுங்கமைப்பில் ஒரு பாச்சல் தெரிகிறது. ஆனால் நிறைவுகளோடு ஒப்பிடுகையில், இவைகளெல்லாம் குறைவானவையே..

ஆணிவேர் ஒரு நல்ல ஆரம்பம்.

5 comments:

சின்னக்குட்டி said...

உங்களுடைய ஆணிவேர் விமர்சனத்தை பார்க்கும் போது ...தவற விட்ட இந்த படத்தை மேலும் விரைவில் பார்க்கோணும் என்ற ஆவலை உருவாக்கிறது..

நன்றிகள்...உங்கள்... அருமையான விமர்சனத்துக்கு...

கானா பிரபா said...

நல்லதொரு பதிவு மலைநாடான்,

இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்றும் ஆவல் உங்கள் பதிவு மூலம் ஏற்பட்டிருக்கின்றது.

Boston Bala said...

I am not able to read your blof in Firefox. I presume the following justification might be part of the problem:

'text-align: justify;'

in your template.

மலைநாடான் said...

சின்னக்குட்டி! பிரபா!!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பொஸ்டன் பாலா!

உங்கள் தெரிவிப்பு நன்றி. விரைவில் மாற்றம் செய்கின்றேன். செய்ததும் மீண்டும் தெரிவிக்கின்றேன் பார்த்ததுச் சொல்லுங்கள். ஏனெனில் என்னிடம் "Fire fox" இல்லை

மலைநாடான் said...

பொஸ்டன் பாலா!

நீங்கள் குறிப்பிட்ட திருத்தம் செய்துவிட்டேன். மகனது மடிக்கணனியில் உள்ள பயர்பொக்ஸ் உலாவியில், சரியாகத்தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துச் சொல்லுங்கள். நன்றி