அதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வெளிவராத அவ்வீடீயோப்பதிவுகளுடன், அன்றிரவு முழுவதும், கழித்ததினால் ஏதோ ஒருசுமை அழுத்துவதுபோல் ஒரு எண்ணம். அழுத்தத்தின் அயர்ச்சியாலும், காட்சிகளின் கோரத்தாலும், சோர்ந்துபோய் இருந்த என்னை , சூடான தேநீருடன் சந்தித்தார் 'நியூ விக்ரேஸ்' உரிமையாளரான குணம் அண்ணர்.
இராணுவக் கெடுபிடி நிறைந்திருந்த அன்றைய பொழுதுகளிலும், இப்படியான படத்தயாரிப்புக்களுக்கு தன் ஒளிப்பதிவுக் கூடத்தினை, இரகசியமாக இரவுகளில் தந்துதவும் நல்ல மனிதர் குணம் அண்ணா.
தேநீரைக்குடித்தபடி, தொகுத்திருந்த காட்சிகளைப் போட்டுக்காட்டினேன். அதிர்ந்துபோன குணமண்ணர், இந்தப்படங்களை இப்படியே வெளியிடுவதன், கடுமை குறித்துக் கருத்துச் சொன்னார். எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது. அத்துயரினைக் கரைக்கும் ஓர் இசையைப் பின்னணியில் சேர்க்கலாம் என எண்ணிய என் எண்ணத்தினைச் சொல்லியபோது, நல்ல யோசனை என்றவர், என்ன இசையைச் சேர்க்கப் போகின்றீர் எனக்கேட்டார். அதுபற்றித்தான் யோசிக்கின்றேன் என்றபோது, அவரே சொன்னார் 'ஷெனாய்' சேர்த்தால் நல்லது என்றார்.
'ஷெனாய்' அதுவரையில் நான், கேள்விப்பட்டிராத வாத்தியம். என் அறியாமையைச் சொன்னதும், அவர் தன்னுடைய சேகரிப்பிலிருந்த ஒலிப்பதிவுகளிலிருந்து, பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைப்பதிவை எடுத்து ஒலிக்க விட்டார். அப்போதிருந்த மனநிலையில், அந்த இசைகேட்ட மாத்திரத்தில் அழுதே விட்டேன். அப்படியொரு உருக்கமான வாத்திய இசையை அதுவரை நான் கேட்டதே இல்லை.

முன்னாள் பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி மறைந்தபோது யாழ்ப்பாணம் அழுதது. அந்த அழுகையோடு இணைந்திருந்தது பிஸ்மில்லாகானின் ஷெனாய்தான். என் மனங்கனத்த பொழுதுகள் பலவிலும், அவருடைய இசைப்பதிவுகளைக்கேட்டு அமைதியாகிப்போனபோதும், ஐரோப்பா வந்தபின்தான் அவருடைய கச்சேரி ஒன்றினை ஒளிப்பதிவில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய சுதந்திர பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் கங்கைக் கரையிருந்து அவர் இசைத்த அற்புதமான கச்சேரியை, ஐரோப்பித் தொலைக்காட்சியொன்றில் கேட்க, பார்க்கக்கூடிய வாய்புக் கிடைத்தது.
சோக உணர்வினை மிதமாகத் தருவதாலோ என்னவோ, ஷெனாய், தில்ரூபா, போன்ற வாத்தியங்களும், அவற்றின் இசையும், தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், சோகமே வாழ்வாகிப்போன தமிழீழ மக்களின் பெருந்துயரில், ஏதென்றறியாமலே, எவரென்று புரியாமலே, பிஸ்மில்லாக்கானும், அவரது ஷெனாய் வாத்திய இசையும் உணர்வாகி இசைந்தது என்றால் மிகையாகாது.
இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருது பெற்ற அந்தக்கலைஞனின், ஆண்மீகப்பணி காசிவிஸ்வநாதர் ஆலயம்வரை விசாலித்திருந்ததென்பதை அறிந்தபோது, மதங்களுக்கப்பால் விரிந்திருந்த அந்தக்கலைஞனின் மனம் புரிந்தது. 91 வயதில் மறைந்திருக்கும் அம்மேதையை ஏற்றுதல் செய்வோம்.
பிஸ்மில்லாகானின் மறைவு குறித்து நண்பர் சிவபாலனின் மற்றுமொரு பதிவு