உலகின் கவனத்தைப் பெற்றிருக்கும், உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் தொடர்பாக, நண்பர் இளங்கோ அருமையான பதிவுகளை எழுதி வருகின்றார். போட்டிகள் குறித்த அவரது பார்வைகள் மிகத்துல்லியமானவையாக இருக்கிறது. 26ந் திகதி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் விளையாடிய இத்தாலி - அவுஸ்த்திரேலியா போட்டி குறித்தும் அருமையான விமர்சனப்பதிவினைத் தந்திருந்தார். அதிர்ஷ்டம் இத்தாலியின் பக்கம் எனத் தலைப்பிட்டிருந்த அந்தப் பதிவினை நிறைவு செய்யும்போது,
' ஸ்பெயின் நடுவர், இந்தப்போட்டியில் வழங்கிய இரண்டு முடிவுகளும் (இத்தாலிக்குச் சிகப்பு அட்டை வழங்கியது, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பெனால்டி) கேள்விக்குரியதே' என நிறைவுசெய்கிறார். அவரது நியாயமான அந்தக் கேள்வி நேரிலும், தொலைக்காட்சியிலும், போட்டியைப் பார்த்த பலர் மனதிலும் எழுந்தே இருக்கும். ஏன் இப்படி என்பதற்கான அனுமானங்கள் அல்லது ஊகங்களைக் கொண்டதுதான் இப்பதிவு. இது இப்படித்தான் எனும் தீர்மானமானது அல்ல. இப்படியும் இருக்கலாம் என்பது மட்டுமே.
ஆரம்பம் முதலே எதிர்காப்பு விளையாட்டில் மிகக் கவனமாக இருந்த அவுஸ்திரேலிய அணியுடன், நீட்சிநேரத்தில் விளையாடுவதையோ, பெனால்டி அதிஷ்டத்தின் மூலம் வெற்றி வாய்பைத் தீர்மானிக்கடுவதையோ தவிர்த்து, ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இத்தாலிய அணிக்கு வெற்றிவாய்ப்புச் சேர்க்கப்பட்டதோ என்ற ஒரு எண்ணப்பாடு இயல்பாக எழுந்துள்ளது. இந்தகைய எண்ணப்பாடு அல்லது ஐயப்பாடு எழக்காரணம் என்னவென்று நோக்குமிடத்து, அந்நோக்குகள் உதைபந்தாட்டப்போட்டி, விளையாட்டு, என்பதையும் தாண்டி வேறு சில திசைகளிலும் பயனிக்கிறது.
இத்தாலி கலைவளம், இலக்கியவளம், கடல்வளம், தொழில்வளம், எனப்பல்வகைவளங்ககள் நிறைந்தவொரு நாடு.இதன்பல்வகைச்சிறப்புக்களுடன் மேலும் ஒரு அங்கமாக உதைபந்தாட்டத்தினைக் கொள்ளலாம். இத்தாலிய மக்களோடு நெருங்கிப் பழகக்கிடைத்த அனுபவத்தில் கூறுகின்றேன், அவர்கள் வாழ்வின் இன்றியமையா விடயங்களில் உதைபந்தாட்டமும் ஒன்று. இத்தாலிய மக்களின் மேல் தட்டு மக்கள் முதல், அனைத்துத்தரப்பினரும், உதைபந்தாட்ட ரசிகர்கள் அல்ல தீவிர வெறியர்கள் என்று சொன்னால், அது மிகையல்ல. இந்த அதீத ஆர்வம், பல பெருத்த சந்தைவாய்யுக்களை ஏற்படுத்தியுள்ளது என்பது மறைக்கமுடியாத உண்மை.
இந்தியாவில் திரைப்படத்துறை எவ்விதம் மக்கள்மீது செல்வாக்குச் செலுத்துகிறதோ? கிரிக்கெட் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறதோ? அதற்கு இணையாக, ஏன் அதற்கும் அதிகமாகவே உதைபந்தாட்டம் இத்தாலியில் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துகிறது. இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் சந்தை வாய்ப்பும் அளவீடு செய்யமுடியாதது. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரை ஊடகங்களிலும், ஆடைகளில் இருந்து பாதணிகள் வரையிலும், எனப் பல்வகையிலும் பொருளாதரத்துடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. இத்தகைய பொருளாதார முக்கியத்துவம் நிறைந்த, சந்தைவாய்ப்பு மிக்க ஒரு நாட்டின் அணி, உலகக்கவனம்பெறுகின்ற ஒரு முக்கிய போட்டியின் ஆரம்ப கட்டத்தில் வெளியேறுதல் என்பது எத்தகைய பொருளாதார இழப்புக்கு வழிசமைக்கும் என எண்ணத் தோன்றுகிறதல்லவா?
ஐரோப்பிய வர்த்தகப்பரப்பில் இத்தாலி ஒரு குறுநில அரசல்ல. அது ஒரு மிகப்பெரிய பேரரசு பேரரசுகளின் சரிவு என்பது எப்போதும் நடப்பதல்ல. எப்போதோதான் நடக்கும். இப்போதும் பேரரசு காப்பாற்ப்பட்டதாக ஏன் கொள்ளமுடியாது?. இப்போதெல்லாம் விளையாட்டுப் போட்டிகள், வெறுமனே விளையாட்டுப்போட்டிகளாக மட்டுமல்ல, அதையும் தாண்டி........
இந்தவகையில் நோக்குமிடத்து இளங்கோ குறிப்பிட்டது போன்று, 'ஸ்பெயின் நடுவர், இந்தப்போட்டியில் வழங்கிய இரண்டு முடிவுகளும் (இத்தாலிக்குச் சிகப்பு அட்டை வழங்கியது, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பெனால்டி) கேள்விக்குரியதே.' எது எப்படியாயினும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாடிய இத்தாலியவீரர் பாரட்டுக்குரியவரே.
நேற்றைய போட்டிகளில் தோல்விகளைச்சந்தித்த இரு அணிகளும் ( சுவிஸ், அவுஸ்திரேலியா) பந்தைக்கடத்துவதில் காட்டிய வேகமின்மையே அவர்களின் தோல்விக்கான முக்கிய காரணமாக எனக்குப்படுகிறது.
இளங்கோவின் பதிவுகளை வாசிக்காதவர்கள் தயவு செய்து கீழேயுள்ள சுட்டிக்குச்சென்று அவசியம் பாருங்கள்.
http://kaalpanthu2006.wordpress.com/2006/06/27
4 comments:
எனக்கு இதில் உடன்பாடில்லை.
உதைபந்தாட்டத்தில் நடுவரால் தவறுகள் விடப்படுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் அதிகமே. ஆனால் அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் உதைபந்தாட்டம் தொடர்கிறது. இன்றுவரை உயர் தொழிநுட்பச் சாதனங்களை நடுவராக்காமல் இருப்பதில்தான் அதன் உயிரோட்டம் பேணப்படுகிறது.
நானும் அந்த போட்டி பார்த்தேன். என் பார்வையிலும் நடுவரின் தீர்ப்பு சர்ச்சைக்குரியது தான். ஆனால் நான் தவறென்று நினைப்பது, நொக் அவுட் முறையில் நடக்கும் போட்டியில், இரு அணிகளும் சமநிலையில் இருக்கும்போது கடைசி சில வினாடிகளில் விசில் ஊதினால் தண்டஉதை என்ற சந்தர்ப்பத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு தவறுக்காக விசில் ஊதுவதைத் தவிர்த்திருக்கலாம் என்ற வகையிலேயே. தண்ட உதை கொடுப்பது கிட்டத்தட்ட ஒரு பேறு வழங்குவதாகக் கருதப்பட வேண்டும்.
ஆனால் இச்செயல் ஒரு நடுவரால் விடப்படக்கூடிய மிகசராசரித் தவறுதான். திட்டமிட்டுச் செய்ததுக்கான எந்த ஆதாரமுமில்லை.
மற்றும்படி அந்த நாட்டு நடுவர் இந்த நாடு வெல்லப் பாடுபட்டார் என்பதெல்லாம் அதிகமாகவே தெரிகிறது. இங்கே ஒஸ்ரேலியாவில் "'ஸ்பெயின்' நாட்டு நடுவரால் தவறாக வழங்கப்பட்ட" என்ற அடைமொழியோடு எல்லாருமே கிழித்துக் காயப்போடுகிறார்கள். நீங்களும் ஸ்பெயின் நடுவரென்பதை அழுத்தியிருக்கிறீர்கள்.
ஸ்பெயின் நடுவர் என்பதால் இத்தாலியின் பக்கம் சாய்நதிருக்கிறார் என்பதற்கோ, அல்லது ஒஸ்ரேலியாவை வெறுத்திருக்கிறார் என்பதற்கோ உங்கள் பதிவிலும் பதிலில்லை, ஒஸ்ரேலிய ஊடகங்களிலும் பதிலில்லை. இங்கு ஸ்பெயினை அழுத்துவதன்மூலம் படிப்பவர்கள் மத்தியில் "ஏதோ நடந்திருக்கிறது" என்று தோன்றவைப்பதே நோக்கம் போலுள்ளது.
ஸ்பெயினுக்கும் ஓஸிக்கும் என்ன பிரச்சினை என்று நண்பர்களுள் நடந்த விவாதத்தில், 'உவங்கள் அங்கையும் களவெடுத்துத்தான் இஞ்ச கலைச்சு விட்டாங்களோ தெரியாது' என்ற நக்கல்தான் ஓஸி எதிர்த்தரப்பிலிருந்து வருகிறது.
உள்ளதைச் சொல்கிறேன். "ஆத்தில போற தண்ணியை அண்ணை குடி,தம்பி குடி " என்பது போல் ;எங்கள் தொலைக்காட்டியில் எந்தச் செலவுமில்லாமல் ,இப்போட்டியைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது(சில நாடுகளில் கட்டண அலைவரிசைகளால் மாத்திரம் பார்க்கலாம்);இருந்து பார்ப்பேன்; விமர்சிக்குமளவுக்கோ; தவறுகளைக் கண்டு ஆய்வு செய்யுமளவுக்கோ!அறிவுமில்லை,அனுபவமுமில்லை.சில போட்டிகள் இருக்கை நுனிக்கு இட்டுவருவது ;உண்மை. நேற்றைய பிரான்ஸ் வெற்றி "அவர்கள் கூட எதிர்பாராதது". பொறுப்போம் ;இறுதிவரை .
யோகன் பாரிஸ்
வணக்கம் வசந்தன்!
முதலில் நியாயபூர்வமான உங்கள் கருத்தாடலுக்கு மிக்கநன்றி.
/உதைபந்தாட்டத்தில் நடுவரால் தவறுகள் விடப்படுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் அதிகமே. ஆனால் அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் உதைபந்தாட்டம் தொடர்கிறது. இன்றுவரை உயர் தொழிநுட்பச் சாதனங்களை நடுவராக்காமல் இருப்பதில்தான் அதன் உயிரோட்டம் பேணப்படுகிறது/
உங்களின் இந்தக் கருத்துக்களுடன் எனக்கும் மிகுந்த உடன்பாடே.
/"'ஸ்பெயின்' நாட்டு நடுவரால் தவறாக வழங்கப்பட்ட" என்ற அடைமொழியோடு எல்லாருமே கிழித்துக் காயப்போடுகிறார்கள். நீங்களும் ஸ்பெயின் நடுவரென்பதை அழுத்தியிருக்கிறீர்கள்.
ஸ்பெயின் நடுவர் என்பதால் இத்தாலியின் பக்கம் சாய்நதிருக்கிறார் என்பதற்கோ, அல்லது ஒஸ்ரேலியாவை வெறுத்திருக்கிறார் என்பதற்கோ உங்கள் பதிவிலும் பதிலில்லை, ஒஸ்ரேலிய ஊடகங்களிலும் பதிலில்லை. இங்கு ஸ்பெயினை அழுத்துவதன்மூலம் படிப்பவர்கள் மத்தியில் "ஏதோ நடந்திருக்கிறது" என்று தோன்றவைப்பதே நோக்கம் போலுள்ளது.
/
ஸ்பெயின் நடுவர் என்பதை நான் அழுத்தம் கொடுத்தது எழுதவில்லை. நன்பர் இளங்கோவின் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளில் இருந்ததை அப்படியே வைத்திருந்தேன். அதற்காக இளங்கோ அதை தவறாகப் பாவித்தார் என்றும் பொருள் கொள்ளத்தேவையில்லை. ஆக ஸ்பெயின் நடுவர் என்பதற்கு எந்தவிதமான சிறப்பழுத்தமும் இல்லை.
பொதுவாகவே இம்முறை இத்தாலிய அணியின் ஆட்டம் ஐரோப்பிய ரசிகர்கள் மத்தியில், பெரிதும் எடுபடவில்லை. இந்நிலையில், இத்தாலிய அணி ஆரம்பக்கட்டத்திலேயே வெளியேறினால், இப்போட்டியின் இறுதிக்கட்ட எதிர்பார்ப்பும், கணிசமான ரசிகர்கள் தொகையும் குறைந்துபோயிருக்கும். இதை இபபோட்டிகளின் பின்னால் உள்ள வணிக சமூகம் எளிதாக ஏற்றுக் கொள்ளாது என்பதேதான் நான் சொல்லவிரும்பியது. அதற்காக இதன் உள்ளார்ந்த விடயங்களைச் சாட்சிப்படுத்த முடியாது. இத்தாலிய சுதேசிய அணிகள் பலவற்றின் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுவதும் விவாதிப்படுவதுமுண்டு. அதனடிப்படையிலே அக்கருத்துக்களைக் குறிப்பிட்டேன்.
கிரிக்கெட்விளையாட்டின் ஊழல் பேரங்கள் போல், இதிலும் சாத்தியங்கள் உண்டென்பதான ஊகத்திலெழும் கருத்துக்களே அவை.
மற்றும்படி ஆரம்பத்திலேயே இது இப்படித்தான் நடந்தது எனச் சொல்ல முடியாது.இப்படியும் நடந்திருக்கலாம் என அதற்காகவே குறிப்பிட்டிருந்தேன்.
தங்கள் வருகைக்கும், நியாயபூர்வமான மறுதலிப்புக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.
யோகன்!
உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!
Post a Comment