எங்கே போயிற்று அந்தச் சிரிப்பு ? பல்வகைக்கலைகளாலும், சிறந்த ஈழத்தமிழ்மண்ணில் நகைச்சுவையுணர்வும் நயமாக இருந்த ஒருகாலத்தில், பல நகைச்சுவைக் கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களை நினைவுக்குட்படுத்தும் போது, அந்தக்காலத்தின் இனிமை எம் மனங்களில் எழுந்து மறைகின்றது. . பெருத்த வயிறும் குலுக்கல் சிரிப்பும், கக்கத்தில் குடையுமாக சக்கடத்தார் மேடையில் தோன்றினால் ஒரே சிரிப்பலைகள்தான். காலத்துக்கேற் சம்பவ நகைச்சுவைகளுடனும், துணை நடிகனுடனும் இணைந்த சக்கடத்தாரின் நகைச்சுவை அக்காலத்தில் மிகப்பிரபலம். நிகழ்ச்சி நடந்த சிலதினங்கள் பின்னும், மக்களால் சொல்லிப் பேசப்படுகின்ற நிகழ்ச்சி அது. இக்கலைஞனை இயற்கை மறைத்தது. பதிவுகள் இல்லாத காலத்தில் வாழ்ந்த இக்கலைஞனின் கலைவடிவங்களும் பதிவற்றுப் போயிற்று இதற்குப்பின் வந்த காலத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்களின் நிகழ்ச்சியும் மிக ஜனரஞ்சகமானது. இவர்களது நிகழ்ச்சி இசையும் நகைச்சுவையும் இணைந்தவொரு நிகழ்ச்சியாக இருக்கும். ஆம்! கணீரென்ற குரலில் நகைச்சுவையான பாடல்களையும் பாடிச்சிரிக்க வைத்த கலைஞர்கள் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள். இலங்கையின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், பின் ஒலி நாடாவினாலும், மக்களைச்சிரிக்கவைத்தவர்கள். காலவோட்டத்தில் இக்கலைஞர்கள் மறைந்தாலும், ஒலிப்பதிவுகளில் அவர்கள் குரல் ஆங்காங்கே இன்றும் வாழ்கின்றது. அவர்களின் நகைச்சுவையை, அன்றையபொழுதுகளில் ஒலிநாடாவில் பதிந்து தந்தவர்கள், யாழ்ப்பாணம் நியூவிக்ரேஸ் நிறுவனத்தினர். “சங்கானை, மாதகல், பண்டதரிப்பு, சில்லாலை, ஏறு.... அண்ணை றைற்..” என்றவாறு கே.எஸ். பாலச்சந்திரன் மேடையில் ஏறவும், பார்வையாளராக குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தின் முகங்கள் சிரிப்பால் மலரும். அடுத்து வரும் மணித்துளிகள் இன்பமாய் கழியும். பண்பான நகைச்சுவை, துல்லியமான யாழ்ப்பாணத் தமிழ் உச்சரிப்பு, நடைமுறைவாழ்வின் சம்பவங்கள் குறித்த விமர்சனப்பார்வைக் கருத்துக்கள், என்பன பார்வையாளர்களைக் கட்டிப்போடும். நிகழ்ச்சி நிறைவுபெறும் போது, சிரித்துச் சிரித்து, மனம் இளகிப் போயிருக்கும். வானொலிநிகழ்ச்சியாலும், மேடைநிகழ்ச்சியாலும், பல்லாயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளைகொண்ட கே.எஸ். பாலச்சந்திரன் யாழ்ப்பாணத்தின் முக்கியமான நகைச்சுவைக் கலைஞன். தாயகச் சூழலினால் தடைப்பட்ட இக்கலைஞனின் சிரிப்பு, தற்போது கனடா நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும், ரீ.வீ.ஐ தொலைக்காட்சில், ‘வை. ரீ. வைத்திலிங்கம் ஸோ என்ற நிகழ்ச்சியின் மூலம் புலம்பெயர் மக்களிடையே மலர்கிறது. சிரிக்கவும், சிரிப்பினூடு சிந்திக்கவும், வைத்த இக்கலைஞர்கள்களின் நினைவும், நிகழ்வுகள் தந்த மனமகிழ்வும் இன்னும் இனிமையான அனுபவச்சுவைகள். |
Saturday, June 17, 2006
அந்தச் சிரிப்பு !
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
மலைநாடான்,
மீண்டும் எம் தாய்மண்ணின் கலைஞர்கள் பற்றி ஒர் நல்ல பதிவு. பாராட்டுக்களும் நன்றிகளும்.
//பெருத்த வயிறும் குலுக்கல் சிரிப்பும், கக்கத்தில் குடையுமாக சக்கடத்தார் மேடையில் தோன்றினால் ஒரே சிரிப்பலைகள்தான்... டிங்கிரி சிவகுரு இரட்டையர்களின் நிகழ்ச்சியும் மிக ஜனரஞ்சகமானது... கே.எஸ். பாலச்சந்திரன் மேடையில் ஏறவும்,//
நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கலைஞர்கள் பற்றி நான் இதுவரை கேள்விப்படவும் இல்லை. அவர்களின் படைப்புக்களை பார்க்கவும் கேட்கவும் இல்லை. இத் தகவல்களுக்கு மிக்க நன்றி. அவர்களின் படைப்புக்கள் உங்களிடம் இருந்தால் தயவு செய்து இணையத்தில் பதிக்க முடியுமா?
// “சங்கானை, மாதகல், பண்டதரிப்பு, சில்லாலை, ஏறு.... அண்ணை றைற்..” //
என்ன?! என்னுடைய ஊரின் பெயரை வைச்செல்லாம் நகைச்சுவையா? அப்ப நான் கட்டாயம் கேட்க/பார்க்க வேணும். இருந்தால் தயவு செய்து பதியுங்கள்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
வெற்றி!
உங்கள் கூற்றிலிருந்து நீங்கள் மிகவும் இளவயதுக்காறர் எனக்கருத முடிகிறது. உங்களைப்போன்ற இளையதலைமுறையினர்க்கு அறிமுகம் செய்து வைப்பதற்காககவே, இங்கே அக்கலைஞர்களைப் பதிவு செய்தேன். ஈழத்து நகைச்சுவைக் கலைஞர்கள் வரிசையில் இவர்கள் மறக்கப்பட முடியாதவர்கள். இவர்கள் வாழ்ந்த கால தொழில்நுட்ப வளக்குறைவினால், இவர்கள் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாது போயிற்று. ஆனாலும், டிங்கிரி சிவகுரு, பாலச்சந்திரனின் அண்ணை றைற் ஆகிய நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவுகள் சில கிடைக்கக்கூடும். தற்போது என்னிடமில்லை. முயற்சிக்கின்றேன். கிடைத்தால், அல்லது தமிழ்மண நன்பர்கள் யாராவது தந்துதவினால் நிச்சயம் இங்கே மற்றொரு பதிவின் மூலம் தருவேன்.
நன்றி!
மலைநாடான், தங்கள் ஈழத்தின் மண்வாசனையை வெளிக்கொணரும் ஆக்கங்கள் என்னைப் போன்ற தமிழ்நாட்டினருக்கு நல்ல அறிமுகம். நீங்கள் சொல்லும் கலைஞர்களின் படைப்புகளை காணவேண்டும் என ஆசையைத் தூண்டுகிறது. ஆயினும் எந்த அளவு புரிந்து இரசிக்க முடியும் எனத் தெரிய வில்லை.
நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
மலைநாடான். வெற்றி போன்ற ஈழத்தின் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி என்னைப் போன்ற தமிழக இளைய தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் படி தொடர்ந்து இப்படி ஈழத்தின் கலைகள், கலைஞர்களைப் பற்றி அறிமுகப் படுத்துங்கள். குறைந்தது வலைப்பதிவுகளிலாவது உங்கள் மனக்குறையான தமிழகத் தமிழர்கள் ஈழத்துக் கலைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது தீரட்டும்.
டிங்கிரி சிவகுரு நகைச்சுவைகளை ஒலிவடிவிற் கேட்டிருக்கிறேன்.
வெற்றி,
சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல். இதில எதப்பா உம்மட ஊர்?
மணியன்ஐயா!
வணக்கம். முதலில் ஆறு விளையாட்டிற்கு என்னை அழைத்திருப்பதற்கு மிக்க நன்றி. தொழில் நிமித்தம் வேறிடத்தில் நின்றதன் காரணமாக, உங்கள் பின்னூட்டத்திற்கு உடன் பதில் தரமுடியவில்லை. அதுபோல் உங்கள் அழைப்பை ஏற்று உடன் ஆறு விளையாட்டுப்பதிவில் கலந்துகொள்ளவில்லை. மன்னிக்கவும். விரைவில் பதிவிடுகின்றேன்.
/நீங்கள் சொல்லும் கலைஞர்களின் படைப்புகளை காணவேண்டும் என ஆசையைத் தூண்டுகிறது. ஆயினும் எந்த அளவு புரிந்து இரசிக்க முடியும் எனத் தெரிய வில்லை /
நீங்கள் சொல்வது உண்மைதான். இக் கலைஞர்களது கலைவடிவங்கள் யாழ்ப்பாணப்பிரதேச வழக்கில் அமைந்தவை, அதனால் தமிழக ரசிகர்களுக்குச் சிலவேளைகளில் இந்நிகழ்ச்சிகள் புரிதலுக்குச் சற்றுச் சிரமமாகவிருக்கலாம். ஆயினும் உன்னிப்பான அவதானிப்புள்ளவர்களால் நிச்சயம் ரசிக்கமுடியும்.
நன்றிகள் மலைநாடன் இந்த பதிவுக்கு...சக்கடத்தார் கைசூப்பி கொண்டு வரும் ஓரங்க நிகழ்ச்சி. பாத்திருக்கிறேன...டிங்கிரி சிவகுரு ஈழத்து திரைபடம் வாடைகாற்றில் நடித்திருக்கிறாரென்று நினைக்கிறன்... அண்ணை றைற்றும் மறக்கமுடியாத ஓரங்க நிகழ்ச்சி
//அப்ப நான் கட்டாயம் கேட்க/பார்க்க வேணும்//
வெற்றி........ அண்ணை றைற் பாலசந்திரன் கனடாவிலை தான் இருக்கிறார்.
இது தான் அவருடைய வெப்சைற்
http://balachandran.homestead.com/Home.html
அவருடன் தொடர்பு கொண்டு முயற்ச்சித்து பார்க்கவும்
குமரன்!
தங்கள் கருதுக்களுக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.
நீங்கள், மணியன், எஸ்.கே. ஆகிய தமிழக நண்பர்கள், எங்கள் கலைஞர்கள் பற்றி அறிந்துகொள்வதில் காட்டும் ஆர்வம், மகிழ்ச்சி தருகிறது.
இங்கே நான் குறிப்பிட்ட கலைஞர்களில் சிலர், இலங்கை வானொலி மூலம், ஏலவே தமிழகத்து அறிமுகமானவர்கள் தாம். ஆனால், அவ்ரகள் காலத்து தகவல் தொழில் நுட்பம், தற்போதுள்ளது போல் வளர்ச்சியடைந்திராக் காரணத்தால் முக்கியத்துவம் பெறவில்லை.
/சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல். இதில எதப்பா உம்மட ஊர்?
/
நானும் இதைக்கேட்க வேண்டுமென நினைச்சனான். வெற்றி!
வசந்தன் மாதகல் என்று நினைக்கிறன். நீர்..?
வாங்கோ சின்னக்குட்டி!
தங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி. வாடைக்காற்று திரைப்படத்தில் பாலச்சச்நதிரன்தான் நடித்தவர். டிங்கிரி சிவகுரு வேறோரு படத்தில் நடித்திருக்கவேண்டும். மேலும், பாலச்சந்திரன் சிறந்த குணசித்திர நடிகனும் கூட. இலங்கை வானொலியில் பலவாரங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகிய 'தணியாத தாகம்' எனும் நாடகத்தில், சோமு என்ற அண்ணன் பர்திரத்தில் நடித்து, குடும்பச் சுமைகள் மிக்க யாழ்ப்பாணத்து அண்ணன்மாரை நினைவுக்குக் கொண்டுவந்தவர்.
மிக நல்ல கலைஞர்.
மலைநாடன்!
மிகநல்ல சேதி;இளைய தலைமுறைக்கு! இன்று நகைச்சுவை என்பது;இரட்டை அர்த்தம்; உடல் குறைபாட்டைக் கிண்டல் பண்ணுவது எனத் தரங்கெட்டுவிட்டது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஈழக்கலைஞர்களின் நகைச்சுவையில் என்றுமே!!அவை தலைக்காட்டியதில்லை.சக்கடத்தாரின் இரண்டு பகிடிகள் என்னால் மறக்கமுடியாதவை "கொத்தல்";"வின்சர் தியட்டர்" காலநடப்பை சிரிப்பாக்கிய கலைஞர். கொத்தல் என்பது டிஸ்பிறினுக்கு முன் இலங்கையில் தலைவலிக்கு உட்கொள்ளும் மாத்திரை!இதற்கு பத்திரிகையில் விளம்பரங்கள் வந்தது. சக்கடத்தாரை கேட்பார் அவர் நண்பர்
நண்பர்- "மாமியை ஏன் கொதினீங்கள்?"
சக்கடத்தார்- அவ தலையிடி;காச்சலென்றா!!!
நண்பர்- தலையிடி ,காச்சலென்றால் கத்தியாலையா கொத்துவதா?,
சக்கடத்தார்- வீரகேசரியில்;கிடந்தது;தலைவலியா? காச்சலா? இரண்டு "கொத்தல்" போடவும்;அதுதான் ;நான் மாமியட தலையில ரண்டு போட்டன்.
இப்படி! பல பல. இவர்கள் எவரையுமே இலகுவில் மறக்க முடியாது."அண்ண ரைற்" யாழ் பஸ்ப் பிரயாணத்தின் அனுபவப் பிளிவு!
"மணியண்ணன் போட்ட பிறேக்கில; நீங்க எங்க விழுந்தனீங்க?
"நானோ! தங்கப்பிள்ளை ஆச்சியின்ர;கடகத்துக்க!!"!!வயிறு புண்ணாகிவிடும்.ஒரு தனிக்கலைஞன்
ஒரு பஸ்,50 பயணிகளுடன் போகும் பிரமையை;ஏற்படுத்தி அதில் வெற்றியும்; கண்டவர்.
மறக்க முடியாத இந்த கலைஞர்களின்;பதிவுகள் பரவலாகக் கிடைக்காதது. கவலையே!!
இவர்களை நினைவு கூர்ந்ததற்க்கு நன்றி!
யோகன் பாரிஸ்
யோகன்!
நீங்கள் சொல்லியவை அத்தனையும் உண்மை. உங்கள் பாராட்டுக்கும், பதிவிற்கும் நன்றி.
Post a Comment