திருகோணமலையிலிருந்த போது, இஸ்லாமிய நண்பர்கள் நிறையவே இருந்தார்கள். அவர்களோடு ஒரு சந்தர்ப்பத்தில் மசூதிக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பின் ஒரு தடவை கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு உறவுக்காரப் பையன் ஒருவன் அழைத்ததின் பேரில், சென்றிருந்தேன். இவற்றைத் தவிர இஸ்லாம் மதத் தலங்கள் பற்றிப் பெரிதாக அறிந்ததில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டுப் பயனத்தில், அன்னைவேளாங்கன்னி ஆலயத்திற்குச் சென்று திரும்பும் போது, எங்கள் வாகனச்சாரதி கேட்டார் நாகூர் தர்க்காவிற்குச் செல்ல விரும்புகின்றீர்களா ?என்று. கேட்ட மாத்திரத்தில் நான் உசாரானேன். தமிழ்நாட்டில் மூன்று மதப்பிரிவினரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் எனக் கேள்விப்பட்டிருந்ததாலும், இலங்கை வானொலியில் இஸ்லாமிய கீதங்கள் முலம் நாகூர் ஹனிபாவின் பாடல்களில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்ததாலும், நாகூர் தர்க்கா செல்லும் ஆர்வம் என்னுள் எழுந்தது.
எங்கள் வாகனம் தர்க்கா முன்நின்றது. இலங்கையில் ஒரு முஸ்லீம் பகுதியைக் காணும் போது தென்படும் காட்சிகளோடு, ஏனைய மதப்பிரிவினர்கள் சகஜமாக கலந்துறவாடும் காட்சியும் தென்பட்டது.
தர்க்காவிற்குள் இறையருட்கலைஞன் ஹனிபாவின் பாடலோடு செல்வோமே.
ஒரு தர்க்காவிற்குள் செல்ல முன்னதான உடற்சுத்திகளை நிறைவு செய்துகொண்டு உள் நுழைந்தோம். பிரமாண்டமான தூண்களுடன் கூடிய மண்டபம். எங்கும் விரவி நின்ற சுகந்தம். பழைமை சான்ற பெரும் வாசல் நிலைகள். நிலைகளின் வேலைப்பாடுகளில் யாழித்தலைகூட இருந்ததாக ஞாபகம். ஒரு வாசலில் வந்ததும், வாகனச்சாரதி சொன்னார். சற்றுப் பொறுங்கள் நான் தொழுகை செய்துவிட்டு வருகின்றேன் என்று. ஆம் அவரொரு இஸ்லாமியர். நாங்களும் சம்மதித்துவிட்டு சூழலை நோக்க, சாரதி உள்ளே தொழுகைக்காகச் சென்றார். மண்டபத்தில் மயிற்பீலி சோதிடம், மருத்துவம், மாந்திரீக நூற்கயிறு, என்பன செய்வதாக பலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அமைதியும் இருந்தது.
சாரதி தொழுகை முடிந்து வந்ததும், நாங்கள் தர்காவிற்கு வெளியே வரத் தொடங்கினோம். தர்க்காவின் வெளிப்புறத்தில், சிலர் தர்மம் செய்யும் வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் அநேக ஆலயங்களின் முன்னால் இவ்விதம் தர்மம் கேட்பவர்களைக் காணக்கூடியதாக இருப்பதால் நாம் அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை.
வாகனத்தில் புறப்பட்டபின்தான் சாரதி சொன்னார், தர்க்காவின் வெளியே தர்மம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மையில் வறியவர்கள் அல்ல, வசதிபடைத்தவர்களே. ஆனாலும் நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவேளையாவது யாசித்து , உணவருந்தும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்களென. இதற்கு மேல் அவரால் அது பற்றிய விபரங்களைத் தரமுடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டுவிட்டதால், அதுபற்றி மேலதிகமாக யாரிடமும் கேட்டுத் தெரிய முடியவில்லை.
இஸ்லாமிய மார்க்கத்தின் ஏதோவொரு பண்பாட்டுக்கோலத்தை உள்ளடக்கிய அச்செயல் குறித்து இன்னமும் அறிந்துகொள்ள முடியவில்லை. இங்கே தமிழ்மணத்தில் வலம் வரும் நண்பர்கள் யாராவது உண்மையில் அப்படி ஒரு நடைமுறை அங்குளதா? அப்படி இருப்பின் அதன் காரணம் அல்லது பொருள் யாதெனத் தெரிந்திருப்பின் சொன்னால் நாமும், நம்மோடிணைந்தவர்களும், அறிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும். ஒரு மார்க்கத்தின் உட்பொருளுணரமுடியும். சொல்வீர்களா நண்பர்களே?
27 comments:
இஸ்லாத்தில் அப்படி ஒரு வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. தர்கா என்னும் போதே அது இஸ்லாமிய மற்றும் மற்ற மதங்கள் கூடம் இடமாகிவிடுகிறது. அது போன்ற சூழலில் இஸ்லாத்தில் உள்ள நடைமுறைகள் மட்டுமில்லாமல் மற்ற வழக்கங்களும் காணப்படுவது இயல்பே
எங்க ஊருக்கு பக்கத்தில் தான் உள்ளது.நானே 2 தடவைதான் உள்ளே போய் பார்த்துள்ளேன்.
அன்பு மலைநாடன்!
நல்ல பதிவு;புதிய விடயம்;;;;!இந்த யாசிக்கும் முறை போல்; எங்கள் நாட்டில் இந்துக்களிடமும் உண்டு. ஆனால் அந்த யாசிப்பை தெய்வத்துக்கு அர்ப்பணிப்பர். அதை "மடிப்பிச்சை" என்பர். இடரால் அல்லற்படும் போது "நான் மடிப் பிச்சை" எடுப்பேன். என வணங்கும் தெய்வத்திடம் வேண்டி!!!ஊரிலுள்ள வீடு வீடாக சென்று"அத் தெய்வத்தின் பேரைச் சொல்லி" ;;;;அவர்கள் இடும் பெரும்பான்மையாக அரிசியாகவே;சில சமயம் பணமாகவோ! கொடுப்பதை மடியிலேயே வாங்குவார்கள்(கையில் வாங்கும் பழக்கம் இல்லை).அப்படிப் பலநாட்கள் தொடர்ந்து சேமித்ததைக் கோவிலில் கொடுப்பது.இது சாதி,அந்தஸ்து,கல்விக்கு அப்பார்ப் பட்டதாக சகலரும்;நம்பிக்கையுடன் செய்வது.இன்று வழக்கொழிந்து போய்விட்டது.நாகரீகமும்;நகர்ப்புறத் தொடர்பும்; இடரே வாழ்க்கை யானதும் ஒரு காரணம்.நாகூர் தர்க்கா வழக்கமும்;இப்படியான வேண்டுதலாக இருக்கலாம்.
யோகன் பாரிஸ்
அநாமதேய நண்பரே!
இஸ்லாத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை என்பதை நானும அறிவேன். ஆனால் இங்கே குறிப்பிட்டுள்ள நிகழ்வு நாகூர் தர்க்காவில் மட்டும் நிகழும் ஒரு பண்பாட்டுக் கோலம். அதன் சிறப்புப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவே இப்பதிவு. இங்குள்ள வலைப்பதிவு செய்யும் இஸ்லாமிய நண்பர்கள் யாராவது விபரம் தெரிந்திருந்தவர்கள் சொன்னால் நாமும் அறியக் கூடியதாக விருக்கும்.
வடுவூர் குமார்!
உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.
அருமையான சிறப்பான பாடலைத் தந்தீர்கள் மலைநாடான். நான் மிகச்சிறிய வயதில் நாகூர் தர்காவிற்குச் சென்றுள்ளேன். பச்சை வண்ண துணிகளும் கொடிகளும் மயிற்பீலியால் செய்யப்பட்ட ஆசிகளும் நினைவில் இருக்கின்றன. மற்றவை மறந்துவிட்டன.
மேலே Muse என்ற பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் அவர் இட்டது இல்லை; அவர் பெயரில் வேறு யாரோ இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை அழுத்தினால் வரும் பக்கத்தில் உள்ள வாசகங்கள் அதனைத் தெளிவாகச் சொல்லும். பார்த்துவிட்டு அந்தப் பின்னூட்டத்தை முழுமையாக அழிக்க மனமிருந்தால் அழித்துவிடுங்கள்.
யோகன்!
நீங்கள் குறிப்பிடுவது சரியென்றே நினைக்கின்றேன். அங்குள்ள நடைமுறை ஏறக்குறைய நீங்கள் சொல்வது போல்தான் எனக்கும் தெரிகிறது. யாராவது வந்து சொல்கின்றார்களா பார்ப்பபோம்.
குமரன்!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதற்கும் மேலாக போலிப்பின்னூட்டம் பற்றிக் கவனத்துக்கு கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி. கவனமாக இருந்தும் இந்தத் தவறு நடந்து விட்டது. இனிமேல் விழிப்பாக இருக்க முயல்வேன். இத் தவறின் காரணமாக யார் மனமாவது நோகடிக்கப் பட்டிருக்குமாயின் தயவு செய்து மன்னிக்கவும்.
//நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவேளையாவது யாசித்து , உணவருந்தும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்களென...//
அன்பரே மலைநாடான்,
தங்களின் நாகூர் தர்கா பயணத்தை சுவையாக விவரித்திருக்கிறீர்கள்.
பிறரிடம் யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன் மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது முகத்தில் சதையற்றவனாக வருவான் என்பது நபிமொழி. அந்த வகையில் மேற்கண்ட செயலைச் செய்பவர்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதை தங்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அபு ஸாலிஹா!
உங்கள் வருகைகும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றிகள். இன்று உங்கள் மூலம் இஸ்லாம்பற்றிய மேலும் ஒரு கருத்தினை அறியமுடிந்தது. நன்றி!
நணபர்களே!
எனது தளத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பச்சிக்கல்களால் இப்பதிவிற்கான தொடர்பாடல் திருப்திகரமாக அமையாதுள்ளது. விரைவில் சீர்செய்ததும் சந்திக்கின்றேன்.
தற்போது இத்தளத்தின் தொழில் நுட்பச்சிக்கல்கள் சீரமைப்புச் செய்தாயிற்று
நாகூர் ஹனிபாவின் பாடலோடு
உங்கள் பதிவைப் படிக்கும் போது இதமாய் இருந்தது.
தகவல்களுக்கு நன்றி மலைநாடான்.
இனிய வாழ்த்துகள்.......
நல்ல பதிவு மலைநாடான்.
ஹனீபாவின் பாடலை ரசித்தேன். நன்றி.
மலைநாடான்,
உங்கள் பதிவுக்குத் தொடர்புடைய, நீங்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு:
http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.html
அஜீவன்!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
//நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவேளையாவது யாசித்து , உணவருந்தும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்களென.//
அன்பு மலைநாடான்,
நான் நாகூர்க்காரன் தான். மேற்கண்ட வழக்கத்தைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. அபூஸாலிஹா குறிப்பிட்டதைப் போல, யாசிப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. அதிலும், நபிகளார் பெயரைச் சொல்லியே 'கடமையாக' யாசிப்பவர்களை என்ன சொல்வது?
//தமிழ்நாட்டில் மூன்று மதப்பிரிவினரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் எனக் கேள்விப்பட்டிருந்ததாலும்,//
மிக்க நன்றி. நான் அடிக்கடி கூறுவது உண்டு, என் ஊர் மூன்று மதங்களில் சங்கமம் என்று....
நாங்கள் இந்துவாக இருந்தாலும் கூட நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டு அன்னம் படைப்பது உண்டு.
மலைநாடன்,
யாசகம் கேட்பதற்குச் சொல்லப்படும் காரணத்திற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இஸ்லாம் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பதும் இல்லை. நாகூர் தர்காவில் யாசகம் கேட்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட வழி!
இதுபோன்ற நிகழ்வுகளை டெல்லியிலுள்ள ஒரு குருத்வாராவில் கண்டிருக்கிறேன். யாசகத்திற்குப் பதில் குருத்வாராவை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சுத்தம் செய்பவர்கள் பெரும் செல்வந்தர்கள், தங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக இதைச் செய்வதாக கூட வந்த நண்பர் சொன்னார். சீக்கிய மதத்தில் இது உண்டா என்று தெரியவில்லை.
வாகனச் சாரதி சொன்னது மாதிரி யாசகம் கேட்பவர்களில் பெரும்பாலோர் செல்வந்தர்கள் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்!!!
தர்காவில் சென்று வழிபடுதல் என்பது இஸ்லாம் தடுத்த காரியங்களில் ஒன்று. முகமது நபி தன் மருமகன் அலியிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப் பட்டிருக்கும் அனைத்து சமாதிகளையும் இடித்து விடுவாயாக' என்று கட்டளை இட்டார். அதன்படி பல சமாதிகள் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன. இஸ்லாமியர்களிலேயே பலருக்கு குர்ஆனின் கட்டளைகள் தெரியாததால் இது போன்ற தவறுகளை செய்து வருகிறார்கள். தற்போது பிரச்சாரத்தின் மூலம் ஓரளவு மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. முகமது நபியின் அடக்கஸ்தலம் வெறும் மண்ணால் தான் அமைக்கப் பட்டுள்ளது.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
சந்திரவதனா!
தங்கள் வருகைக்கு நன்றி.
வஹ்ஹாபி!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், குறிப்பாக சுட்டிக்கும், மிக்க நன்றிகள். உங்கள் சுட்டி மூலம் இஸ்லாம் பற்றி வேறு பல
விடயங்களையும் அறியமுடிந்தது.
சலாஹத்தின்!
நாகூர்காரரான நீங்கள் வந்து கருத்துச் சொன்னது மகிழ்வைத்தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
நாகை சிவா!
மத நல்லினக்கத்தின் வெளிப்பாடாக விளங்கக்கூடிய நாகூர் மண்ணின் பெருமைக்கு உங்களைப்போன்ற மண்ணின் மைந்தர்கள்தானே காரணம்.
நல்லடியார்!
நீங்கள் வந்து சொல்லிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன்.
சுவனப்பிரியன்!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி.
உங்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களும், இஸ்லாத்தில் பல தெளிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மிக்க நன்றி
இஸ்லாத்தில் யாசகம் இல்லை என்பதை முன்னரே என் இஸ்லாமிய நண்பர்கள் மூலமும் அறிந்துளள்ளேன். இங்கு வந்து கருத்துக்கள் சொன்ன அன்பர்களும் அதை வலியுறுத்தியுள்ளார்கள்.
மதங்களிடையே இழையோடக் கூடிய ஒற்றுமைகளை ஆர்வமாய் தேடி ரசித்து, மதங்களின் உயர்வான இணக்கப்பாட்டில் மகிழ்வுறுபவன் நான்.
வாகனச்சாரதி சொன்னது எனக்கு ஆச்சரியமாகவிருந்தது.
அதனால்தான் இதைப்பதிவாக எழுதினேன்.
இதுவரையில் கருத்துச் சொன்ன நண்பர்கள் எல்லோரும் இஸ்லாத்தில் அப்படியில்லை என்பதையே வலியுறுத்தினார்கள். நாகூர் தர்க்காவில் அப்படி வழக்கம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை தீர்க்கமாகச் சொல்லவில்லை. ஆனாலும் பறவாயில்லை. எந்தவொரு மத நம்பிக்கையையும் இகழ்வது என் நோக்கமல்ல என்பதைமட்டும் இங்கே சொல்லிட விரும்புகின்றேன்.
Post a Comment