Tuesday, July 17, 2007

தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.


உங்களுக்கு, கிட்டிப்புள்ளு (கிட்டிப்பொல்லு, கில்லி) விளையாட்டு, விளையாடும் முறை ஞாபகமிருக்கிறதா? என சென்றவாரம் இணையத்தூதில் உரையாடியபோது நண்பரொருவர்,கேட்டார். என்ன திடீரென கிட்டிப்புள் விளையாட்டைப் பற்றி அக்கறையாக் கேட்கிறியள் என்ற கேள்வியோடு, உரையாடல் தொடர்ந்த போது, விளையாட்டு முறைகள் சற்று ஞாபகமற்றுப் போயிருந்தது எனக்கும் உறைத்தது.

ஒருகாலத்தில், நாளும் பொழுதும் இந்த விளையாட்டுக்களோடு திரிந்த நமக்கே, வாழ்நிலைச்சூழலின் சறுக்கலில் அவை நினைவற்றுப்போயுள்ளன. அப்படியாயின், போரும் வாழ்வுமாகிப்போன, எங்கள் புலத்திலோ, அந்நியச்சூழலே நம் வாழ்தளம் என்றாகிப்போன புலம்பெயர்சூழலிலோ, வாழுகின்ற நம் இளைய தலைமுறைக்கு, இந்த விளையாட்டுக்கள் பற்றி ஏதேனும் தெரிய முடியுமா?

இப்படியொரு கேள்வி இப்புலம்பெயர் சூழலில் எழுந்தபோதுதான், தொடக்கக் கேள்வி என்னையும் நோக்கி வந்தது. எதுவுமற்ற ஏதிலிகளாக, வேதனைகளைச்சுமந்த வண்ணம், இருப்பினை எண்ணிக் கொண்டு, புலம்பெயர்ந்த வேளையிலோ, பின் வந்த வெறுமை மிகு வாழ்க்கைக் காலங்களிலோ விளையாட்டுக்கள் எங்கள் மனதை நிறைத்திருக்கவில்லை. அதனால் அவை மறக்கப்படுமாறுமாயிற்று. வறண்டுபோன எங்கள் வாழ்வியலில், புது வசந்தங்களென் எங்கள் பிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் ஓடியாடி விளையாடும் தருணங்கள் வந்தபோது, எங்கள் மனங்களிலும், இளமைக்கால ஞாபகங்கள் எழுந்து உட்கார்ந்தன. வீதிகளிலும், விளையாட்டுத்திடல்களிலும், நாங்கள் ஆடிய விளையாட்டுக்கள் ஞாபகத்திற்கு வந்தன. கூடவே, இவைபற்றியும் எங்கள் செல்வங்களுக்கு சொல்லிக்கொடுக்கவோ அல்லது சொல்லி வைக்கவோ வேண்டுமல்லோ என்ற எண்ணங்கள் இப்போ எல்லாத் திக்குகளிலும், எழும்பத் தொடங்கியுள்ளன.

இப்படியான இன்றைய காலச் சூழலில், சுவிற்சர்லாந்து தமிழ்மன்றத்தின் விளையாட்டுத்துறை, தனது பத்தாம் ஆண்டு நிறைவை மலர்வெளியிட்டு நினைவுப்படுத்த விரும்பியபோது, மேற்சொன்ன எண்ணங்கள் வீச்சாக எழ,வாழ்த்துச் செய்திகளோடல்லாது, வளமான தமிழர் நம் விளையாட்டுக்கள் குறித்த சங்கதிகள் பலவற்றுடன், வீச்சு என்ற விளையாட்டுச்சிறப்பிதழ் மலர்ந்துள்ளது. அருமையான வடிவமைப்பில், அழகான படங்களுடன், அருமையான கட்டுரைகளும் அடங்கிய வீச்சு, உண்மையில் நம் விளையாட்டுத்துறைசார் வெளியீடுகளில் பெருவீச்சாகவே உள்ளது.

விளையாட்டிலிருந்து வினைதீர்க்கும் மருத்துவம்வரை ஒரு அஞ்சலோட்டம் எனும், ஏ.ஜி. யோகராஜாவின் நீளமான கட்டுரை, வெறுமனே ஒரு கட்டுரை எனச் சொல்லிவிட முடியாது. எங்கள் சமூகத்தின் வாழ்வியல் கூறொன்றினை விரிவாகப் பார்க்கக் கூடிய புத்தகமொன்றின் முதல்வாசிப்பு எனச் சொல்லத்தக்கது. புலம்பெயர் சூழலில் தொடங்கி, ஆன்மீகம்வரை அஞ்சலோட்மெனச் செல்லும் கட்டுரையில், எத்தனை எத்தனை எண்ணங்கள், சான்றுகள், நோக்குகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து, பொன். சுந்தரராஜன் எழுதியுள்ள, தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒரு ஆய்வுக்கான அறிமுகம் எனும் கட்டுரை, எங்கள் பாரம்பரிய விளையாட்டுக் பலவற்றையும், சுருக்கக் குறிப்பில் அறிமுகம் செய்து வைக்கிறது. கிளித்தட்டு,கிட்டிப் புள் அடித்தல், பட்டம் விடுதல், படகோட்டல், மாட்டுவண்டில் சவாரி,போர்த்தேங்காய் அடித்தல், காளை அடக்குதல், பேய்பந்து அடித்தல், காயா, பழமா, சடுகுடு விளையாட்டு, புலியும் ஆடும், நொண்டி அடித்தல் அல்லது கெந்துதல், பகலாட்ட தாகம், என்உலக்கை குத்து, பச்சைக்குதிரை, அம்மானை, கீச்சுமாச்சுத் தம்பலம், தட்டாங்கல் என கட்டுரையில் பல விளையாட்டுகள் வந்து போகின்றன. இவை மட்டுமல்லாது, சுவிற்சர்லாந்தில் விளையாடப்படும் கோடைகால, குளிர்கால வினளயாட்டுக்கள் என்பன பற்றிய மதுரா குணசிங்கத்தின், சுவிஸ் சாரல்களில் எனும் கட்டுரையும், வேறுசில கட்டுரைகளும், கவிதைகளும், உள்ளடக்கி வீச்சு வந்திருக்கிறது.

புலம்பெயர் சூழலில் இத்தகைய முயற்சிகள், அவசியமானது ஆரோக்கியமானது. ஆனால் இத்தகைய முயற்சிகளின் வெற்றியும், உந்துதலும் பெற வேண்டுமாயின், நாமும், நமது இளைய தலைமுறையும், இவற்றை வாசிக்கவும், சுவாசிக்கவும் வேண்டும். அதுவே இத்தகைய பணிகளில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும், உயர்வுக்கும் கொண்டு செல்லும். பயன்பெறவும் தரவும் விரும்புவோர், சுவிஸ், லுசேர்ண் தமிழமன்றத்துடன் தொடர்பு கொள்ளலாம் .






படங்களுக்கான நன்றிகள்: சுவிஸ் முரசம், சந்திரவதனா செல்வக்குமாரன்.

Thursday, June 14, 2007

வெல்க தமிழ்

படம்: நன்றி "புதினம்"

வெல்க தமிழ் பேரணிநிகழ்வும் சில அவதானிப்புக்களும்.

11.06.2007 திங்கள் கிழமை, சுவிற்சர்லாந்து ஜெனிவாவில் ஐ.நா சபை நோக்கி, புலம்பெயர்தமிழர்களால் "வெல்க தமிழ்" எனும் அடையாளத்தோடு, நடாத்தப்பட்ட பேரணி, அரங்க நிகழ்வுகள் குறித்த, நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியை ஐரோப்பியத் தமிழ்வானொலி, ஆவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவற்றுக்காக தொகுத்து வழங்கச் சென்றிருந்தேன். என் அவதானிப்பில் சில..

அன்று முழுவதும், சுவிற்சர்லாந்தின் எல்லாப்பகுதிகளிலும் அடைமழைபெய்து கொண்டிருந்த போதும் நன்பகல் முன்பதாகவே பலர், பேரணி ஆரம்பமாகிய மைதானத்தில் குவியத் தொடங்கினார்கள்.

நமது குடும்ப உறவுகள் ஐம்பது பேருடன் ஒரு வைபவத்தை நிகழ்த்துவதாயின் கூட நாம் படும் சிரமமே சொல்லி மாளாது. பல நாடுகளிலிருந்தும் வரும் முகந்தெரியா உறவுகளை, வரவேற்று உணவளித்து, நிகழ்வில் பங்கேற்கவைத்து, மீண்டும் வழியனுப்பி வைப்பது என்பது இலேசான காரியமல்ல. ஆனால் அதை இம்மியும் பிசகாமல் செய்த, அர்ப்பணிப்புமிக்க தொண்டு பணியாளர்களின் பணியும், அதை கட்டமைத்து வழிநடத்திய சுவிஸ் பணியகத்தின் திறமையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

ஏதிலிகளாக இந்நாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த எம்மவரை, சுயமற்ற சிலர் எள்ளி நகையாடினார்கள், இன்று சுயதொழில் முனைவர்களாக உயர்ந்துள்ள நம்மவர் பலர், நிகழ்ச்சிக்கு பல அனுசரனைகளை வழங்கியிருந்தது பெருமையாகவிருந்தது.

பிற்பகல் 2.00 மணிக்கு ஜெனிவா தொடரூந்துநிலையத்திற்கு அண்மையிலுள்ள பூங்காவில் ஆரம்பமாகிய பேரணி சுமார் 3.00 அளவில் ஐ.நா சபையை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த வேளையிலும், பேரணி ஆரம்பமாகிய இடத்தில் பேரணியில் மக்கள் இணைந்து கொண்டிருந்தார்களாம்.

எங்கள் எண்ணங்களை, துன்பங்களை, உலகின் கண்ணுக்கு ஒப்புவிக்க ஒருகாலத்தில் ஊடகம் எதுவுமில்லாதிருந்த நிலைமாறி, உலகம் எங்கெனும், ஒலி,ஒளிஅலைகளில் உணர்வுகளைக் கொண்டு செல்ல எங்கள் ஊடகங்கள் திரண்டிருந்தன. அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், புலிகளின் குரல், ஐரோப்பியத்தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவை ஒலிஅலை வழியாகவும், தரிசனம், ரீ.வி.ஐ ஆகிய தொலைக்காட்சிகள் ஒளி அலை வழியாகவும், உலகம் நிகழ்ச்சிகளைக் கருத்தாகவும், காட்சியாகவும் வெளிப்படுத்தின. இம்முறை இணைய ஊடகம் சார்ந்தும் செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.

பேரணியின் முன்னணியில் திரு. பழ.நெடுமாறன்ஐயா அவர்கள் மாறாத அதே மென்னகையோடு, ஐ.நாசபை வரை, கையில் தேசியத்தலைவரின் படந்தாங்கி நடந்தே வந்தார். ஐயா அவர்கள் உடல் நலம்குன்றியிருந்தபோது, புலத்தில் அவரது நலம் வேண்டி பிரார்த்தித்த ஒவ்வொரு தமிழனும், அகமகிழ்ந்திருப்பான். அதுபோன்றே ஐயா அவர்களும், ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்ததற்காக, இரண்டாண்டுகள் சிறைப்பட்ட துயரம், மறந்திருப்பார். அரங்க உரையில் அவரே சொன்னார்.

அரங்க நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் உரையாற்றியது, எங்கள் விடுதலைப்போராட்ட நியாயத்தினை சாட்சிப்படுத்துவதாக இருந்தது.

தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், தன் உரையில் பேரணியின் ஒழுங்கமைப்பை வியந்தார். சுவைபட மக்களிடம் செய்திகள் சொன்னார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்காவின் உறவினர், கலாநிதி, பிறையன் செனவிரட்னாவின் உரையில், சிறிலங்காவின் அரசியல் யதார்த்தம் தெரிந்தது. உலகத்தமிழர்களின் உறுதி எவராலும் கலைக்கப்படா முடியாது என்பதை தெளிவாகச் சொன்னார்.

நீண்ட தூரங்களிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து பிரயாணம் மேற்கொண்டு வந்த களைப்போ, தூறலாகத் தொடங்கிய மழை உரக்கப் பெய்யத் தொடங்கியபோதோ, உறுதியாக நின்ற மக்களின் மனத்திடம் மகத்தானது. அந்த மகிமைதானே, தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் முன்னெடுத்துச் செல்கிறது.











Wednesday, June 06, 2007

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..


மனிதம் மரித்த பூமியில் மடிந்துபோன மற்றுமிரு தொண்டர்களுக்கு அஞ்சலித்து.


பணி என்றால், அதற்கான ஒப்பந்த வரைவு ஒன்றிருக்கும். அதற்குட்பட்டதான செயலிருக்கும். ஆனால் தொண்டு என்பது முற்றுமுழுதான சேவைக்குட்பட்டது. தொண்டுப்பணியாளர்களுக்கு சில உதவிகள் கிடைக்கப்பெறுவதாயினும், அவர்கள் சேவை, வழங்கப்படும் உதவிகளால் மட்டுறுத்திவிட முடியாததது. மற்றவர்களது மனத்திடம் கலைந்துபோன ஒரு சூழலில், திடமான மனத்துடனும், திறந்த மனப்பாங்கினுடனும் செயலாற்றுபவர்கள் சேவையாளர்கள்.

தொற்று நோய்சூழலிலும், தொடரும் யுத்தப்பிரதேசங்களிலும், இயற்கை அழிவுகளின்போதும், இந்தப் பணியாளர்களின் பணிநேரமென்பது காலவரையற்றது. சுருங்கக் கருத்துக் கூறமுடியாதது. அப்படியான ஒரு அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களது பணி, ஒரு போராளியின் பணிக்கோ, இராணுவவீரனின் பணிக்கோ, சற்றும் குறைவில்லாதது.


அத்தகைய அர்ப்பணிப்பு மிக்கப் பணியாளர்களைப் பலிகொள்ளும் பயங்கரம் தொடருகின்ற நாடாக சிறிலங்கா முன்னேறுகிறது. போராளிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர், மதகுருமார்கள், எனத் தொடர்ந்த கொலைப்பயங்கரம், தொண்டுப்பணியாளர்கள் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. நினைக்கவே கேவலமாக இருக்கக் கூடிய இந்த இழிசெயலில் இதுவரை மூதூரில் பிரான்ஞ் தொண்டுநிறுவனப் பணியாளர்கள், புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கப்பணியாளர்களென தொடர்ந்து பலியாகியுள்ளார்கள்.


ஏறக்குறைய இந்தப்படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென தெரிந்திருக்கும் போதும், தெரியாதமாதிரி பாசாங்கு செய்யும் அரசு. அதற்குப் பச்சாதாபம் காட்டிக் கரங்கோர்க்கும் பார்வையாள பாத்திரம் வகிக்கும் பல்வேறுநாடுகள். பார்த்துக்கொண்டிருக்கும் நாங்கள். யாருக்கும் வலியில்லை.


யுத்தத்தின் பல்லிடுக்குகளில், இடுக்கிக்கொண்டதில் இடுப்பொடிந்து போன தாயொருத்தி, தன்னைத் தூக்கிச்சுமந்த அவனோ அவளோ அழிக்கப்பட்டசேதி கேட்டு அரண்டுபோவாள். அவளுக்கு வலிக்கும். தூக்கிவளர்த்த சொந்தச்சகோதரியும், பெற்றுமகிழ்ந்த அன்னையும், இந்தத்துன்பச் செய்தியில் துவண்டுபோவார்கள். அவர்களின் இழப்பில் வலிபடுபவர்களும், வதைபடுபவர்களும், இவர்களே. இனி..


மனிதநாகரித்தை மரிக்கச்செய்து, கிடப்பில் போட்ட தலைவர்கள், இரத்தம் தோய்ந்த கைகளோடு, எழுந்து நின்று கைகுலுக்கிக்கொள்வார்கள், கரங்கூப்பிக்கொள்வார்கள், அநியாயப்படுகொலையென அறிக்கைவிடுவார்கள். அஞ்சலித்துத் துக்கிப்பார்கள், துதிசொல்வார்கள். இறந்துபோன உயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகையில் விலைபேசுவார்கள். மனிதநாகரீகத்தை மறைத்திட்ட பேர்வழிகளை, விசாரணைக்குழுவைத்து விரட்டிப்பிடிப்போமென்பார்கள். விரைவில் மறந்து போவார்கள். மறந்தும், முக ஆடியில் தம் முகநாடி பாக்கமாட்டார்கள்..




Thursday, May 31, 2007

வெட்கம் கெட்டவர்கள்

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் சிறிலங்கா அரசின் சூழ்ச்சியில் எரிந்து சாம்பலாகிப் போன யாழ்ப்பாண நூலகம் பற்றி, சோமியின் காற்றோடு வலைப்பதிவில் அப்பால் தமிழ் இனையத்தளத்துக்காக செளம்யன் எழுதிய கட்டுரை, பல உண்மைகளையும், செய்திகளையும் பேசுகிறது. அதிலே கல்வியறிவு மிக்க ஈழத்தமிழ் சமூகம் மீது மறைமுகமாக மேற்கொள்ளபட்ட அறிவியல் அழிப்பு என்ற செய்தி முக்கியமாகச் சுட்டப்படிருக்கிறது.

தமிழ்மக்கள் மீது சிங்களப்பேரினவாதம், இனவாத யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகளை உற்று நோக்கிக் கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தமிழ்சமூகத்தின் அறிவியல் மீது, உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் திட்டமிட்டு மேற்கொள்ளும், அழிப்பு நடவடிக்கை தெள்ளனெத் தெரியும்.

வடஇலங்கையில், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்த போதும், பல்வேறு கிராமங்களிலும் இருக்கும் சனசமுக நிலையங்கள் பல, பல் வேறு சந்தர்ப்பங்களிலும் இராணுவ நடவடிக்கைகளின்போது பாதிப்புக்குள்ளானது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும், ஞாபகத்திலிருப்பதுமானது, வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு சனசமுகநிலையக் கட்டிடத்திற்குள் வைத்து, இராணுவச்சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது. அந்தகட்டிடத்தின் சூழலிலே சுற்றி வந்தவர்களின் குருதி, அந்தக் கட்டித்தின் சுவர்களிலும், படிக்கும் மேசைகளிலும், கொட்டிக்கிடந்தது.

எத்தனை பாடசாலைகள் மீது தாக்குதல் செய்திருக்கின்றார்கள். எத்தனை கல்விக்கூடங்களை இராணுவமுகாம்களாக மாற்றியிருக்கின்றார்கள். நாகர் கோவிலில் பாடசாலை மீதும், பாடசாலை மாணவர்கள் மீதும், நடாத்தப்பட்ட விமானக்குண்டுவீச்சு, செஞ்சோலையில் பள்ளிமாணவர்கள் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதல், என்பவையெல்லாம் சொல்லுகின்ற செய்தி என்ன? இவற்றின் பின்னே மறைந்திருக்கின்ற நோக்கு, அறிவியல் அழிப்பென்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும். ஏன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முகிழ்வே, தமிழ் இளைஞர்களின் அறிவியல் தரப்டுத்தலில் இருந்துதானே ஆரம்பமாகியது.

இப்படித் திட்டமிட்ட வகையில், அறிவியல் படுகொலை செய்து வரும் அரசும், அது சார்ந்த தலைவர்களும், உலகப்பரப்பில் தம்மை நாகரீக மனிதர்களாகவும், தமது அரசினைத் தார்மீக அரசாகவும் பறைசாற்றிக்கொள்வதையும், இதற்கு அகத்திலும் புறத்திலும், வக்காலத்து வாங்குபவர்களையும், வளங்கள் வழங்குபவர்களையும், என்னவென்று சொல்வது? வெட்கம் கெட்டவர்கள்.