Thursday, June 14, 2007

வெல்க தமிழ்

படம்: நன்றி "புதினம்"

வெல்க தமிழ் பேரணிநிகழ்வும் சில அவதானிப்புக்களும்.

11.06.2007 திங்கள் கிழமை, சுவிற்சர்லாந்து ஜெனிவாவில் ஐ.நா சபை நோக்கி, புலம்பெயர்தமிழர்களால் "வெல்க தமிழ்" எனும் அடையாளத்தோடு, நடாத்தப்பட்ட பேரணி, அரங்க நிகழ்வுகள் குறித்த, நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியை ஐரோப்பியத் தமிழ்வானொலி, ஆவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவற்றுக்காக தொகுத்து வழங்கச் சென்றிருந்தேன். என் அவதானிப்பில் சில..

அன்று முழுவதும், சுவிற்சர்லாந்தின் எல்லாப்பகுதிகளிலும் அடைமழைபெய்து கொண்டிருந்த போதும் நன்பகல் முன்பதாகவே பலர், பேரணி ஆரம்பமாகிய மைதானத்தில் குவியத் தொடங்கினார்கள்.

நமது குடும்ப உறவுகள் ஐம்பது பேருடன் ஒரு வைபவத்தை நிகழ்த்துவதாயின் கூட நாம் படும் சிரமமே சொல்லி மாளாது. பல நாடுகளிலிருந்தும் வரும் முகந்தெரியா உறவுகளை, வரவேற்று உணவளித்து, நிகழ்வில் பங்கேற்கவைத்து, மீண்டும் வழியனுப்பி வைப்பது என்பது இலேசான காரியமல்ல. ஆனால் அதை இம்மியும் பிசகாமல் செய்த, அர்ப்பணிப்புமிக்க தொண்டு பணியாளர்களின் பணியும், அதை கட்டமைத்து வழிநடத்திய சுவிஸ் பணியகத்தின் திறமையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

ஏதிலிகளாக இந்நாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த எம்மவரை, சுயமற்ற சிலர் எள்ளி நகையாடினார்கள், இன்று சுயதொழில் முனைவர்களாக உயர்ந்துள்ள நம்மவர் பலர், நிகழ்ச்சிக்கு பல அனுசரனைகளை வழங்கியிருந்தது பெருமையாகவிருந்தது.

பிற்பகல் 2.00 மணிக்கு ஜெனிவா தொடரூந்துநிலையத்திற்கு அண்மையிலுள்ள பூங்காவில் ஆரம்பமாகிய பேரணி சுமார் 3.00 அளவில் ஐ.நா சபையை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த வேளையிலும், பேரணி ஆரம்பமாகிய இடத்தில் பேரணியில் மக்கள் இணைந்து கொண்டிருந்தார்களாம்.

எங்கள் எண்ணங்களை, துன்பங்களை, உலகின் கண்ணுக்கு ஒப்புவிக்க ஒருகாலத்தில் ஊடகம் எதுவுமில்லாதிருந்த நிலைமாறி, உலகம் எங்கெனும், ஒலி,ஒளிஅலைகளில் உணர்வுகளைக் கொண்டு செல்ல எங்கள் ஊடகங்கள் திரண்டிருந்தன. அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், புலிகளின் குரல், ஐரோப்பியத்தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவை ஒலிஅலை வழியாகவும், தரிசனம், ரீ.வி.ஐ ஆகிய தொலைக்காட்சிகள் ஒளி அலை வழியாகவும், உலகம் நிகழ்ச்சிகளைக் கருத்தாகவும், காட்சியாகவும் வெளிப்படுத்தின. இம்முறை இணைய ஊடகம் சார்ந்தும் செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.

பேரணியின் முன்னணியில் திரு. பழ.நெடுமாறன்ஐயா அவர்கள் மாறாத அதே மென்னகையோடு, ஐ.நாசபை வரை, கையில் தேசியத்தலைவரின் படந்தாங்கி நடந்தே வந்தார். ஐயா அவர்கள் உடல் நலம்குன்றியிருந்தபோது, புலத்தில் அவரது நலம் வேண்டி பிரார்த்தித்த ஒவ்வொரு தமிழனும், அகமகிழ்ந்திருப்பான். அதுபோன்றே ஐயா அவர்களும், ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்ததற்காக, இரண்டாண்டுகள் சிறைப்பட்ட துயரம், மறந்திருப்பார். அரங்க உரையில் அவரே சொன்னார்.

அரங்க நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் உரையாற்றியது, எங்கள் விடுதலைப்போராட்ட நியாயத்தினை சாட்சிப்படுத்துவதாக இருந்தது.

தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், தன் உரையில் பேரணியின் ஒழுங்கமைப்பை வியந்தார். சுவைபட மக்களிடம் செய்திகள் சொன்னார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்காவின் உறவினர், கலாநிதி, பிறையன் செனவிரட்னாவின் உரையில், சிறிலங்காவின் அரசியல் யதார்த்தம் தெரிந்தது. உலகத்தமிழர்களின் உறுதி எவராலும் கலைக்கப்படா முடியாது என்பதை தெளிவாகச் சொன்னார்.

நீண்ட தூரங்களிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து பிரயாணம் மேற்கொண்டு வந்த களைப்போ, தூறலாகத் தொடங்கிய மழை உரக்கப் பெய்யத் தொடங்கியபோதோ, உறுதியாக நின்ற மக்களின் மனத்திடம் மகத்தானது. அந்த மகிமைதானே, தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் முன்னெடுத்துச் செல்கிறது.











Wednesday, June 06, 2007

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..


மனிதம் மரித்த பூமியில் மடிந்துபோன மற்றுமிரு தொண்டர்களுக்கு அஞ்சலித்து.


பணி என்றால், அதற்கான ஒப்பந்த வரைவு ஒன்றிருக்கும். அதற்குட்பட்டதான செயலிருக்கும். ஆனால் தொண்டு என்பது முற்றுமுழுதான சேவைக்குட்பட்டது. தொண்டுப்பணியாளர்களுக்கு சில உதவிகள் கிடைக்கப்பெறுவதாயினும், அவர்கள் சேவை, வழங்கப்படும் உதவிகளால் மட்டுறுத்திவிட முடியாததது. மற்றவர்களது மனத்திடம் கலைந்துபோன ஒரு சூழலில், திடமான மனத்துடனும், திறந்த மனப்பாங்கினுடனும் செயலாற்றுபவர்கள் சேவையாளர்கள்.

தொற்று நோய்சூழலிலும், தொடரும் யுத்தப்பிரதேசங்களிலும், இயற்கை அழிவுகளின்போதும், இந்தப் பணியாளர்களின் பணிநேரமென்பது காலவரையற்றது. சுருங்கக் கருத்துக் கூறமுடியாதது. அப்படியான ஒரு அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களது பணி, ஒரு போராளியின் பணிக்கோ, இராணுவவீரனின் பணிக்கோ, சற்றும் குறைவில்லாதது.


அத்தகைய அர்ப்பணிப்பு மிக்கப் பணியாளர்களைப் பலிகொள்ளும் பயங்கரம் தொடருகின்ற நாடாக சிறிலங்கா முன்னேறுகிறது. போராளிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர், மதகுருமார்கள், எனத் தொடர்ந்த கொலைப்பயங்கரம், தொண்டுப்பணியாளர்கள் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. நினைக்கவே கேவலமாக இருக்கக் கூடிய இந்த இழிசெயலில் இதுவரை மூதூரில் பிரான்ஞ் தொண்டுநிறுவனப் பணியாளர்கள், புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கப்பணியாளர்களென தொடர்ந்து பலியாகியுள்ளார்கள்.


ஏறக்குறைய இந்தப்படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென தெரிந்திருக்கும் போதும், தெரியாதமாதிரி பாசாங்கு செய்யும் அரசு. அதற்குப் பச்சாதாபம் காட்டிக் கரங்கோர்க்கும் பார்வையாள பாத்திரம் வகிக்கும் பல்வேறுநாடுகள். பார்த்துக்கொண்டிருக்கும் நாங்கள். யாருக்கும் வலியில்லை.


யுத்தத்தின் பல்லிடுக்குகளில், இடுக்கிக்கொண்டதில் இடுப்பொடிந்து போன தாயொருத்தி, தன்னைத் தூக்கிச்சுமந்த அவனோ அவளோ அழிக்கப்பட்டசேதி கேட்டு அரண்டுபோவாள். அவளுக்கு வலிக்கும். தூக்கிவளர்த்த சொந்தச்சகோதரியும், பெற்றுமகிழ்ந்த அன்னையும், இந்தத்துன்பச் செய்தியில் துவண்டுபோவார்கள். அவர்களின் இழப்பில் வலிபடுபவர்களும், வதைபடுபவர்களும், இவர்களே. இனி..


மனிதநாகரித்தை மரிக்கச்செய்து, கிடப்பில் போட்ட தலைவர்கள், இரத்தம் தோய்ந்த கைகளோடு, எழுந்து நின்று கைகுலுக்கிக்கொள்வார்கள், கரங்கூப்பிக்கொள்வார்கள், அநியாயப்படுகொலையென அறிக்கைவிடுவார்கள். அஞ்சலித்துத் துக்கிப்பார்கள், துதிசொல்வார்கள். இறந்துபோன உயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகையில் விலைபேசுவார்கள். மனிதநாகரீகத்தை மறைத்திட்ட பேர்வழிகளை, விசாரணைக்குழுவைத்து விரட்டிப்பிடிப்போமென்பார்கள். விரைவில் மறந்து போவார்கள். மறந்தும், முக ஆடியில் தம் முகநாடி பாக்கமாட்டார்கள்..




Thursday, May 31, 2007

வெட்கம் கெட்டவர்கள்

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் சிறிலங்கா அரசின் சூழ்ச்சியில் எரிந்து சாம்பலாகிப் போன யாழ்ப்பாண நூலகம் பற்றி, சோமியின் காற்றோடு வலைப்பதிவில் அப்பால் தமிழ் இனையத்தளத்துக்காக செளம்யன் எழுதிய கட்டுரை, பல உண்மைகளையும், செய்திகளையும் பேசுகிறது. அதிலே கல்வியறிவு மிக்க ஈழத்தமிழ் சமூகம் மீது மறைமுகமாக மேற்கொள்ளபட்ட அறிவியல் அழிப்பு என்ற செய்தி முக்கியமாகச் சுட்டப்படிருக்கிறது.

தமிழ்மக்கள் மீது சிங்களப்பேரினவாதம், இனவாத யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகளை உற்று நோக்கிக் கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தமிழ்சமூகத்தின் அறிவியல் மீது, உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் திட்டமிட்டு மேற்கொள்ளும், அழிப்பு நடவடிக்கை தெள்ளனெத் தெரியும்.

வடஇலங்கையில், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்த போதும், பல்வேறு கிராமங்களிலும் இருக்கும் சனசமுக நிலையங்கள் பல, பல் வேறு சந்தர்ப்பங்களிலும் இராணுவ நடவடிக்கைகளின்போது பாதிப்புக்குள்ளானது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும், ஞாபகத்திலிருப்பதுமானது, வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு சனசமுகநிலையக் கட்டிடத்திற்குள் வைத்து, இராணுவச்சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது. அந்தகட்டிடத்தின் சூழலிலே சுற்றி வந்தவர்களின் குருதி, அந்தக் கட்டித்தின் சுவர்களிலும், படிக்கும் மேசைகளிலும், கொட்டிக்கிடந்தது.

எத்தனை பாடசாலைகள் மீது தாக்குதல் செய்திருக்கின்றார்கள். எத்தனை கல்விக்கூடங்களை இராணுவமுகாம்களாக மாற்றியிருக்கின்றார்கள். நாகர் கோவிலில் பாடசாலை மீதும், பாடசாலை மாணவர்கள் மீதும், நடாத்தப்பட்ட விமானக்குண்டுவீச்சு, செஞ்சோலையில் பள்ளிமாணவர்கள் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதல், என்பவையெல்லாம் சொல்லுகின்ற செய்தி என்ன? இவற்றின் பின்னே மறைந்திருக்கின்ற நோக்கு, அறிவியல் அழிப்பென்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும். ஏன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முகிழ்வே, தமிழ் இளைஞர்களின் அறிவியல் தரப்டுத்தலில் இருந்துதானே ஆரம்பமாகியது.

இப்படித் திட்டமிட்ட வகையில், அறிவியல் படுகொலை செய்து வரும் அரசும், அது சார்ந்த தலைவர்களும், உலகப்பரப்பில் தம்மை நாகரீக மனிதர்களாகவும், தமது அரசினைத் தார்மீக அரசாகவும் பறைசாற்றிக்கொள்வதையும், இதற்கு அகத்திலும் புறத்திலும், வக்காலத்து வாங்குபவர்களையும், வளங்கள் வழங்குபவர்களையும், என்னவென்று சொல்வது? வெட்கம் கெட்டவர்கள்.

Tuesday, May 15, 2007

Made in Switzerland.

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 2

இந்தத் தொடரில் , பல்வேறு தலைப்புக்களலிலும் இங்குள்ள வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளையும் பார்க்கலாம் என எண்ணிருப்பதால், அத்தியாயங்களுக்கான தலைப்பை பிரதான தலைப்பாகவும், தொடரின் பகுதிவரிசையை உபதலைப்பாகவும், சுவிற்சர்லாந்து எனும் வகைப்பிரிவுக்குள்ளாகவும், இத்தொடரினை எழுதுகின்றேன். வாசிப்பவர்கள் குழப்பமற்று வாசிப்பதற்கான சிறு வழிகாட்டுதலிது.






ஐரோப்பாவிலும் சரி, அனைத்துலகிலும் சரி, சந்தைப்படுத்தலில், Made in Switzerland, Swiss Quality, என்பவற்றுக்கான தரமும், விலையும், தனித்துவமானது. அவை குறித்து விபரமாக, பின்னர் பார்ப்போம். இந்தப் பகுதியில், தனது நாட்டுக்கான பிரசைகளை எவ்விதம் திட்டமிட்டு உருவாக்கிறது என்பதை பார்க்கவிருக்கிறோம். இவைகளில் பல நடைமுறைகள், ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் நடைமுறையில் இருப்பவைதான். இந்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இவை புதிதாகவோ, அன்றிப் புதினமாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் ஏனைய பலபகுதிகளில் வாழ்பவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சுவாரசியத்துக்காகவும் சற்று விரிவாகக் குறிப்பிடுகின்றேன்....

காரில் வெளியே சென்றுகொண்டிருந்தோம். ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி வந்தது. எங்கள் சாலையில் சிகப்பு வண்ணச் சைகைவிளக்கு. அதனால் வாகனங்கள் வரிசையாக நின்றன. பின் ஆசனத்திலிருந்த என் மகள், காரின் இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தழுதாள். மனைவிக்கு என்ன காரணம் எனப் புரியவில்லை. நான் புரிந்து , உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு காரணத்தை மனைவிக்குச் சொன்னேன். அவரும் அதுவரை அதனைக் கவனினக்கவில்லை. அது ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி என்பதால், சைகைவிளக்கு அணைந்து எரிய, கூடிய நேரம் தேவை. அந்த நேரத்தில் அங்கே நிற்கும் வாகனங்களின் இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்குமாயின், அவற்றிலிருந்து வரும் புகையினால், சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதற்காக, அப்படியான பெருஞ்சந்திகளில், இயந்திரத்தை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்புப் பலகை கண்டுகொண்டதனால்தான் அவள், இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு வயது ஆறு. பாலர் வகுப்புக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள்.



பாலர்வகுப்புக்களிலேயே, சிறிது சிறிதாக நடைமுறை வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பல்துலக்குவதிலிருந்து, உணவு உட்கொள்ளும் முறைமை, அதற்கான ஆயத்தம் செய்தல்,(மேசைஒழுங்கு செய்தல். கரண்டி எந்தப்பக்கம், கத்தி எந்தப்பக்கம், சாப்பாட்டுத்தட்டு எங்கே என்பனபோன்றவை) வீதியால் நடப்பது, வீதியை கடப்பது, என்றுபல விடயங்கள். இதைநேரில் பார்க்காதவர்களுக்கு சற்றுமிகுதியாகச் சொல்வது போல் கூடத்தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.

இந்தியாவில் ஒருமுறை காரில் பயனம் செய்துகொண்டிருந்த போது, வெற்றுபிஸ்கட்பெட்டி, முடிந்த தண்ணீர்போத்தல் என்பவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் நான் சேகரிப்பதைப்பார்த்த வாகனச்சாரதி, சிரித்தபடி " தூக்கி வெளியில போடுங்க சார்.." என்று சொன்னது மட்டுமல்லாமல், ஓடிக்கொண்டிருந்த வாகனத்திற்கு வெளியே சாலையில், அக்கழிவுப்பொருட்களை எறிந்துவிட்டுத் திருப்தியானார். ஆனால் இதுவென்னவோ, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் என்று சொல்லமாட்டேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கூட இன்றும் காணக்கூடிய காட்சிதான். ஆனால் சுவிற்சர்லாந்தில் தெருக்களும் நகரங்களும் துடைத்த வைத்ததுபோல் காணப்படுவதற்கு, தன்நாட்டுப்பிரசைகளை இளவயதிலேயே பழக்கப்படுத்திக் கொள்கிறது.

பாலர் வகுப்புப் பிள்ளைகளாகவிருக்கும் போதே, சிலநாட்களில் வீட்டிலிருந்து வெற்றுப்பெட்டி, வெற்றுப்பிளாஷ்டிக் போத்தல், வெற்றுத்தகர டப்பா, என்பவற்றைப் பிள்ளைகளைக் கொண்டுவரச்சொல்லும் ஆசிரியர், அன்றையதினங்களில், பிள்ளைகளை அப்பொருட்களுடன் வெளியே அழைத்துச்சென்று, எங்கே எந்தக் கழிவுப்பொருளைப் போடவேண்டுமென்பதைக் காட்டிக் கொடுக்கின்றார். சிறுவயதில் பழகும் பழக்கம் தொடர்ந்து அவர்களிடம் வருகிறது. நாடும் துப்பரவாக இருக்கிறது. ஏதாவது ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்த மைதானங்கள், தெருக்கள், மண்டபங்கள், என்பவற்றில் சேரும் கழிவப்பொருட்கள், மறுநாள் அப்படியொரு நிகழ்வு நடந்த சுவடேதெரியாதவாறு துப்பரவு செய்யப்பட்டுவிடும்.

வீட்டினுள் சேரும் கழிவுப்பொருட்களைத் தனித்தனியாக, அதற்குரிய இடங்களில் சேர்க்கவேண்டும். தவறும்பட்சத்தில் அதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையினைக்கூட சில மாநிலஅரசுகள் வைத்துள்ளன. வெளிநாட்டவர்கள் சுவிஸ் பிரசாஉரிமைகோரி விண்ணப்பிக்கும் போது, சில இடங்களில் அவர்கள் வீசும் கழிவுப்பைகளின் ஒழுங்கு, கண்ணகாணிக்கப்படுவதாகக் கூட ஒரு கதையுண்டு.



பிள்ளைகள் பாடசாலை செல்லத் தொடங்கியதும், வீதியில் சைக்கிள்ஓட்டும் முறை, போதைவஸ்துக் கெடுதல், சுற்றாடல்பாதுகாப்பு, உனது கிராமம், உனது நகரம், உனது மாநிலம், உனது நாடு, எனப்படிப்டியாக அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. சகமனிதனைப்புரிந்துகொள்ளலுக்கான ஆரம்ப நிலைவரை இந்தத் தொடர் உருவாக்கம், முதல்நிலைபள்ளிக்காலங்களில் நடந்தேறும்.
இந்த உருவாக்கத்தின் முதுநிலையை முதலில் கண்டபோது மேலும் வியப்புற்றேன்.

தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்தபோது, ஒரு திங்கட்கிழமை காலை வேலைக்குச் சென்றிருந்தேன். திங்கட்கிழமை காலைகள் எப்போதும் பரபரப்பானவை. வேலைகள் நிரம்பிக்கிடக்கும். பரபரப்பாகத் திரியும், என் பணிப்பகுதி மேலாளர் மிகுந்த அமைதியோடு செயற்பட்டுக்கொண்டிருந்தார். உதவி மேலாளர் என்னருகே வந்தபோது மெதுவாகச் சொன்னார், மேலாளரின் தாயார் சனிக்கிழமை மாலை இறந்துவிட்டார். இன்று மதியம் நல்லடக்கம் என்றார். அப்படியாயின் அவர் செல்லவில்லையா? பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் நல்லடக்கம். அவர் பன்னிரண்டு மணிக்குச் சென்றுவிடுவார் என்று. கட்சித்தலைவன் இறந்ததற்காக, கணக்கற்றவர்களை இறக்கப்பண்ணும் கலாச்சாரத்தில் பழக்கப்பட்ட எங்களுக்கு இது அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றலாம். ஆனால் ஒருநாளின் முக்கியத்துவம், பெறுமதி, உண்மையாக உணரப்பட்டதால் இது சாதாரணமாக இங்கு சாத்தியமாகிறது. இந்த உருவாக்கத்துக்கு கல்விபயில்காலக் கற்கைகள் மட்டும் காரணம் என்று சொல்லிட முடியாதாயினும், தொடக்கம் அதுவே.

இது ஒருவகை மூளைச்சலவை என்று சொல்லி வாதிடலாம். இதுகுறித்து வேறுபல விமர்சனங்களும் வைக்கலாம். ஆனால் சுவிஸ் என்ற வளம்குறைந்த ஒருபிரதேசம், வளம்பொருந்திய நாடாக நிமிர்திருப்பதற்கு, இத்தகைய உற்பத்தியும் ஒரு காரணம்.