Wednesday, July 22, 2009

சிந்தாநதியை பிரபாகரனுக்குப் பிடிக்கும்.
" சிந்தா! உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்.."

" என்னங்க திடீரென இப்பிடிச் சொல்றீங்க.."
" உண்மை சிந்தா! உங்கள அவர் சந்தித்தால், நிச்சயம் அவருக்கு உங்களைப் பிடிக்கும்.."

பதிவர் சிந்தாநதிக்கும் எனக்குமிடையில் நடந்த உரையாடல் ஒன்றில் பரிமாறப்பட்ட வசனங்கள் இவை. இன்று, சிந்தாவும் இல்லை, பிரபாகரனும் இல்லை.
..........................................................................................

கடந்த வாரங்களில் இணையத் தொடர்பற்ற இடத்தில் நின்றதால் உடன் தெரியவில்லை. நேற்றிரவு மீளவும் இணையத் தொடர்பில் வந்த போதே இணையவழி கிடைத்த நண்பனை இழந்திருக்கின்றேன் என்பது தெரிந்தது. வலித்தது. வலித்துக் களைத்துப் போன மனதில் மறுபடியும் ஒரு மரணத்தின் வலி.
சிந்தாநதியின் சொந்தப் பெயர் என்ன?, அவரது வயதென்ன..? அவரது படம் உண்டா..? அவரைச் சந்தித்திருக்கின்றீர்களா..? என பதிவுலக நண்பர்களைக் கேட்டால், அவை அத்தனைக்கும் அநேகம் பேர் தரும் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அத்தனை பேருடனும் அருகிருந்தவர் போல் இணைய வழி இணைந்திருந்தார் . அதுதான் சிந்தாநதி.

சிந்தாநதி தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்த போதுதான் தொடர்பு கொண்டேன். ' இணையத்தில் இன்பத் தமிழ் ' வாராந்திர வானொலி நிகழ்ச்சி தொடங்கியபோது, வலைப்பதிவுகள் பற்றிச் செவ்விகாண்பதற்குப் பொருத்தமான நபராக, மதி கந்தசாமி எனக்குச் சுட்டி தந்தது சிந்தாநதியை. அந்த ஒலிப்பதிவுக்காகத் தான் முதலில் தொடர்பு கொண்டேன். அன்று தொடங்கி, கடந்த சில மாதங்களாக இணையத் தொடர்பில் அவர் இல்லாதிருக்கும் வரை அருகிருந்தோம்.

இணையத்தின் மூலம் நான் அதிகம் பேசிய நண்பர் அவர் மட்டும்தான். ஐ.டி துறையில் பட்டம் பெற்றவராக அவரை நானறியேன். ஆனால் அவருள் ஐ.டி தொழில் நுட்பம் அடங்கிக் கிடந்தது. தேடலில் கணினி கற்ற அவரிடம், தேங்கிக் கிடந்தது கணினித் தொழில் நுட்பம். அதைவிட மிகுதியாகவிருந்தது அவரது தன்னடக்கம்.

அவரைப் பற்றி காசி அவர்கள் நினைவு கூர்கையில், தேனி உமரும், தேன் கூடு சாகரனும் இணைந்த கலவை சிந்தாநதி எனக் குறிப்பிடுகின்றார். உண்மையும் அதுதான். நுட்பத் தகவல்களை வலைப்பதிவுலகில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதின் தொடக்கப் புள்ளி என்று கூடச் சொல்லலாம்.

கணினி, இணையம், என்பதற்கப்பாலும், பன்முகத் திறமை மிக்கவராக சிந்தாவைக் காண முடிந்தது. ஈழத்து அரசியல் யதார்த்தம் குறித்து சரிவரத் தெரிந்த பதிவுல நண்பர்களின் எண்ணிக்கையை அடக்கிவிட இரு கைவிரல்கள் அதிகமென்பேன். ஆனால் அந்த எண்ணிக்கைக்குள் தவிர்க்கப்பட முடியாதவராக சிந்தா இருந்தார்.

செய்தியாளனாக, கணனிச் சித்திரம் வரைபவராக (சாகரனுக்கு அஞ்சலி செலுத்த "சாகர சங்கமம்" ஒலிப்பதிவு செய்த போது, ஒரு நிமிடத்தில் முகப்புப் படம் செய்து தந்தார்) , இசை ரசிகராக, எனப் பலவிதமாய் பரிமளித்த அவர் , எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல நட்புப் பாராட்டுபவராக இருந்தார். அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் நான் கண்ட சிறப்பு சுயமரியாதை மிக்கவராக இருந்தார் என்பதே. அவருடன் பழகிய பலருக்கும் அவர் ஒரு ஊனமுற்றவர் என்பது நீண்ட காலத்தின் பின்பே தெரிய வந்திருக்கும். தன்மீது மற்றவர் கழிவிரக்கம் கொள்ளக் கூடாதென்னும் சுய மரியாதையின் நிமித்தமே அதனை அவர் வெளிப்படுத்துவதில்லை என்பதை அறிந்து கொண்ட தினத்திலேதான்
" சிந்தா! உங்கள தலைவர் பிரபாகரனுக்குப் பிடிக்கும்.." என்றேன்.
ஏன் என்றார்.
சார்ள்ஸ் அன்டனியை தனக்குப் பிடிக்கும் என்பதற்குப் பிரபாகரன் சொல்லும் காரணம், தன் மீது யாரும் கழிவிரக்கம் கொள்வதைச் சார்ள்ஸ் விரும்புவதில்லை என்பதே என்கிறார். அதே குணமும், மனலிமையும், உங்களிடமும் இருக்கிறது. ஆகையால் பிரபாகரனை நீங்கள் சந்தித்தால் நிச்சயம் உங்களை அவருக்குப் பிடிக்கும் என்றேன்.
சிரித்தார்.
அழுகின்றேன். சொல்ல இன்னமும் உண்டு. ஆனாலும் சொல்ல முடியாது அழுகின்றேன். சென்ற ஆண்டில் அவரை நேரில் சந்திக்கும் தருணத்தைத் தவறவிட்டதை எண்ணி, பிள்ளைகள் மீது அவர் கொண்டிருந்த நேசம் கருதி, இரத்தலற்ற அவரது ஆளுமை நினைந்து, ஆறுதல் தரும் நட்பு நினைத்து அழுகின்றேன்.

சிந்தா! சென்று வா நண்பா!

2 comments:

Anonymous said...

நிரைகுடமாக வாழ்ந்திருக்கார். இப்போவுள்ள பதிவுலகம் அவசியம் தெரிய வேண்டிய பதிவர்.
அறியத் தந்தமைக்கு நன்றி

Anonymous said...

அன்பரே,இப்படியொரு பதிவைப் பிரபாகரனின் மரணத்துக்கும் சொல்லியருக்கலாமே!சரி,சரி.சிந்தாவோடு சேர்ந்து தலைவர் பிரபாகரனும் அஞ்சலியாகிறார்.:-(