Saturday, August 08, 2009

ஒரு ஜேர்மனியத் திரைப்பட அனுபவம்

பாயும் வேங்கைப் புலியினை அடையாளமாகவும், மஞ்சள் நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப் பெயரையும் கொண்டமைந்த லோகார்ணோ உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் முதலிரு வாரங்களில் நடைபெறும் இந்தத் திரைத்திருவிழா 62ம் ஆண்டுக் கோலாகலம், இம்மாதம் 5ந் திகதி முதல், 15ந் திகதிவரை நடைபெறுகிறது.


இநத் விழாவின் (இது பற்றிய விரிவான கட்டுரையை இந்தச் சுட்டியில் காணலாம்) பல்வேறு சிறப்புக்களில் ஒன்று , திறந்தவெளிச் சினிமா. அந்தத் திறந்த வெளிச்சினிமாவில் இயக்குனர் Ludi Boeken நெறியாள்கையில் உருவான UNTER BAUERN - RETTER IN DER NACHT எனும் ஜேர்மனியத் திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இரண்டாம் உலக யுத்த காலத்தைக் கதையின் நிகழ்காலமாகவும், ஜேர்மனியை கதையின் நிகழ்களமாகவும் கொண்ட ஒரு திரைப்படம். படத்தின் மொழிமூலமும் ஜேர்மனே.


போர் எத்தகைய கொடியது என்பதைப் போர் நடந்த நாடுகளில், அந்தப்போருக்குள் வாழ்ந்தவர்களால்தான் மிகநன்றாக உணரமுடியும். இந்தப் போர்களின் வலி, தனிமனித மனங்களில் ஏற்படுத்தும் , வலி, துயரம், என்பது சொல்லி விவரிக்க முடியாதது. ஆனால் அந்த வலியைப் பார்வையாளர்களின் மனதில் சிறப்பாக பதிவு செய்ய லூடி போகெனால் முடிந்திருக்கிறது என்பதை படம் நிறைவுபெற்றதும், Locarno Piazza Grande பெருமுற்றத்தில் நிறைந்திருந்த பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் கரவொலி நிரூபனம் செய்தது.


UNTER BAUERN - RETTER IN DER NACHT என்ற ஜேர்மனிய மொழித் தலைப்பைத் தமிழில் 'பண்ணைக்காறர்கள் இருக்கிறார்கள் இரவுகளைக் காப்பாற்ற' எனப் பொருள் கொள்ள முடியும். பொருத்தமான தலைப்புத்தான். இரண்டாம் உலக மாகாயுத்ததின் போது நிகழ்ந்த உண்மைக்கதையினை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. ஒரு யுத்தகாலக் கதையென்றபோதும், ஒரு விமானக் குண்டுவீச்சு , ஒரு துப்பாக்கிச்சூடு, ஒரு இரத்தம் தெறிக்கும் காட்சி, என்பன மட்டுமே திரையில் வருகிறது. 100 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில், இவை சில நொடிகள் மட்டுமே.


யூதக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு தாய், மகள், தந்தை, என மூன்றுபேரை ஜேர்மன் குடும்பம் ஒன்று, ஹிட்லரின் நாசிப்படைகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் கதை. அந்தக் கதைக்குள் எத்தனை தனிமனித உணர்வுகள், உணர்ச்சிப் போராட்டங்கள், வலிகள் வந்து போகின்றன. எல்லாக் கணங்களிலும், மனிதநேயம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆக்ரோசமான வசனங்கள், அடிதடிகள், என எதுவுமில்லாமல், அமைதியாக, பண்ணைக்காறர்களின் வாழ்வியலோடு நகர்கிறது கதை. நாமும் அதனோடே வாழ்ந்து விடுகிறோம்.


என்னைப் பொறுத்தவரை படத்தின் எல்லாக் காட்சிகளும் தவிர்க்கமுடியாதவை. ஆனாலும் ஒரு சில காட்சிகள் அப்படியே கண்வழிபுகுந்து, புலனில் ஆழப் பதிந்து விடுகிறது. ஹிட்லரின் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பேரன், இறந்ததையும், போரின் நிலையையும், அறியும் பெரியவர், சுவரில் மாட்டியிருக்கும் ஹிட்லரின் படத்தைக் கழட்டிக் கீழே வைப்பது, தொலைபேசி மணி அடிக்கும் போதெல்லாம் பயந்வாறும், பிரார்த்தித்தவாறும், தொலைபேசியை எடுக்கும் தாய், ஜேர்மனியர்கள் தோற்றுப் போவதை அறியும் யுதப் பெண், அந்நாட்டு மக்களுக்கு அத்தகைய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென பச்சாதாபம் கொள்ளும் நிலை, என எல்லாவிடத்திலும் எழுந்து நிற்பது மனித நேயம். நாசிகளால் மூன்று இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வேளையில் எம்மால் மூன்ற பேரைக் காப்பாற்ற முடிந்ததே எனக் காப்பாற்றிய அந்த ஜேர்மன் குடும்பத்தின் மன நிறைவு கொள்கின்றது. ஆனால் அதே சமயம் அந்தப்போரில் தங்களது இரு ஆண் வாரிசுகளை இழந்து நிற்கிறது.


அதிகாரங்கள் எல்லாவிடத்திலும் பிறழ்நிலையாகவே இருக்கின்றன. ஆனால் அதிகாரங்களுக்ககுட்பட்ட மக்களேயாயினும், நேயமிக்க மனிதர்களாக இருக்கின்றனர் பலர் என்பது பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனதில் இன்னும் சில கதைகள் ஒடின. 83க் கலவரத்தின் போது, தமிழர்களைக் காப்பாற்றிய சிங்களக் குடும்பங்கள், 85களில், தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் அரசால் வேட்டையாடப்பட்டபோது, அவர்களை மறைத்து வைத்திருந்த தமிழ்க் குடும்பங்கள், என நான் கண்ட சாட்சியங்களின் கதைகள் அவை. போரின் வலியை மனித உறவுகளின் உணர்வினால் சொன்ன வகையில், சிங்கள இயக்குநர் பிரசன்னா விதானகேயின் நெறியாள்கையில் வந்த புரஹந்த களுவர சிங்களப்படம் ( இப்படம் பற்றிய ஷோபா சக்தியின் பதிவு) ஞாபகத்துக்கு வந்தது.


விழாவில் இக்காட்சியின் ஹைலைட்டான விடயம், படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக கலைஞர்கள் அறிமுகத்தின் போது, இந்த உண்மைக் கதையின் சாட்சியங்களாக இயக்குனர் இரு பெண்மணிகளை மேடைக்கு அழைத்தார். இக்கதையின் நிஜமான நாயகியான அந்த யூதப் பெண்ணுக்கு 97 வயது. அவரைக் காப்பாற்றிய குடும்பத்தலைவியான ஜேர்மனியப் பெண்ணுக்கு 82 வயது. அந்த இரு மூதாட்டிகளும் இத்திரைக்கதையின் மூலக்கதைக்குரிய நிஜப் பாத்திரங்கள். நிஜமான நாயகியான 97 வயதுடைய Marga Spiegelக்குப் பக்கத்தில் நின்ற, திரைப்படத்தில் அவரது பாத்திரத்தை ஏற்று நடித்த Veronica Ferres பேசுவதற்கு வார்த்தைகளின்றிக் கலங்கி நின்றார்.


இயக்குனர் Ludi Boeken இத் திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் போது , இது ஒரு வரலாற்றுப் படமல்ல. ஆனால் வரலாற்றில் வாழ்ந்த மாந்தர்களின் மன உணர்வு பேசும் படம் என்று. அது முற்றிலும் உண்மை . படம் பார்த்து முடிகையில் அதை உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன், யூதக் குடும்பத்தைக் காப்பாற்றிய ஜேர்மன் குடும்பத்தின் தலைவியான அநத் 82 வயதுப் பெண்மணிக்கு இப்படத்தை அர்ப்பணிக்கின்றேன் எனச் சொல்ல..அதிர்ந்து ஒலித்தது கரவொலி. வெற்றி பெற வேண்டியது அதிகாரங்கள் அல்ல மானுடம் என அழகாக அடுத்த தலைமுறைக்குச் சொலலிக் கொடுக்கின்றார்கள்...ம்ம்..

நன்றி: 4தமிழ்மீடியா