Wednesday, June 25, 2008

அப்பா எனும் ஆன்மபலம்.

அப்பா!மனிதர்களை நேசிக்க, மாற்றங்களைக் காண, எனக்குக் கற்றுக்கொடுத்தவர். இளைஞர்கள் மீதான நம்பிக்கையையும், நட்பின் சுகத்தையும், மதிக்கத் தெரிந்த மனிதர். இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு முயலாத இயல்பினர். மற்றவர்களுக்குச் சராசரியான ஆன்மீகவாதி. எனக்கு ஆன்மீக வழி நின்று பொதுவுடமை கண்ட மனிதநேயர். புரட்சிபற்றியும், மாற்றங்கள் பற்றியும், யோசிக்கத்தெரிந்த தருணங்களில், சொற்பமாய் தெரிந்த அவர் செயல்கள், நாம் முயன்று முடியாது போனபோது மாபெரும் செயல்களாய் மனதில் பதிந்தன. நானறிந்து கொண்ட முதலாவது சமூகப் போராளி என் அப்பாதான்.

என் செயல்கள் குறித்த சந்தேகங்கள் எப்போதும் அவருக்கிருந்ததில்லை. சந்தேகங்கள் தோன்றுமளவுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமில்லை. இத்தனைக்கும் என் பல செயற்பாடுகள் அவருக்கு மிக இக்கட்டான நிலைகளைத் தோற்றுவித்திருந்தன. ஆனாலும் அவற்றின் பின்னிருந்த நியாயங்களை அவர் உணர்ந்திருந்தார். அவரது அமைதியான அந்த அங்கீகரிப்பே என் செயல்களைப் புடம்போட்டவண்ணமிருந்தன என்றால் மிகையில்லை. அது மட்டுமல்லாது, என் சமுகம் சார்ந்த பணிகளுக்கான அடித்தளமும் அதுவாகத்தானிருந்தது.அப்பாவும் நானும் அருகிருந்த காலம் என்னவோ சற்றுக்குறைவானதுதான். ஆனாலும் என்செயல்களில், நினைவுகளில் அருகிருந்ததனால் அது தெரிந்ததில்லை. எதையும் மாற்றாக எண்ணவோ, செய்யவோ, முயலும் போதெல்லாம், அந்த ஆன்மார்த்தம் பெரும் பலமாக நின்றென்னை நெறிப்படுத்தியிருக்கிறது. அதை இப்போது நன்குணர முடிகிறதென்னால்.தினமும் சிவனை நினைத்த அவர், என்றும் அவர் விரும்பிய வண்ணமே, ஈழமண்ணின் வன்னிநிலத்தில், சிவபுரத்தில் சிவனைக் கதியடைந்து நாட்கள் ஐந்தாகின்றன. நாட்டின் சூழலால், இறுதிக்கணங்களில் அருகிருக்க முடியாது போன துயருற்றிருப்பினும், ஊர்கூடிக் குளக்கரையில், உளங்களை நேசித்தவனை, வழியனுப்பிவைத்த செய்தி சற்று ஆறுதலாகவிருக்கிறது. அப்பா!ஆன்மாவின் பலமாய் என்னுள் கலந்திருங்கள்.

16 comments:

-/பெயரிலி. said...

துயரைப் புரியமுடிகிறது. திடமாயிருங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருந்துகிறேன்... அவர் உங்கள் மனதோடு என்றென்றைக்கும் துணையாக இருப்பார்.

சின்னக்குட்டி said...

//அப்பா எனும் ஆன்ம பலம்//

உண்மை தான்.

இந்த துயரில் நாங்களும் பங்கு கொள்ளுகிறோம்

வி. ஜெ. சந்திரன் said...

ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

அப்பா உண்மையிலேயே ஆன்ம பலம் தான்.

கானா பிரபா said...

சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பில் இருந்த அதே நேசம் நாளாக நாளாக அப்பாவின் மேல் பாய்ந்து விடுகிறது. அப்பா இன்னும் உங்கள் துணையிருப்பார்.

ilavanji said...

வருந்துகிறேன்...

பாலராஜன்கீதா said...

உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

Aruna said...

மனது கனத்துப் போயிற்று
அன்புடன் அருணா

மலைநாடான் said...

துயரில் பங்குகொண்டு ஆறுதல் தெரிவித்த நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

சிவபுரத்திற்கு நிரந்தரமாய் சென்ற தங்கள் தந்தையாருக்கு அடியேனின் வந்தனங்கள். தங்கள் துயரில் பங்கு கொள்கிறேன் ஐயா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலைநாடன்,

உங்கள் துயரம் மாறட்டும். நாள் ஆகும். தந்தையின் நிழல் எப்பவுமே வேணும் நமக்கு. அவர் உங்களுடன் இணைந்திருப்பார்.

அவருடன் பேசுங்கள் கடிதம் எழுதுங்கள் நான் செய்திருக்கிறேன். துளியாவது ஆறுதல் கிடைக்கும். கிடைக்கட்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என் செயல்கள் குறித்த சந்தேகங்கள் எப்போதும் அவருக்கிருந்ததில்லை. சந்தேகங்கள் தோன்றுமளவுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமில்லை//

ஒரு வாசகம்! இதுவே திருவாசகம்!
அப்பா வாழ்க!

படத்தில் அவர் கனிவுடன் சிரிப்பதே உங்களுக்கு கலங்கரை விளக்கம் மலைநாடான் ஐயா!

சிவோஹம்!

ஷைலஜா said...

அப்பாவைப்பற்றிய உங்கள் பகிர்வுகள்
மனதை நெகிழ்விக்கின்றன.
நம்மை நேசித்தவர்கள் மறைந்தாலும்
அதன் தாக்கம் பலநாட்களுக்கு நம்மை ஆட்கொண்டிருக்கும்....மெல்ல மெல்ல மனம் சகஜ நிலைக்கு வந்துவிடும். அந்த ஆன்ம பலம் தங்களுக்குக் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .
ஷைலஜா

Anonymous said...

மிகவும் வருந்துகிறோம். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

சுபாகா said...

மிகவும் வருந்துகிகிறோம். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.