Tuesday, May 06, 2008

ஆமாம்! எங்களால் முடியும்.

" வெளிநாட்டிலிருந்து வாற நம்மட ஆட்கள், சென்னையில் சினிமாப்படப்பிடிப்பு பார்த்து, யாராவது நடிகர்களைப் பார்த்து, கூட நின்றுபடமெடுக்கிறவர்கள், நீங்கள் இன்னும் அப்படி யாரையும் பார்க்கவில்லையா? " சந்தித்த ஈழத்து நண்பன் ஒருவன் கேட்டான். அவனுக்குச் சிரித்துப் பதிலிறுத்தேன்.

அவரது செயல்கள் குறித்து அறிந்தளவில், அவரைச் சந்திக்கும் ஆர்வமிருந்தது. ஆனாலும் எனக்கிருந்த நேரப்பற்றாக்குறையில் நினைத்தபடி செயற்பட முடியவில்லை. அப்படி நான் சந்திக்க விரும்பியவர், தென்னிந்திய சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வரும் ஓரு ஸ்டண்ட் நடிகனாகத் தொடங்கி, நடனக்கலைஞராக, நடனஇயக்குனராக, நடிகனாகப் பரிணமித்த போதும், நல்ல மனிதனாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும், ராகவேந்திரா லாரன்ஸ்.


Larancce Charitable Trust எனும் அறக்கடளையை நிறுவி, அதனூடாக வலுக்குறைந்தோருக்கு வாழ்வளிக்கும் பெரும்பணியாற்றும் லாரான்ஸ், மற்றைய நடிகர்களிலிருந்து எனக்கு வேறுபட்டுத்தெரிந்ததார். சந்திக்க முயன்றபோது, "பாண்டி" படப்பிடிப்புக்காக திண்டுக்கல்லுக்கு அப்பால் நிற்பதாக அறியமுடிந்தது. அவர் திரும்பவும் சென்னை வர மேலும் இருபது நாட்கள் செல்லலாமெனச் சொன்னார்கள். எனக்கு அவ்வளவு நாட்கள் அங்கிருக்க முடியாது. யோசித்துக் கொண்டிருக்கையில், வேறொரு பணிக்காக திருச்சிக்கு உடன் பணிக்க வேண்டியிருந்தது. திருச்சிக்குப் போன பின் முயற்சிக்கலாமெனத் தொடர்பு கொண்டபோது, தொடர்பாளர் நேரே படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்படி சொன்னார். திண்டுக்கலுக்கப்பால் மலையடிவாரத்தில் படப்பிடிப்பு.

மலையடிவாரத்தில் படப்பிடிப்புக்காக உருவாகியிருந்த கிராமத்துக் கோயிலில் திருவிழா. ஊர் கூடியிருந்தது.துறைசார்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றி நின்றன. கூட்டத்துக்குள் தொடர்பாளரைக் கண்டுபிடிக்கச் சிரமமாயிருந்தது. மலையடிவாரமென்பதால் செல்லிடத்தொலைபேசி சீராக இயங்கவில்லை. விசாரித்தபோது, லாரண்ஸ்சின் வாகனத்தைக் காட்டி அதற்குப் பக்கதில் இருக்கலாமென்றார்கள். அங்கு சென்ற போது அவரில்லை. ஆனால் இயலாத பிள்ளையொன்றுடன், இயலாமைமிக்கக்குடும்பமொன்றிருந்தது. சற்று நேரத்தில் தொடர்பாளர் வந்தார். கூடவே இன்னுமொரு நாடி வந்த நலிவுற்ற குடும்பமொன்று. அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

படப்பிடிப்பு மதிய உணவு இடைவேளையில் உங்களை நிச்சயம் சந்திப்பார் எனத்தேடிவந்த அக் குடும்பத்தவர்களுக்கு ஆறுதலாகச் சொன்னார் உகந்த, அந்த உதவியாளர்.. அதற்குப் பின் என்னிடம் மதியஇடைவேளையில் இவங்களப் பார்க்க வேண்டியிருப்பதால், நாங்க இப்பவே சந்திப்போம் வாங்க என என்னை அழைத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்துக்குள் சென்றார். ராஜ்கபூருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த லாரன்ஸ், இயக்குனர் 'கட்' சொல்ல, பந்தாவெதும் இல்லாமல் இருக்கையிலமர்ந்தார். தொடர்பாளர் சொன்னதும், மெல்லிதாய் புன்னகைத்து வரவேற்றுக்கொண்டார். அழைக்கும்போது நடிப்பதுவும், பின் நம்முடனுமாகத் தொடர்ந்து, வேண்டியவைகளைப் பேசிக்கொண்டோம். அப்போது தெரிந்தது அவர் ஆற்றுகின்ற, ஆற்றவிருக்கின்ற பணிகளின் விசாலம்.

பிரபலம் பெற்றபின், பிரபலத்துக்காயன்றி, பிரபலத்தினால் பேரம் பேசி, பிரபலமற்ற பலரின் பெரும் பிரச்சனைகளைத் தீர்க்கச் தீர்மானமாகச் செயற்படுமவரின் செயற்திட்டங்கள், பெறுபவர், தருபவர், நம்பிக்கையை வென்றெடுத்து நின்றன. " மஸ்தானா மஸ்தானா " நிகழ்ச்சியில், யாருக்கும் கிடைக்காத ஒரு சந்தர்பத்தை தான் பேசிப்பெற்றுக் கொண்டதன் தொடர்ச்சியாக, மேலும் பலருடன் பேசவும், பலருக்கு உதவவும் முடிந்துள்ளது. முடிந்தவரை முயல்வேன், முயற்சியால் உதவுவேன் என உறுதிபடச் சொல்லும் லாரன்சை நாடித் தினமும், உதவிக்கோரிக்கைள் வந்த வண்ணமேயிருக்கின்றன என உதவியாளர் சொன்னார். விரும்பின் இங்கே சென்று விபரம் அறியலாம், விரும்பின் உதவலாம். விடைபெறும் போது நிறைவாயிருந்தது. நடிகனுக்குள் நல்லிதயம் மிக்கதொரு மனிதன் மறைந்திருந்து சொன்னான், உதவ முடியுமென்று. நானும் சொல்வேன் " yes! We can "

பதம் பார்க்க ஒரு சோறு :-


4 comments:

Anonymous said...

அவரின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

கீர்த்தி!

உங்கள் வருகைக்கும பதிவுக்கும் நன்றி. இந்த இடுகையை லாரன்ஸ் அவர்கள் பார்க்கக் கூடும், அப்போ உங்கள் வாழ்த்துக்கள் நேரிடையாக அவரிடம் சென்றடையும். நன்றி.

கொழுவி said...

மஸ்தானா நிகழ்ச்சயின் முடிவில் அதுநாள் வரை அவரால் வாழ்வு பெற்றவர்களின் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. லாரன்ஸ்ம் சிறு வயதில் உடல் இயங்க முடியாத அளவில் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே இவஇவாறானவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்.

அதெல்லாம் சரி - நீங்கள் திண்டுக்கல் போன போது நமீதாதானே அங்கேயிருந்தார் - உண்மையை சொல்லுங்கோ - யாரை பார்க்க போயிருந்தீர்கள்

மலைநாடான் said...

//அதெல்லாம் சரி - நீங்கள் திண்டுக்கல் போன போது நமீதாதானே அங்கேயிருந்தார் - உண்மையை சொல்லுங்கோ - யாரை பார்க்க போயிருந்தீர்கள்//

கொழுவி!
நீரும் சேர்ந்துதானே வந்தனீர். பிறகென்ன தெரியாத மாதிரிக் கேட்கிறீர் :)