Thursday, April 17, 2008

நா.உச்சம், அ.நா.எச்சம்.

இது என்ன தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் சென்ற இடுகையிலேயே இந்தத் தலைப்புக் கொடுத்தாயிற்றே. .. எதற்கும் விரிவாக இன்னுமொருமுறை இங்கே இட்டுக்கொள்வோம்.

நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.சரித்திரப்புத்தகங்களைப் பாடமாகப் படித்திருந்த போதும், வெள்ளைக்காறனெல்லாம் படித்தவன், விவரம் தெரிந்தவனென்ற நினைப்பு, புலம்பெயர்ந்து வரும் வரைக்கும், மனதில் எங்கோ ஓர் மூலையில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டுதானிருந்தது. வந்தபின் நேரில் பெற்ற அனுபவங்கள் நிறைய அறியத் தந்தன. எங்கள் நிலங்களுக்கு வந்து கோலோச்சியவர்கள் ஒன்றும் கோமகன்கள் இல்லை, கடற்கொள்ளையர்களாகவும், அடியாட்களாகவும், வாழ்ந்தவர்களின் வாரிசுகள்தான் என உறைத்தது.

ஏறக்குறைய இறப்பு நிலைக்கு வந்துவிட்ட ஒரு நோயாளி, யாரோ ஒருத்தர் வருகைக்கான கனங்களைக் கழிக்கும் நிலையிலிருந்த போதும், தன வாழ்வின் எழுச்சிமிகு நிலைகளை எண்ணிப்பார்த்து மகிழ்ந்து, ஏங்குவது போலிருந்ததது அந்தப் பெரும் அரங்கைப் பார்க்க. Coliseum என்பதற்கு அகாராதியில் பேரரங்கம் எனப் பொருள் வந்தது. அகண்ட பெரும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஆடம்பர களியரங்கு அது. ஆனால் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளுக்கு உண்மையில் அது கிலியரங்கு.வாகனத்தைவிட்டு இறங்கியதுமே, வான்முட்ட உயர்ந்து நிற்கும் அந்த கலையரங்கின் பிரமாண்டம் உசுப்பியது. உள்ளே நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த போது, இந்த பிரமாண்டத்தை எந்தக் கோணத்தில் படப்பெட்டிக்குள் பதிவு செய்யலாம் என எண்ணத்தோன்றியது. சோழ சாம்ராஜ்ய உச்சத்தின் எச்சமாக இருக்கக் கூடிய தஞ்சைப்பெருங்கோயிலுக்கு முன்னால் நின்றபோதும், இந்த அவா என்னுள் வந்திருந்தது.


அழிந்து போன நிலையில் இருக்கின்றபோதிலும் கூட, ஒவ்வொரு பக்கத்திலும் ஏதோ ஒருவித அழகைக் கொட்டிவைத்த வண்ணமேயிருக்கிறது.
சும்மா சுற்றிப்பார்த்து வருகையிலேயே அரைநாட்பொழுதினை அப்படியே பறித்தெடுத்து விடுகிறது அந்தப் பிரமாண்டம். சந்தேகமில்லை, கலையின் நயம் தெரிந்தவர்களும், நயக்கத்தெரிந்தவர்களும் இணைந்த இணைவில் பிறந்திருக்கிறது அந்தக் கலையரங்கு. கலைகளின் வரைபுயர்வில், நாகரீக உச்சம் தொட்ட இனத்தவர்களாக வாழ்ந்தவர்கள் பட்டியலில் அடங்குபவர்கள் ரோமானியர்கள். இருந்தென்ன, மனித மான்பு மறந்து, சகமனிதனின் வலியை, சாவை, குரலெழுப்பி ரசித்து, கொண்டாடியிருப்பதை அறியும்போது, 'அடப்பாவிகளா' என அரற்றிவிடுகிறோம்.

எதிரிகள், கைதிகள், குற்றவாளிகள் என வகைபிரித்து வைத்து, மனிதனை மனிதன் தாக்கிக் கொல்வது, மனிதனை மிருகத்துடன் சண்டையிட வைத்துக் கொல்வது, என வகைவகையாய் வதைகள் செய்வதை, ஊர்கூடி ஒய்யாரமாக ரசித்திருந்த நாகரீகத்தை என்னவென்று சொல்வது. ' ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும் ' எனத் தமிழில் ஒரு முதுமொழியுண்டு. இது உண்மையென்றே சொல்லத் தோன்றுகின்றது இடிந்து போய்கிடக்கும் ரோமானியச் சிதிலங்களைப் பார்க்கும்போது.

மிருகங்கள் வளர்க்கப்பட்ட கூடுகள், மிருகங்களாய் அடைக்கப்பட்ட மனிதர்களின் குறுங்கூடங்கள், அடித்தளத்தில். அதன் மேலாக ஆடுதளம், அல்லது கொலைக்களம். அதற்காப்பால் விரிந்துயரும், விருந்தினர், பார்வையாளர், அமர்தளங்கள். அனைத்தையும் அழகியகலை நயத்துடனும், அதிநுட்பத் தொழிற்திறனுடனும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக , எண்ணிட முடியா இடாம்பீகத்துடனும், கட்டிமுடித்து, கலை ரசிக்காது கொலை ரசித்த சக்கரவர்த்திகள், அங்கே கதறியழுத ஒவ்வொருத்தன் கண்ணீரும், தங்கள் இராச்சியங்களின் காரைகளை பெயர்த்தெடுக்குமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.

பாதாளச்சிறைகளின் நிலங்களில் இப்போ பசும்புல் முளைத்திருந்தாலும், பார்வையாளர் பலர் தினமும் பாரத்துருகிப் போனாலும், உள்ளிருந்து வெளிவருகையில், எங்கோ ஓர் மூலையில் யாரோ அழும் ஓலம் சன்னமாய், அவலமாய், கேட்கிறது. சாடையாக நமது சரீரம் நடுங்குகிறது. ஜெபமும் சபிப்பும் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடுகிறது. எதுவானாலும், எங்கள் முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள் என, ஒழிவு மறைவின்றி, ஒப்புக்கொடுக்கின்றார்களே, அவர்கள் மனிதர்கள்.

10 comments:

கானா பிரபா said...

நன்றாகச் சொல்லியிருந்தீர்கள் மலைநாடான், இந்த அநாகரீகத்தின் எச்சம் இன்னும் இருக்கவேண்டுமா? யாழ் கோட்டையைச் சுவடில்லாமல் தகர்த்தது போலச் செய்யவேண்டும் இதையும்.

dondu(#11168674346665545885) said...

கொலோஸ்ஸியம் என்பது பற்றி ஒரு ஜோக் படித்தேன். அதில், அதற்கு செல்லும் வழியை ஒருவன் இன்னொருவனுக்கு கூறுகிறான்.

"நேரே பலான நம்பர் பஸ்ஸில் ஏறி பலான தெருவில் பலான கட்டடத்தின் எதிரில் இறங்கவும். நேரே சென்று, இடது பக்கம் திரும்பவும். ஐந்து நிமிட நடைக்கு பின்னால் ஒரு கோக்கோ கோலா பெட்டிக்கடை வரும். அதற்கு எதிரேதான் கொல்லோஸ்ஸியம் உள்ளது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

நானும் கொஞ்சம் சோகமாத்தான் உணர்ந்தேன் இதை நேரில் பார்த்தபோது.

// ஏழை அழுத கண்ணீர் கூரிய வாழையொக்கும் //

இது 'வாளையொக்கும்' என்றிருக்கணும்.

மலைநாடான் said...

//கானா பிரபா said...
நன்றாகச் சொல்லியிருந்தீர்கள் மலைநாடான், இந்த அநாகரீகத்தின் எச்சம் இன்னும் இருக்கவேண்டுமா? யாழ் கோட்டையைச் சுவடில்லாமல் தகர்த்தது போலச் செய்யவேண்டும் இதையும்.//

பிரபா!

இது அழிக்கப்படக் கூடாது. அநாகரீகத்தின் எச்சமாக இருந்தாலும், வரலாற்றின் ஆதாரமாக இது காக்கப்படுகிறது. தவறை ஒத்துக்கொள்வதும் நாகரீகமே.:)
வருகைக்கு நன்றி!

சயந்தன் said...

`இதெல்லாத்தையும் பார்க்கிற வெள்ளைக்காரன் எங்களைப் பற்றி என்ன நினைப்பான் ´´ ஆனால் இற்றை வரை விரவிக் கிடக்கும் வெட்கம் இக்கேள்வியின் மேற்பட்டதேயன்றி இக்கேள்வியல்ல. வெள்ளைக்காரத் துரை குறித்த உயர்ச்சி மதிப்பீடு என் மனதடியில் ஒளிந்து கொண்டிருந்தமை மீதான வெட்கம் அது. இன்னும் சில வெ - துரை குறித்த ஆண்டகை உருவகங்கள் எனக்குள் பதுங்கியிருக்குமோ என்ற அச்சம் வெட்கத்தை மேலும் அதிகமாக்கியது. வெள்ளைக் காரனின் மன நிலைச் சமன்பாட்டுத் தளத்தில் பொருத்தி அளவிடுவதற்கு அவனுக்கு கொம்பெதுவும் முளைத்துளதா? தேசங்களைக் களவாடச் சென்ற திருடர்கள் என்றும் தீவாந்திரத் தனிமைச் சிறைகளில் கைதிகளின் ஒவ்வொரு உயிர் அணுவையும் வலிப்படுத்திய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் அறிந்தவற்றை நினைவிருத்திக் கொண்டேன்.
(சயந்தனின் புரட்(டு)சீ கதையிலிருந்து :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

எதோ ஒரு படத்தில் அந்த காட்சிகளைப்பார்த்தேன்.. அடுத்தடுத்து கீழே கதவு திறக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏவி கொல்லுவதும் மிருகங்களுக்கிடையே விழுவதும்.. அய்யோ கொடுமை..

மலைநாடான் said...

//"நேரே பலான நம்பர் பஸ்ஸில் ஏறி பலான தெருவில் பலான கட்டடத்தின் எதிரில் இறங்கவும். நேரே சென்று, இடது பக்கம் திரும்பவும். ஐந்து நிமிட நடைக்கு பின்னால் ஒரு கோக்கோ கோலா பெட்டிக்கடை வரும். அதற்கு எதிரேதான் கொல்லோஸ்ஸியம் உள்ளது."//

ஐயா!

கொல்லோஸ்ஸியத்துக்குப் பக்கத்தில் பெட்டிக்கடையிருப்பது என்னவோ உண்மைதான். மற்றும்படி ஜோக் சொன்னவரும் பலான பேர்வழியாக இருந்திருக்கலாம்.

மலைநாடான் said...

துளசியம்மா!

தவறைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி. திருத்திவிட்டேன்.

அநாகரீகத்தின் எச்சமாக இருந்தபோதும், ஒவ்வொருவேளையில் ஒவ்வொருவிதமான அழகில் இப்போதும் ரசிக்க முடிகிறது.

மலைநாடான் said...

சயந்தன்!

உங்கள் கதையினை வாசிக்கும் போது இப்படித்தான் புரிந்தேன்.

மலைநாடான் said...

முத்துலெட்சுமி!

நிச்சயம் அது பயங்கரமானதும், அருவருப்புமிக்கதுமான செயலே.

தங்்கள் கருத்துக்கு நன்றி.