Sunday, March 16, 2008

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில் கடுகதி ஓட்டிகளாக நாம் இருந்தாலும், இந்தியாவிலோ இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதென்பது கதிகலங்கிப்போகும் விடயம். நல்ல சாரதி, கூடவே கொஞ்சம் விசயம் தெரிஞ்சவராகவும் அமைந்துவிட்டால், அதுவே பார்த்தசாரதி வந்ததுபோலாகிவிடும். இம்முறையும் வழமை போலவே நல்லதொரு சாரதி வந்தமைந்தார். அவர்தான் மேற்சொன்ன கேள்வியைக்கேட்டார்."போகலாமே.."

வில்லிப்புத்தூர் பிரதான சாலையிலிருந்து வாகனம் திரும்பி சிறு பாதைகளினூடு சென்றது. பாரதி எல்லோர்க்கும் ஈர்ப்புடைய சொல். அவரை ஈர்ந்த நம்மூர்க்காறர் யாராக இருக்குமெனும் சராசரியான ஆர்வத்துடனிருந்தேன்.மாலை மங்கிய பொழுதில் அந்த சமாதிக்கோவிலின் முன்பாகச் சென்றடைந்தோம். சிலர் முன்னாலிருந்த கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சமாதிக்கோவில்களுக்குரிய அமைவோடிருந்த சிறிய ஆலயத்துள் சிவலிங்க வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சூழலை ஆர்வமாய் பார்த்த போது தென்பட்ட விடயங்களைப் படமாக்கினேன்.

பாரதியாரின் உளங்கவர்ந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.


யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் குறித்து சுவரிலே எழுதப்பட்டிருந்த புகழ்மாலை.அவரது இந்நினைவாலயத்தை புதுப்பித்தமை குறித்து சுவரில் காணப்பட்ட பதிவெழுத்து.

பொதுவாகத் தமிழகத்தில் ஏலவே, நல்லை. ஆறுமுகநாவலர், நல்லை ஆதீனம் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோர், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என்றே விழிக்கபட்டிருப்பதை அறிந்திருக்கின்றேன். ஆனால் இங்கே படத்திலிருக்கும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் தோற்றம் அவர்களைச்சுட்டுவதாக அல்ல. அப்படியாயின் இவர் யார்? இவர்குறித்த விபரங்கள் ஏதாவது யாருக்காயினும் தெரியுமா என்பதை அறிய விரும்புகின்றேன்.

இங்கு பதிவெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலாநிதி: க. குணராசா குடும்பத்துடன் தொடர்புபட்டவரென்பதன் காரணமாக, யாழ்ப்பாணம் கடையிற்சுவாமிகளுக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

சென்றநூற்றாண்டில் தமிழ் கூறு நல்லுலகின் பெருமைக்குரு கவிஞனாகவிருந்த பாராதியாரின் சிந்தைகவர்ந்த குருவாக விளங்கினார் என்பதுவே முதன்மைக்காரணமாக, மேலும் இவர் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் எழுகிறது. தெரிந்தவர் மேலும் சொல்க...

12 comments:

சின்னக்குட்டி said...

மலைநாடர்.......உந்த நீங்கள் சொல்லும் சாமியை பற்றி தெரியவில்லை.....பாரதியாரின் குருவினுடைய சமாதி ஒன்று யாழ் வடமராட்சியிலுள்ள வியாபாரி மூலை என்ற இடத்தில் இருக்கிறது. பெயரை மறந்து விட்டேன் நண்பர்களிடம் விசாரித்து பிறகு சொல்லுகிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
பிரபா முன்பு ஒரு பதிவில், ஒரு சுவாமியாரைப் பாரதியாருடன் தொடர்புபடுத்தி எழுதியாதாக ஞாபகம்; அவர் இப்போ கம்போடியாவில் உள்ளார். வந்தால் கூறுவார்.
பத்மநாப ஐயாவிடம் விசாரித்தீர்களா???

ஈழநாதன்(Eelanathan) said...

ஈழத்துச் சித்தர் ஒருவரை பாரதியார் குருவாக விளித்து

குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்
தேவிபத மறவாத தீரஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத்தோணி
பரமபத வாயிலெனும் பார்வையாளன்

என்று பாடியிருக்கிறார்.இந்தப் பாடல் பாரதியார் பாடல்கள் தொகுப்பிலும் இருக்கிறது.

இத்தகவலையும் ஈழத்துச் சித்தர்கள் எனும் நூலில் காணலாம்.

http://noolaham.net/project/10/961/961.pdf

பாரதியார் குறிப்பிடுவது வியாபாரிமூலையைச் சேர்ந்த சதாவதானி கதிரவேற்பிள்ளையாக இருக்கலாம் என நினைக்கிறேன் எங்கோ படித்த ஞாபகம் உறுதி செய்ய முடியவில்லை

Muruganandan M.K. said...

பாரதியாரின் ஞான குருவாக கொள்ளப்படுபவர் இலங்கை வடமராட்சியின் வதிரியில் பிறந்து, வியாபாரிமூலையில் வளர்ந்து, தமிழகம் சென்று ஞானியாக வாழ்ந்து பாரதியின் பாடலிலும் இடம் பெற்ற அருளம்பல சுவாமிகள் ஆவார்.
இவரது சமாதி ஆலயம் வியாபாரிமூலையில் அமைந்துள்ளது.
இவர்தான் பாரதியின் ஞானகுரு என்பதற்கு ஆதாரமான கட்டுரையை திரு.பொ.சபாபதிப்பிள்ளை சிறிலங்கா என்ற சஞ்சிகையின் ஏப்பிரல் 1962 இதழில் எழுதியிருந்தார்.
07.05.1963ல் இவர்தான் பாரதியின் ஞானகுரு என்பதைப் பகிரங்கப்படுத்தி 3நாள் விழாவை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்திருந்தது.
இன்றைய யாழ் பல்கலைக்கழக மெய்யியல் துறைப் பேராசிரியரான நா.ஞானகுமாரன் பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள் என்ற ஆய்வு நூலை 1992ல் வெளியிட்டிருந்தார். கொழும்பு குமரன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபையால் இது வெளியிடப்பட்டது.

Anonymous said...

வழித்தோன்றல் கலாநிதி குணராஜா என கல்வெட்டில் குறிப்பிடப்படுபவர் பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கையாழியானாக இருக்கவேண்டும்.

கானா பிரபா மூலம் செங்கையாழியானிடமிருந்து மேலதிக தகவல்களை பெறமுடியும் என எண்ணுகிறேன்.

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
பாரதியாரின் ஞான குருவாக கொள்ளப்படுபவர் இலங்கை வடமராட்சியின் வதிரியில் பிறந்து//

தகவல் சரியாகவிருக்கும் பட்சத்தில்
வதிரியை பிறப்பிடமாக கொண்ட எனக்கும் மகிழ்ச்சியே

குமரன் (Kumaran) said...

மலைநாடான். நான் இந்த யாழ்ப்பாணத்துச் சாமியைப் பற்றி பாரதியாரின் சுயசரிதை என்ற கவிதையில் படித்திருக்கிறேன். பாரதியார் கட்டுரை ஒன்றிலும் இவரைப் பற்றி பேசியிருக்கிறார். தன் வாழ்க்கையில் சந்தித்த சித்தர்களைப் பற்றி பாடிக் கொண்டு வருகையில் இவரைப் பற்றி சொல்வார். அந்தப் பாடலைத் தான் நீங்கள் படமெடுத்து இட்டிருக்கும் கல்வெட்டிலும் பதித்திருக்கிறார்கள். நான் படித்து புரிந்து கொண்டவரை இந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆறுமுக நாவலரோ நல்லை ஆதினகர்த்தரோ இல்லை. மேல் விவரம் தெரியவில்லை.

இங்கு பின்னூட்டம் இட்டிருக்கும் அன்பர்கள் சொன்னதிலிருந்து மேலும் அறிந்து கொள்கிறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

a201தகவலுக்கு நன்றி முருகானந்தம் ஐயா.கதிரவேற் பிள்ளை என்று நான் தவறாகச் சொல்லிவிட்டேன் ஈழத்துச் சித்தர்கள் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அருளம்பலமும் இவரும் வெவ்வேறு ஆட்கள் என நினைக்கிறேன்.படித்த நூலின் பெயரே மறந்துவிட்டது.பருத்தித் துறை விநாயகர் தரும நிதியம் வெளியிட்ட நூல் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

முன்னர் யோகர் சுவாமி குறித்து நான் "தேரடியில் தேசிகனைக் கண்டேன்"பதிவு இட்டபோது. சிறீதரன் அவர்கள் மேலதிக செய்தியைக் கொடுத்திருந்தார். இரண்டு இடுகைகளுக்கான இணைப்பை இங்கே காணலாம். குணராசா அவர்களின் குடும்பத்துடனான தொடர்பு என்பது எனக்கும் புதிய செய்தி, நாடு திரும்பியதும் அறிந்து சொல்கின்றேன்.

http://srinoolakam.blogspot.com/2006/07/blog-post.html

வெற்றி said...

மலை,
நல்ல கேள்வி. பாராதியாரின் இக் கவிதையைப் படித்ததும் எனக்கும் யார் இந்த யாழ்ப்பாணாத்தவர் என்பதை அறிய ஆவலாக இருந்தது.

நான் முதலில் நாவலர் என நினைத்திருந்தேன். ஆனால் நாவலர் பாரதியின் காலப் பகுதியில் வாழவில்லை என்றே நான் நினைக்கிறேன். சரியாகத் தெரியாது.

இறக்குவானை நிர்ஷன் said...

மலைநாடா, பாரதியின் ஞானகுரு அருளம்பல சுவாமிகள் என டாக்டர் முருகானந்தன் சொல்லியிருக்கிறார். எனக்கும் அப்படித்தான் படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. உண்மையில் சுவாரஸ்யமான விடயம்.

மலைநாடான் said...

சின்னக்குட்டி!
ஆர்வத்க்கும், பகிர்வுக்கும் நன்றி.

யோகன்!
பிரபா இது குறித்து விபரம் தெரிவிப்பதாகச் சொல்லியுள்ளார். பார்க்கலாம். பத்மநாபஐயரிடம் கேட்கச் சொன்ன காரணம் புரியவில்லை. நன்றி

ஈழநாதன்!
ஆர்வத்துக்கும், இணைப்புக்கும் நன்றி.
சதாவதானி, கதிரவேற்பிள்ளை காலத்தால் பிந்தியவர் என்று நினைக்கின்றேன். மேலும், அவரோ, நாவலராகவோ இருக்க முடியாதென்பதை அங்கிருந்த படம் உறுதிசெய்கிறது. பார்க்கலாம்.

டொக்டர்!
நீங்கள் மிகக்கூடிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். ஆனாலும், பெயரில் மாறுபடுகிறது. கலாநிதி க.குணராசா வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே இதற்கான விளக்கம் அல்லது விபரம் பெறமுடியும் போலுள்ளது. பார்ப்போம்.

நண்பர்களே! உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

மலைநாடான் said...

சுரதா!
இவர் மட்டுமல்ல, வடமாராச்சியில் வேறு சில சித்தர்களும் வாழ்ந்ததாக அறிந்திருக்கின்றேன். துறவிகளாக வாழ்ந்த அவர்கள் பற்றி இன்னமும் நாம் அறியவேண்டியவை உள்ளன. இவர்களினால் நாம் பெருமைப்படக் கூடியவை நிச்சயம் உண்டு.

குமரன்!
உங்கள் வரவுக்கும் தகவலுக்கும், நன்றி. நாவலர், ஆதீன முதல்வர், நிச்சயம் இல்லை என்பது எனக்கும் தெரிகிறது. இவர்களின் தோற்றத்துக்கும் இங்குள்ள படத்தோற்றத்துக்கும் நிறைய வேறுபாடுண்டு.

பிரபா!
வந்து சொல்லுங்கள். விசாரித்து விபரம் சொல்லுங்கள். குணராசா குடும்பத்துடன் தொடர்பு என்பது எனக்கும் புதிய தகவல்தான்.

வெற்றி!
இதே ஆர்வம்தான் எனக்குமிருந்தது. பார்க்கலாம்.

நிர்ஷான்!
உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே. இது குறித்து இன்னமும் தகவல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.

நண்பர்களே!

உங்களது ஆர்வத்துக்கும் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.