Monday, July 17, 2006

ஏவுகணை எள்ளலும், எனது பார்வையும்.

இந்திய ஏவுகணைப் பரிசோதனை. ஒரு எள்ளல். எனும் எனது முன்னைய பதிவிற்குக் கருத்துக் கூறிய நண்பர்கள் பலரது குரலிலும் கோபம் தெரிந்தது. கூடவே அவர்களது நாட்டுப்பற்றும் தெரிந்தது. ஒரு நாட்டின் குறித்த பகுதிக்குள் வெளிவரும் பத்திரிகையில் வெளிவந்த ஒரு சித்திரத்தை உலகளாவியரீதியில் இயங்குதளம் கொண்ட தமிழ்மணத்தில் வெளிக் கொணர்ந்தவன் என்ற வகையில், அச்சித்திரம் பற்றியும், அதனோடினைந்த சில நோக்குகளையும் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

கீழைத்தேய மக்களை, அவர்களது கலாச்சாரப் பழக்கவழக்கங்களை, கேலி செய்வது, கேலியாக நோக்குவது என்பது மேலைத்தேய சுபாவம் என்னும் ஒரு கருத்து, அப்பதிவில் பின்னூட்டமிட்ட பலராலும் சொல்லப்பட்ட ஒன்று. இக்கருத்து மறுப்பதற்கில்லை என்ற போதிலும், இதில் சில விதி விலக்குகளும் உண்டு. இந்த இடத்தில் சுவிற்சர்லாந்தின் மனோபாவம் பற்றி சற்று அறிந்து கொள்வது சாலவும் பொருந்தும் என்பதனால், பதினைந்து ஆண்டுகளாக அந்த மக்களுடன் உள்ள பரிச்சயத்தில் தெரிந்து கொண்ட சில விடயங்களை கூறவிரும்புகின்றேன்.

சுவிற்சர்லாந்து பற்றி குறைகாணவிழையும் யாரும் முதலில் சுட்டுவது சுவிஸ் வங்கிகளின் இரகசிய பணப்புழக்கம். இதேகுறை காணல் என்னிடமும் இருந்தது. பின்னர் இந்நாட்டினை சற்று அறியத் தொடங்க, இதன் பின்னால் ஒரு சோகமும், ஒரு நியாமும் இருப்பதாகக் கூட சிலவேளைகளில் சிந்தித்திருக்கின்றேன். தன்னுடைய மூலவளங்களைப் முற்றாகப் பயன்படுத்தினால், ஒருவாரத்திற்குக் கூட தன் நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத ஒருநாட்டின் மாறுபட்ட பொருளாதாரச் சிந்தனையின் (சந்தேகமேயில்லை, முதலாளித்துவ சிந்தனைதான் ) பிறிதொரு வெளிப்பாடாகப் பார்க்கும் போது, அதன் தன்மை மாறுபட்டுத் தெரிகிறது. வங்கிகளின் பொதுவான பணவைப்பக விதிமுறைகளுடன், மேலும் சில நடைமுறைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு சுவிஸ் வங்கிகள் வழங்குகின்றன என்பது உண்மைதான். அதற்காக யாருக்கும் கொள்ளையடிக்கக் கற்றுக்கொடுக்கின்றன என்று சொல்ல முடியாதென்றே கருதுகின்றேன். இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும், இப்பொருளாதாரச் செயற்பாட்டில் சுவிஸ மக்கள் பலருக்கு விருப்பமில்லாவிடினும், நாட்டின் தேவை கருதி மௌனிகின்றார்கள், சிலர் எதிர்க்கவும் செய்கின்றார்கள்.

அண்மையில் '' ரீடர்ஸ் டையர்ஸ்'' சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் நடாத்திய பண்பொழுக்கம் பற்றிய ஆய்வில் முதலிடம் வகிப்பது சுவிற்சர்லாந்து எனக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. நானறிந்தவரைக்கும் இது சரியென்றே சொல்வேன். அறிமுகமாகிய கணத்திலிருந்து அவர்கள் நம்மோடு காட்டும் நேசம் பாசாங்கற்றது (சில விதிவிலக்குகளும் உண்டு). எந்தவொரு விடயத்திலும் காட்டும் நடுநிலைத் தன்மையும், பிறர் விடயங்களில் தன்னிச்சையாக உள்நுழையாத் தன்மையும், உழைப்புக்குறித்த அக்கறையும், செய்தொழில் எதுவாயினும், அதில் காட்டும் நேர்த்தியும், சூழலை நேசிக்கும், ரசிக்கும் மனப்பாங்கும், எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவர்களது ஊடகசுதந்திரம் அருமையானது. தனிமனித உணர்வுகளை மதிக்கும் தன்மையது. தேவையற்றவிதத்தில் எந்தவொரு தனிப்பட்ட மனிதர்களையும் காயப்படுத்த முனையாதது.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரையில், இந்தியா குறித்த நன்நோக்கே உண்டெனக்கொள்ளலாம். இந்த நன்நோக்கின் வெளிப்பாடாக அணமையில் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் சுவிஸ் வந்தபோது அவருக்கு அளித்த வரவேற்பையும், இந்தியாவில் சுவிஸ் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் உதவித்திட்டங்களையும், பல்வேறு உற்பத்தித் திட்டங்களையும், குறிப்பிடலாம். அதிலும் தமிழர்கள் எனும்போது அது ஈழத்தமிழர்களாயினும் சரி, இந்தியத் தமிழர்களாயினும் சரி, தொழில்துறைசார்ந்து, நல்லபிப்பிராயமே நிலவுகிறது.

இனி பதிவில் சுட்டிய சித்திரத்துக்கு வருவோம். இச்சித்திரத்தை கேலிசித்திரம் எனச்சுட்டியபோதும், இதை ஒரு கருத்தோவியம் எனக்குறிப்பிடவே விரும்புகின்றேன். ஓவியத்திலே ஏவுகணையின் உந்துசக்தியாக ஒரு நலிந்த மனிதன் சித்தரிகப்படுகின்றான். மக்களின் நலிந்த நிலையைப்போக்கினால் எண்ணும் தூரத்தை எய்தலாம் எனச் சொல்லப்பட்டதாக ஏன் அதைக் கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இதே ஓவியர் இதே பத்திரிகையில் முன்னர் வரைந்த மற்றுமொரு சித்திரத்தில் சீனாவின் மனிதவலு பற்றிச் சித்தரித் திருந்ததை நினைவில் கொள்வதே.
முன்னைய சித்திரத்தில் ( தற்போது என்னிடமில்லை. மன்னிக்கவும் ) சித்தரிக்ப்பட்ட விடயம் பின்வருமாறு அமையும்.

சுவிஸ் வர்த்தக உயரதிகாரியின் அலுவலகம். உள்ளே நுழையும்
விற்பனையதிகாரி: ஐயா இன்று இரண்டுசெய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன. ஒன்று நல்லது. மற்றது கெட்டது.

மேலதிகாரி: நல்ல செய்தி என்ன?

விற்பனையதிகாரி: சீனாவில் இருந்து ஒருலட்சம் குளியலறைத் தொட்டிகளுக்கான விண்ணப்பம் வந்துள்ளது.

மேலதிகாரி: கெட்ட செய்தி?

விற்பனையதிகாரி: நாளை மாலைக்குள் அவை வேண்டுமாம்.

மேலதிகாரி ஆச்சரியத்துடன் இருப்பார்.

இங்கு கேலி செய்வதுபோல சொல்லப்படும் கருத்து சீனாவின் மனிதவலுவும், உற்பத்தித்திறனும்.

சீனாவிற்கு நிகரான மனித வலுவுள்ள இந்தியா, தனது பிரதான வளத்தை மேம்படுத்த வேண்டுமெனச் சொல்லப்பட்ட செய்தியாக, இந்த எள்ளலை ஏன் எடுத்துக் கொள்ள முடியாது?



திருத்தம்பலேஸ்வரம் - பகுதி 1

6 comments:

நாகை சிவா said...

//சுவிற்சர்லாந்து பற்றி குறைகாணவிழையும் யாரும் முதலில் சுட்டுவது சுவிஸ் வங்கிகளின் இரகசிய பணப்புழக்கம்.//
இது குறித்து போன பதிவில் நான் குறிப்பிட்டதால் நான் இங்கு விளக்கம் அளிக்க முயல்கின்றேன்.
அவர்கள் இரகசியம் என்பது சரி தான். ஆனால் ஒரு அரசு தானே நேரிடையாக ஒரு சில விசயங்களை கேட்கும் அந்த வங்கி கொடுக்க வேண்டும். அதை அந்த வங்கி கொடுப்பது இல்லை அது தான் பிரச்சனை. நான் ஒத்துக் கொள்கின்றேன், அந்த வங்கி யாரையும் கொள்ளை அடித்து கொண்டு வந்து தங்கள் வங்கியில் போட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலும் தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.

//இந்தியா, தனது பிரதான வளத்தை மேம்படுத்த வேண்டுமெனச் சொல்லப்பட்ட செய்தியாக, இந்த எள்ளலை ஏன் எடுத்துக் கொள்ள முடியாது?//
எடுத்துக் கொள்ளலாம், எந்த வார்த்தையை உபயோகின்றோம் என்று பார்க்க வேண்டும். அந்த படத்தில் பாசுமதி அரிசி என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அப்புறம் ஒரு செய்தி : இந்தியா அந்த ஏவுகனையை இந்த ஆண்டு இறுதிக்குள் மறுபடியும் ஏவுவதற்கு தயார் செய்துக் கொண்டு இருக்கின்றது.

சின்னக்குட்டி said...

//சுவிற்சர்லாந்து பற்றி குறைகாணவிழையும் யாரும் முதலில் சுட்டுவது சுவிஸ் வங்கிகளின் இரகசிய பணப்புழக்கம். இதேகுறை காணல் என்னிடமும் இருந்தது//

நவீன கொள்ளைக்காரருக்கு நாகரீகமாக சட்டரீதிய ஒளித்து வைச்சு இருக்கக்கூடிய இடம் தான். உந்த வங்கி. இரண்டாம் உலகமாக யுத்த காலத்திலிருந்து வைப்பிலப்பிட்ட பணம் தங்கக்கட்டிகள் உரிமை கோரப்படதாவை எல்லாம் உந்த வங்கியிலை தானாம்...

பொன்ஸ்~~Poorna said...

மலை நாடன்,
திருத்தம்பலேஸ்வரம் பற்றி எங்களைப் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியதற்கு முதற்கண் நன்றிகள்.. அந்தப் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை.. பின்னூட்டப் பெட்டியைச் சரி பார்க்கவும்..
இந்தப் பின்னூட்டம் அந்தப் பதிவிற்கு மட்டுமே உரியது:

ஆரம்பம் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் வாசிக்க வசதியாக இருக்கும்.. அத்துடன், வெற்றியிடம் சொன்ன அதே பரிந்துரை: வரைபடம் ஏதும் கிடைத்தால் போடலாமே!! என்னைப் போல் இலங்கையின் நிலப் பரப்பை அத்தனை தெளிவாக அறியாதவர்களுக்கு வசதியாக இருக்கும்.

தொடர்ந்து பதியுங்கள். மருதநிழல் தேடி வருகிறேன் :)

கிவியன் said...

ஏவுகணை என்பது சிவகாசி சமாச்சாரம் இல்லை. அதே சமயம், எள்ளல் துள்ளல், இளக்காரமும் தேவைதான். முன்னது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் சாதிக்க முடியும், பின்னால் சொன்னது கருத்து சுதந்திரம் நிச்சயம் தேவை. இதுக்கெல்லாம் துவண்டு போகமுடியுமா? இதைவைத்து, சுவிஸ் பற்றிய உங்களது கருத்தும் வித்யாசமானது. சிவாவும் சின்னக்குட்டி கூறுவதும் சரிதான். //தனிமனித உணர்வுகளை மதிக்கும் தன்மையது. தேவையற்றவிதத்தில் எந்தவொரு தனிப்பட்ட மனிதர்களையும் காயப்படுத்த முனையாதது. // ரொம்பசரி, பக்கதுவீட்டுகாரன் வீட்ல உள்ளவங்கள அடிச்சு சுருட்டிட்டு வந்து அத பத்திரமா வெச்சுக்கோன்னு சொல்லராரு, நமக்கென்னவாச்சு, நம்ம மக்கள் பாவம் //ஒருவாரத்திற்குக் கூட தன் நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத ஒருநாட்டின் மாறுபட்ட பொருளாதாரச் சிந்தனை// கஷ்டப்படராங்க, பக்கத்துவூட்டுகாரன் திருடிட்டு வந்தா என்ன அடிச்சு வாங்கிட்டு வந்தாதான் என்ன? இதுல //சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரையில், இந்தியா குறித்த நன்நோக்கே உண்டெனக்கொள்ளலாம// இவிங்க நோக்கினா என்ன நோக்காட்டிதான் என்ன? ஒரு **த்துக்கும் வேலைக்கு ஆகாது.

Machi said...

அந்த கேலி சித்திரம் சுவிஸ்காரரின் இந்தியாவை பற்றிய புரிந்துகொள்ளலை தெளிவாக்குகிறது. மேலோட்டமாக மேற்கு நாடுகளில் இந்தியா என்றால் இப்படி தான் என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் அதே புரிதலையே கேலி சித்திரக்காரரும் கொண்டுள்ளார். அவர் இந்தியாவை பற்றி இன்னும் அதிகமாக புரிந்து சித்திரம் வரைந்திருந்தால் வேறு மாதிரி வரைந்திருப்பார்.

பாசுமதி அரிசியை சுட்டிக்காட்டியது எனக்கு அவர் இந்தியாவை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கேலி சித்திரம் வரைந்தமாதிரி தோன்றுகிறது.

பாசுமதி அரிசி பணக்கார அரிசி அதாவது விலை அதிகமுள்ள அரிசி, மிகப் பெரும்பான்மையான மக்கள் உண்பது மற்ற ரக அரிசிகளை. தமிழகத்தில் பொன்னி ரகம் பிரபலம், ஆந்திராவில் சோனாமசூரி இப்படி.

மலைநாடான் said...

கருத்துச் சொன்ன நண்பர்களுக்கு முதலில் நன்றிகள். உங்கள் கருத்துக்களின் தொகுப்பொன்றினை சித்திரத்தைக்கீறிய ஓவியருக்கு அனுப்பி வைக்கவுள்ளேன். அவர் பதில் கருத்துக் கிடைத்தால் அதை உங்களுக்கு அறியத்தருவேன்.
நன்றி!