Saturday, June 24, 2006

ஆறு அல்லது 6

தொழில் நிமித்தம் வெளியே நின்ற காரணத்தினால், இரு வாரங்களாக தமிழ்மணத்துள் இயல்பாக வந்து செல்ல முடியவில்லை. இந்தக் காலப்பகுதிக்குள், மணியன், மயூரன், சின்னக்குட்டி, ஆகியோர் என்னை ஆறு விளையாட்டிற்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்றுச் சற்றுத் தாமதமாகவே வந்திருக்கின்றேன். முதலில் என்னை அழைத்த நண்பர்களுக்கு நன்றி.

இனி என் விருப்புக்கள். இக்குறிப்புக்கள், எழுதும் இக்கணத்தில் நினைவுக்குப்பட்டவைகளே.

எனக்குப்பிடித்த மலைகள்

திருகோணமலை
எனக்கு என்றும் எல்லாவகையிலும், பிடித்தது

கீரிமலை
பெயரில் மட்டும்மே மலையிருந்தாலும், கேணியிலும், கடலிலும், குளிக்கும் அனுபவசுகத்திற்காக

சபரிமலை
ஆன்மீக அனுபவத்திற்கும் ஆயுர்வேத சுகத்திற்கும்.

அல்ப்ஸ்மலை
இதன் சாரல்களிலுள்ள பல முகடுகளிலும் பயனித்த போது, கிடைத்த அனுபவச்சுவைகள் அற்புதமானவை.

இமயமலை
இயற்கையின் அற்புதம் காணவிரும்பிச் செல்ல எண்ணியுள்ளேன்.

சிவனொளிபாதமலை
இம் மலைமீதிருந்து காணும் பிரசித்திபெற்ற சூரியோதயக்காட்சி காண்பதற்காகச் செல்லவேண்டும்.

பிடித்த கவிஞர்கள் ( தமிழீழக்கவிஞர்கள்)

சோ.ப
மரபுக்கவியிலும், இலகு தமிழில் பாடலாம் என்பதை எழுதிக்காட்டியவர். ஆங்கிலப்பேராசிரியர், ஆனால் அற்புதமான தமிழறிஞர். எனக்குத் தமிழைச் சுவைக்கச் சொல்லிக்கொடுத்தவர்.

வீரமணிஐயர்
செய்யுள் வடிவில் இவர் எழுதும் வேகம் பிரமிக்கத்தக்கது. அழகு தமிழுக்கும் , குழந்தை மனசுக்கும் சொந்தக்காறர்.

புதுவை இரத்தினத்துரை
மரபு, புதுமை, உணர்வு, என்பவற்றின் கூட்டுக்கலவையாக அமைந்த படைப்புக்களுக்குச் சொந்தக்காறர்.

சேரன்
புதுக்கவிதைக்கும் ஒரு தகைமைப்பாட்டினைத் தந்தவர்.

வ.ச.ஐ. ஜெயபாலன்
அழகான கவிக்காக

சிவரமணி
எவ்வளோ தந்திருக்க வேண்டியவள். இடையிலே முடித்துக்கொண்டாள்.

பிடித்த திரைப்படங்கள்

தென்றலும் புயலும்
ஈழத்துத் தமிழ்த்திரைப்படவரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு படம். திருகோணமலையின் பல பகுதிகளிலும் படப்பிடிப்புச் செய்யபட்டிருந்த திரைப்படம்.

மறுபக்கம்
தமிழில் தங்கத்தாமரை விருது பெற்ற ஓரேயொருபடம். பல்துறைச்சிறப்புக்களாலும் பிடித்தது.

ஹேராம்
சினிமா தொடர்பான பல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளக்கூடிய தேடல்மிக்க படைப்பு

ஏழாவது மனிதன், கண்சிவந்தால் மன் சிவக்கும்.
வித்தியாசமான தமிழ்ப்படங்கள் பார்க்க வேண்டுமென விரும்புவோர் பார்க்க வேண்டிய படங்கள்.

கனவு மெய்பட வேண்டும்.
ஜானகி விஸ்வநாதனின் ஆய்வுரீதியான படைப்பு. ஒரு சமுகத்தின் குறைபாடுகளையும், உணர்வுகளையும், ஆவனப்படுத்திய படம்

எனக்குப் பிடித்த பாடல்கள்
இந்தத் தலைப்பில் உங்களைப் போலவே எனக்கும் நிறைய உண்டு. ஆனாலும் பதிவிற்காக உடன் நினைவுக்கு வந்தவை.

கடலலையே கொஞ்சம் நில்லு
தமிழீழக்குயில் பார்வதி சிவபாதம் பாடிய பாடல்கள் எல்லாமே பிடிக்கும்.

போரம்மா
பாடலில் வரும் வாத்தியங்களின் தரும் உணர்வலைகளுக்காக. குறிப்பாக பறையும், உடுக்கும் பிரமாதமாக இருக்கிறது

சின்னஞ் சிறு பெண்போலே
சீர்காழி கோவிந்தராஜனின் குரல் ரொம்பப் பிடிக்கும். அந்தவகையில் இந்தப் பாடலும் பிடிக்கும்.

நிற்பதுவே நடப்பதுவே
பாரதி பாடல்கள் எல்லாமே பிடிக்கும். திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் மிகவும் பிடித்தது.

ஆடாது அசையாது வா வா கண்ணா
பித்துக்குளி முருகதாஸ் பாடல்களில் காட்டும் நளினங்கள் ரசிக்கத்தக்கவை. கூடவே மனதுக்குச் சுகம் தருபவை.

ஆடுகின்றான் கண்ணன்
தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் ஆர்வமில்லை. ஆயினும் முகப்புப்பாடல்களைக் கவனிப்பேன். அப்படிக் கவனித்துக் கேட்கத் தொடங்கியது. ஆடுகின்றான் கண்ணன் தொலைக்கட்சி நாடகத்தின் முகப்புப்பாடலிது.

வாசித்ததில், பிடித்த நாவல்களும் எழுதியவர்களும்.

அடிமைகள், பஞ்சமர். - கே.டானியல்
யாழ்ப்பாணச் சமுகக்கட்டமைப்பை விமர்சித்த எழுத்துக்களின் தந்தையெனச் சொல்லப்பட்டவர்

பொற்சிறையில் வாடும் புனிதர்கள் - தெனியான்
கே.டானியலால், தன் எழுத்துலக வாரிசு என விதந்துரைக்கப்பட்டவர்.

நிலக்கிளி - பாலமனோகரன்
தமிழீழத்தின் தலைசிறந்த மண்வாசனை எழுத்தாளர்

வாடைக்காற்று - செங்கை. ஆழியான்
வரலாற்றுக்குறிப்புக்களை வைத்து எழுதும், இவரது எழுத்துக்கள் வசீகரமானவை.

ஒருகாவியம் நிறைவேறுகிறது. - வ.அ.இராசரத்தினம்
திருகேணமலை மாவட்டத்தில் மூதூரைச் சேர்ந்தவர். எளிமையான எழுத்துக்கும் பேச்சுக்கும் சொந்தக்காறர்.

ஆத்மாவின் ராகங்கள் - தீபம் நா.பார்த்தசாரதி
என் பள்ளித்தோழி படிக்கத் தந்த நாவல். வாசிக்கும் போது உண்மைக்கதைபோல் தோன்றும் கற்பனைக் கதைகொண்ட நாவல்.

அழைக்கவிரும்புகின்ற வலைப்பதிவு நண்பர்கள்.

கான.பிரபா

பெயரிலி

வன்னியன்

வெற்றி

சந்திரவதனா

எஸ்.கே24 comments:

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

நல்ல ரசனையான தேர்வுகளைத் தான் கொடுத்திருக்கிறீர்கள்,
தங்கள் ஆறு அழைப்புக்கு என் நன்றிகள். என்ன செய்வது 6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் என்று மனம் உந்துகின்றது. எதை விடுவது என்பதில் சமரசம் கொள்ளவும் விருப்பமில்லை. எனவே நான் எஸ்கேப்:-)

மலைநாடான் said...

//6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் என்று மனம் உந்துகின்றது. எதை விடுவது என்பதில் சமரசம் கொள்ளவும் விருப்பமில்லை. எனவே நான் எஸ்கேப்:-) //

உங்கள் உள்ளக்கிடக்கையை அறியத்தந்தந்தமைக்கு நன்றி.

VSK said...

குறிஞ்சி மணம் கமழ நீங்கள் அளித்த "ஆறு",
கரடு முரடாகவும்,
இயற்கை எழில் கொஞ்சவும்,
மலையினின்று புறப்படும் 'ஆறு' போலவும்,
மூலிகை மணங்களைத் தாங்கிய மலைக்காற்று போலவும்,
பனியின் குளிர்ச்சியுடனும்,
வாழ்வின் மேடு பள்ளங்களைக் காட்டியபடியும்,
மனதுக்கு இதமாகவும்,
புத்துணர்ச்சியுடனுமிருந்தது!

பாராட்டுகள்.
என்னை மறுபடியும் அழைத்திருக்கிறீர்கள்.

விட்டுப்போன எத்தனையோ'ஆறு'கள் உண்டு.
வந்து பதிகிறேன்,
அழைப்பினை ஏற்று!

நன்றி.

Anonymous said...

மலைநாடான், ஆறு எழுதலாம். அது பிறகு வால் முளைத்து அங்கிங்கும் நீண்டு போய்விடுமோ என்று பயமாகவிருக்கிறதால், தனி அஞ்சலிலே ஆறு சொல்லிக்கொள்கிறேன் ;-)

-/பெயரிலி.

சின்னக்குட்டி said...

வணக்கம் மலை நாடன்....நல்ல ரசனையுள்ள தேர்வுகள்.... ஏழாவது மனிதன்,கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற திரைபடங்களை ஞாபக படுத்தியத்திற்க்கு நன்றி...ஏழாவது மனிதன் ரகுவரன் நடித்த புரட்சிகரமான படம்...... கண் சிவந்தால் மண் சிவக்கும்.....கீழ்வெண்மணி பிரச்சனையை பிண்ணணியை கொண்ட படமென்று நினைக்கிறன்... நன்றி

Anonymous said...

மலைநாடான், நான் கீரிமலைக் கேணியுலும் கடலிலும் குளித்த அனுபவத்தை நினைவூட்டிய உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

கானா பிரபா:
"என்ன செய்வது 6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் ஆறு எழுதலாம். அது பிறகு வால் முளைத்து அங்கிங்கும் நீண்டு போய்விடுமோ என்று பயமாகவிருக்கிறதால், "

இப்படியெல்லாம் தப்பிக்கொள்ளாமல் ஆறு தாருங்கள்.

பெயரிலி:
" ஆறு எழுதலாம். அது பிறகு வால் முளைத்து அங்கிங்கும் நீண்டு போய்விடுமோ என்று பயமாகவிருக்கிறதால், "

ஆறுகள் தனிமனிதர்க்குச் சொந்தமில்லை, அவை ஊருக்கே சொந்தம், பொதுவில் வையுங்கள் பெயரிலி. :o)

கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டியர்

மலைநாடானின் இரசனை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?:-)

கண் சிவந்தால் மண் சிவக்கும் இந்திரா பார்த்தசாரதியின் மூலக்கதை, இயக்குனர் சிறீதர் ராஜனால் முறைக்கேடாகப் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் இந்திரா பார்த்தசாரதி தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மனிதா மனிதா என்ற புரட்சிகரமான பாடல் இந்தப் படத்தின் வலிமையைக் கூட்டும் அம்சம்.

மலைநாடான் said...

SK !
அழைப்பை ஏற்றுக்
கொண்டமைக்கும், பாராட்டுக்களுக்கும், மிக்க நன்றி. உங்கள் மன ஆறு காண ஆவலோடு காத்திருக்கின்றேன்.

மலைநாடான் said...

பெயரிலி!
நீட்சி பற்றிப் பயங்கொள்ளக் கூடியவரா நீங்கள். ஆச்சரியமாக இருக்கிறதே!

மலைநாடான் said...

சின்னக்குட்டி!
பாராட்டுக்கு நன்றி. ஏழாவது மனிதன் இயக்குனர் ஹரிகரனின் செவ்வியொன்று அண்மையில் தொலைக்காட்சியொன்றில் பார்க்கக் கிடைத்தது. எதிர்கால சினிமா பற்றி அவரது சிந்தனை ஆச்சரியம் தந்தது.

கண்சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வரும் 'பட்டு வேட்டிபற்றிய கனவிலிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்' என்ற கவிதை வரி, எனக்கு மிகவும் பிடித்தது

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மலைநாடான் said...

மலை நாடன்!
தங்கள் திருகோணமலை;கீரிலை;வீரமணி ஐயர்;மறுபடியும்; ஏழாம் மனிதன்; சின்னஞ்சிறு பெண்போல;போரம்மா(உங்க புண்ணியத்தில கேட்டது);ஆடாது அசையாது(மத்யமாவதி-என் இஸ்டராகம்); கே.டானியல்;பாலமனோகரன்;
செங்கைஆழியான்;
நா.பார்த்தசாரதி
எனக்கும் பிடிக்குதுங்க!
நல்ல ரசனை!
யோகன் பாரிஸ்

யோகன்!
மன்னிக்கவும். உங்கள் பின்னூட்ட வரிகளின் நீளம் சற்று அதிகமானதால், அது தளத்தின் வார்புருவுக்குள் அடக்கமுடியாதிருந்தது.
அதனால் நீளமான வரியைப் பிரத்துப்பிரசுரிக்க வேண்டியதாயிற்று. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

மலைநாடான் said...

பிரபா!

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 'மனிதா மனிதா..' பாடல் மறக்க முடியாதது.

இளங்கோ-டிசே said...

மலைகளுக்குள் மலையில்லாத கீர்மலையையும் சேர்த்துக்கொண்டது குறும்புதானே :-)?

மணியன் said...

வணக்கம் மலைநாடான், உங்கள் இரசனையும் என்னுடையதும் நான் அறிந்த விதயங்களில் ஒத்துப் போகிறது. அழைப்பினை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி.

வெற்றி said...

மலைநாடான்,
வணக்கம்.
அழைப்புக்கு மிக்க நன்றி. நண்பர் சுகாவும் அழைப்பு விடுத்திருந்தார். நிச்சயமாக இன்னும் இரு தினங்களுக்குள் பதிவு போடுகிறேன்.

அன்புடன்
வெற்றி

மலைநாடான் said...

/மலைகளுக்குள் மலையில்லாத கீர்மலையையும் சேர்த்துக்கொண்டது குறும்புதானே :-)?/

அறியாப்பருவத்தில் கீரிமலையை ஒரு மலைப்பிரதேசமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். அதையிட்டே பதிவிலிட்டேன். :-)

மலைநாடான் said...

மணியன்!

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள்

மலைநாடான் said...

வெற்றி!

அழைப்பையேற்று பதிவிட முனைவதற்குப்பாராட்டுக்கள். தங்கள் மனவாறு காணஆவலாக உள்ளேன்.

வன்னியன் said...

அழைப்பை அன்றே பார்த்தேன்.
என்னை ஒருக்காச் சிரிக்க விடும்.
;-) ;-) ;-) ;-)

இப்போது எழுத விசயங்கள் இல்லாததால் பிறகு எழுதுகிறேன்.

Chandravathanaa said...

வணக்கம் மலைநாடான்,

மூன்று வாரங்கள் விடுமுறையில் சென்றிருந்தேன். இந்த மூன்று வாரங்களும் கணினியிலிருந்தும் விலகியிருந்தேன்.
அதனால் இன்றுதான் உங்கள் அழைப்பைப் பார்க்க முடிந்தது. அழைப்புக்கு நன்றி.

உங்கள் ரசனைகளில் பல எனது ரசனைகளுடன் ஒத்துப் போகின்றன.
இடையிடையே மனதைத் தொட்டுச் செல்லும் கீரிமலைக்கேணியை தற்போதும் ஒரு முறை நினைவுக்குள் கொண்டு வந்தீர்கள். நன்றி.
பாரதியாரின் நிற்பதுவே நடப்பதுவே கேட்கக் கேட்க அலுக்காத பாடல்களில் ஒன்று.
இப்படி உங்கள் ரசனைகள் பலதிலும் என் ரசனையும் கலந்துள்ளது.

மலைநாடான் said...

வெற்றி!

பதிவுக்கு விடயமில்லையா? அதுவும் உங்களிடமா?

மலைநாடான் said...

சந்திரவதனா!

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள். நான் தற்போது உங்கள் நாட்டில்தான் நிற்கின்றேன். முடியுமானால் எனக்கு ஒரு மடலிடுங்கள். நன்றி

வெற்றி said...

மலை நாடான்,
உங்களின் அழைப்பை ஏற்று இன்று ஆறுப்பதிவு போட்டு விட்டேன்.

நன்றி