Sunday, May 21, 2006

ஸ்ரீ ரங்கம் - ஒரு பண்பாட்டுக் கோலம் 2




மூன்று வருடங்களுக்கு முன் ஒரு மார்கழிமாத பகல் பொழுதில் ஸ்ரீ ரங்கம் செல்லும் வாய்புக் கிடைத்தது. ஸ்ரீ ரங்கத்தின் ராஜகோபுரம் உயர எழுந்ததினால்தான் இலங்கையில் பிரச்சனை என்றும், கோபுரங்களில் அழகானது ஸ்ரீரங்கக் கோபுரம் எனவும், ' பச்சை மாமலை போல் மேனி.. எனத்தொடங்கி அரங்க மாநகருளானே' என முடிவுறும், தெரிந்த சில பாசுரங்களின் தமிழகும், தமிழகப்பத்திரிகைகளில் ஸ்ரீரங்கம் ஏதோ ஒருவகையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருந்ததாலும், என்பெற்றோர் ஸ்ரீரங்கம் பற்றிப் பெருமிதமாகக் கதைப்பதை சின்னவயதுமுதல் கேட்டு வளர்ந்ததினாலும், ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் எனும் ஆவல் என்னுள் எழுந்திருந்தது என்னமோ உண்மைதான். வைணவ தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம் என அறிந்திருந்தேன். அங்கே நடைபெறும் சுவர்க்கவாசல் ஏகாதசி பற்றியும் சிறிது தெரியும். ஆனால் அவை குறித்து வேறெதுவும் தெரியாது.

இந்நிலையில் அழைத்துச் சென்ற நண்பர் மேலதிகமாகச் சில தகவலகளைச் சொன்னார்.சுவர்க்க வாசல் ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களும், பின்னதாக பத்து நாட்களும், விசேட விழாநாட்கள் என்றார். அதிலும் முதல் பத்து நாட்களைப் பகல் பத்தென்றும், பின்னைய பத்து நாட்களை இராப்பத்தென்றும் குறிப்பிட்டு விழா நடப்பதாகவும் சொன்னார்.
இதன்பின் அவர் பேசும்போது இந்தியக் கலாச்சாரமும், தத்துவார்த்தமும், அவ்வளவு விரைவில் அழிந்துவிடும் என யாரும் அஞசத்தேவையில்லை எனும் நம்பிக்கை தரும் ஒரு விடயம் இந்த விழாவிலே உண்டு. நீங்கள் கொடுத்து வைத்தவர், இப்போ பகல் பத்து காலம். ஆகையால், பகல் உற்சவத்தின் போதே நீங்கள் அதைக்காணக் கூடியதாகவிருக்கும் என்று சொல்லி என் ஆவலை அதிகப்படுத்தினார்.


ஸ்ரீரங்கம் சென்றடைந்தோம். வானுயர் வண்ணக் கோபுரம் கண்டோம். மூலவரின் அழகுபார்த்து வியந்தோம். பின் பிரகாரம் சுற்றி வந்தோம். பிரகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் மக்கள் குழுமியிருந்தார்கள். பாசுரம் படிக்கும் சத்தம் கேட்டது. சுகமான ஒரு தாளலயத்தில் தனித்துவப் பண்ணோடு பாசுரம் கேட்டது. மக்கள் கூட்டத்தை அண்மிய பொழுது, ஆழ்வார்கள் போல் அலங்காரம் செய்த வண்ணமாய், அடியார்கள் சிலர் வரிசையாக நின்று, பக்தியுடன் பாசுரம் பாடும் காட்சி தென்பட்டது.
நண்பர் சொன்ன நாளைய நம்பிக்கையும் தென்பட்டதுபோலவே தோன்றியது. ஆம், பாசுரம் பாடியவர்களுள் இளையவர்களும் இருந்தார்கள். ஆகா இதுவல்லவோ நற்பணி என எண்ணிக் கொண்டிருந்தவேளையில், 'பெருமாள் வைர அலங்காரத்தில் காட்சி தாறார், சேவிச்சுங்கோ..' நண்பர் சொன்னார். ரங்கநாதரைத் தேடி என் கண்கள் சுழன்ற கணத்தில் விழிகளில் விழுந்த அந்தக் காட்சி அச்சம் தருவதாயிற்று.


ஆழ்வார்கள் பாசுரம் பாட அகமகிழ்ந்து கேட்கும் ரங்கநாதரைக்காண திரும்பிய என் விழிகளின் திரையில் ஸ்ரீரங்கநாதரும், நாச்சியாரும் மேடையில் வீற்றிருக்க, சூழவும் ஆயுதம் தரித்த சீருடைக் காவலர்கள். தூரத்தே செல்கையில் கேட்ட பாசுரத்தின் இனிமை மறந்துபோயிற்று. சூழல் ஏற்படுத்திய பக்திப் பரவசம் பறந்து போயிற்று.
கரும்படை காவல் சூழ வீற்றிருக்கும் அரசியலாளர் போலான இறையவரைப்பார்க்க முடியவில்லை.
விவரம் தெரிந்த நாள்முதலே, இராணுவ அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்ததாலோ என்னவோ, ஆயுதந்தரித்த வீரரைக் கண்டதும், அருவருப்பும் அச்சமும் இணைந்தே வருகிறது. என்ன செய்ய?

ஏன் இப்படி ? .....

'பெருமாள வைர அலங்காரத்தில பாரக்க புண்ணியம் பண்ணிருக்கோணும்.....' நண்பர் ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்...

26 comments:

குமரன் (Kumaran) said...

மலைநாடான் ஐயா, நீங்கள் சொன்னது போல் திருவரங்கம் வைணவத் திருத்தலங்களுக்குள் முதன்மையானதாகத் தான் கருதப்படுகிறது. ஆழ்வார்களைப் போல் திருவுருவம் தரித்து பாசுரங்களை அரங்கன் முன் அபிநயத்துடன் பாடுபவர்களை அரையர் என்று சொல்லுவார்கள். இந்த அரையர் சேவை இராமானுஜர் காலத்தில் தொடங்கியது. திருவரங்கத்திலும் வில்லிபுத்தூரிலும் இந்த அரையர் சேவை தற்போதும் நடைபெறுகிறது. மற்ற திருத்தலங்களில் அந்த சேவையைச் செய்தவர்கள் இல்லாமல் போனார்கள்.

நான் பலமுறை திருவரங்கம் சென்றுள்ளேன். ஆனால் ஆயுதம் தாங்கிய சீருடைக் காவலர்களைப் பார்த்ததில்லை. இது அண்மைக்கால ஏற்பாடு என்று எண்ணுகிறேன். தீவிரவாதத்தின் மிரட்டல் திருவரங்கத்திற்குள்ளும் வந்துவிட்டது போலும்.

மலைநாடான் said...

குமரன்!
நீங்கள் சொல்வது சரியென்றே கருதுகின்றேன். நான் சென்ற சந்தர்ப்பத்தில் வேறுசில முக்கிய கோவில்களிலும், இந்த ஏற்பாடு இருக்கக் கண்டேன். அதைக்குறையாக நான் கொள்ளவில்லை.கவலையுடனே நோக்கினேன்.

மற்றும்படி இந்தப் பதிவின் மூலம் சுட்ட விரும்பியது, நீங்கள் குறிப்பிட்ட அரையர் சேவையின் சிறப்பையே.

சில நிகழ்வுகளை வெறுமனே மதஞ்சார்ந்த சடங்குகளாக என்னால் பார்க்க முடிவதில்லை. அதற்கப்பாலும் ஒரு சமுகத்தின் பண்பாட்டுக் கோலமாக திகழ்கிறது என்பதே என் அபிப்பிராயம்

தமிழ்நாட்டில் நான் பார்க்க விரும்பிய மற்றொரு பண்பாட்டுக் கோலம் அழகர் ஆற்றில் இறங்குவது. இவ்வைபவத்தில் நிறையக் கிராமியக்கலைவடிவங்களைக்காணலாம் எனக் கேள்விப்பட்டேன். இதுபற்றி நீங்கள்மேலதிக தகவல் தரமுடியுமா?

தங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி!

குமரன் (Kumaran) said...

மலைநாடான் ஐயா. நான் தற்போது கூடல் வலைப்பூவில் எழுதிவரும் 'மதுரை' தொடரில் சித்திரைத் திருவிழா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அப்போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைப் பற்றி எழுதுகிறேன்.

மணியன் said...

சித்திரை திருவிழா இப்போதுதானே, சித்திரா பௌர்ணமி அன்று முடிந்தது. அன்பர் சிவமுருகன் அதனை அழகாக பதிவு செய்திருந்தாரே ! இங்கே

மலைநாடான் said...

நன்றி மணியன்!

உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், சுட்டிக்கும், மெத்த நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மணியன் ஐயா. நான் அங்கிருந்து தான் படங்களை எடுத்துக் கொஞ்சம் விரிவாகப் பதிக்கலாம் என்றிருக்கிறேன். சிவமுருகனிடம் இதற்காக அனுமதியும் வாங்கிவிட்டேன். :-)

கானா பிரபா said...

சிறீ ரங்கத்தின் ஒரு கோபுரபீடத்தை நிர்மாணிக்க இளையராஜா பெரும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி கொடுத்ததாகவும் கேள்வி.

நன்றி
கானா பிரபா

வல்லிசிம்ஹன் said...

மலைநாடன், நீங்கள் குறிப்பிடும் அரையர் சேவை பரம்பரையாக சில குடும்பத்தாரால் மட்டுமே நடத்தப்படும் வைபவம்.
அவர்கள் மகிழ்ந்து நெகிழ்ந்து ஆடும் போது அற்புத செவை கிடைக்கும்.என்ன செய்வது சாமியையெ மிரட்டும் அளவு களவு மலிந்து விட்டது.அரங்கனாதன் பார்க்காத நிகழ்வுகளா? சிரித்துக் கொண்டிருப்பான்.

மலைநாடான் said...

பிரபா!

நீங்கள் சொல்வது சரி, ஆனால் சிறு திருத்தம்.இளையராஜாவின் இசைநிகழ்ச்சிப்பணம் கோபுரத்தின் ஒரு தளத்தினை அமைக்கவே உதவப்பட்டதென்றும், இந்த வேண்டுகோளை அவருக்கு வைத்தது அகோல பீடம் சுவாமிகள் என்றும் வாசித்த ஞாபகம். தெரிந்தவர் உறுதிப்படுத்தினால் நாமும் அறிந்துகொள்ளலாம்.
நன்றி!

மலைநாடான் said...

வள்ளி!
இப்பதிவின் நோக்கினை நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள். இது தொடரபாக நண்பர் யோகன் சில கருத்துக்களைச் சொல்லியுள்ளார். தொழிநுட்ச்சிக்கல் காரணமாக அவர் பதிவு கோவையாக இல்லை. இதைப்பார்த்தபின் அவர் மீண்டும் தன் கருத்தைப் பதிவு செய்வார் என நம்புகின்றேன். அதன்பின்உங்களுக்கான கருத்துப் பகிர்வை முழுமையாகத் தருகின்றேன்.
நன்றி!

யோகன்!
உங்கள் கருத்துக்களை மீண்டும் ஒருமுறை பதிவு செய்யமுடியுமா?
நன்றி!

வெற்றி said...

மலைநாடான்,
நல்ல பதிவு. உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருந்தாலும், இன்னும் ஒரு முறையவது தமிழகத்திற்குச் செல்லவில்லையே எனும் ஏக்கமும் வருத்தமும் எனக்குண்டு. எம் முன்னோர்கள் கட்டிவைத்த கலைச்சுவடுகளை பார்க்க வேண்டும் எனும் தாகம் என்றும் உண்டு. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் TLC [The Learning Channel] எனும் அமெரிக்க தொலைக்காட்சி நிலையம் தஞ்சைப் பெருங்கோயிலைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை[Documentary] ஒளிபரப்புச் செய்தார்கள். அதில் அவர்கள், 1000 வருடங்களுக்கு முன் எப்படித் தமிழர்கள் இவ்வளவு உயரமான கோயிலைக் கட்ட முடிந்தது என வியந்தனர். எம்மினத்தின் அடையாளச் சின்னங்கள் இவை. இவற்றை அழியாது பேணிப்பாதுகாக்க வேண்டியது உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரினதும் கடமை.

முத்துகுமரன் said...

திருவரங்கம் ராஜகோபுரத்தின் ஆறாம்நிலை உபயதாரர் திரு. இளையராஜா,மற்றபடி இசை நிகழ்ச்சி நடத்தினாரா என்பது எனக்குத் தெரியாது...

Anonymous said...

மலைநாடன்! நல்ல பதிவு!
யான்; திருவரங்கன் மேல்;சுஜாதாவில் எழுத்துக்களால் ஈர்க்கப் பட்டவன்; இந்த அரையர் சேவை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நான் 2004ல் சென்னையில் ஆழ்வார் திருநகரில் தங்கியிருந்த போது; இவர்கள் கொடி குடை ஆலவட்டத்துடன் ,கும்பமும் கொண்டு ஆடிப் பாடிச் சென்றதைக் கண்ணுற்றேன்.ஆனால் திருவரங்கனைத் தரிசிக்க முடியவில்லை. சில சமயம் அடுத்த தடவை பார்க்க முடியுமோ,,?, என்ற நிலையற்ற வாழ்க்கையையுடைய என் உறவுகளையும்;நண்பர்களையும்; பார்த்து; என்றும் இருக்கப்போகும் திருவரங்கனைப் பார்த்த திருப்தி அடைந்தேன்.
"'பெருமாள வைர அலங்காரத்தில பாரக்க புண்ணியம் பண்ணிருக்கோணும்"

இப்படியான பசப்பு வார்த்தைகளில் எனக்கு ,நம்பிக்கையில்லை.அயனோ;அரனோ வெறும் துளசியிலே ஜொலிப்பவர்கள், வைரம்;வைரூடியம்;தங்கமெனக் கோவில்களை; திறைசேரிகளாக மாறவைத்து. ;ஏகே 47 காவலிட்டு,பக்தர்களைத் துப்பாக்கியைச் சேவிக்க வைத்துள்ளது மனதுக்கு நிம்மதி தேடிவருபவர்களுக்கு மகிழ்வளிக்கக் கூடியதல்ல!;இவை தேவையா? என்பதை சிந்தித்து மாற்றம் கொண்டுவரவேண்டியது. ஆத்தீகர் கடன்.
யோகன் - பாரிஸ்

மலைநாடான் said...

// சிறீ ரங்கத்தின் ஒரு கோபுரபீடத்தை நிர்மாணிக்க இளையராஜா பெரும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி கொடுத்ததாகவும் கேள்வி//

பிரபா!
நீங்கள் கோபுர பீடமென்றே சொல்லியுள்ளீர்கள். நான்தான் சரியாகக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.
நன்றி பிரபா!

முத்துக்குமரன்!
தகவலுக்கு நன்றி. இளையராஜா இசைநிகழ்ச்சி நடத்தினார் என்பது உண்மைதான். நான் வீடியோ பிரதியில் அந்நிகழ்ச்சியைப்பார்த்திருக்கின்றேன்.

மலைநாடான் said...

வெற்றி!
நீங்கள் சொல்லியவை உண்மை. மறைந்துபோகும் கலைக்கருவூலங்களைக் காக்கவேண்டியது அனைவரதும் கடமை.

மலைநாடான் said...

வள்ளி!

இப்பதிவின் எனது நோக்கம், நீங்கள் குறிப்பிட்டுள்ள அரையர் சேவையினைப் பெருமைப்படுத்துவதாகும். இத்தகைய நிகழ்வுகள் சமய மரபுகளைத் தாண்டியும், இன, மொழி, சமுகம், சார்ந்து நிற்பவையாகும். உண்மையில் திருவரங்கத்தில் அச்சேவையின் போது, அவர்கள் பாசுரம் பாடிய அந்த அழகை இன்னமும் மறக்க முடியவில்லை. அதிலும் இளையவர்கள் உடனிருந்தார்களென்று சொன்னேனல்லவா? அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் இச் சேவையின் சிறப்புப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குமரன் இச்சேவை பல இடங்களில் நிறுத்தப்பட்டு விட்டதைக் குறிப்பிட்டிருக்கின்றார். இத்தகைய சிறப்பு மிக்க பண்பாட்டு நிகழ்வு மறைந்து போதல் முறையாகுமா? இந்தப் பண்பாட்டு மறைதலுடன் கூடி மறைவது தமிழ் மொழியின் உயர்வுமல்லவா? இதை அழிவிலிருந்து காக்க வேண்டியது கடமை அனைவரதும் கடமையல்லவா? இந்த நிலை மாற வேண்டுமாயின் திருவரங்கம் போன்ற பெருங்கோவில்கள், அச்சேவையாளர்களை ஊக்குவித்து, பொருளுதார வளமற்ற ஆலயங்களில் உள்ள சேவையாளர்களுக்கு உதவி புரிந்து, அங்கும் அச்சேவை தொடர வழிசமைக்க வேண்டாமா? இவற்றில் வேறேதும் நடைமுறைச்சிக்கல்கள் இருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் மனமுண்டாயின் மார்க்கம் உண்டு என்பதே என் எண்ணம்.
எனது சிலுவைப்பாடு பண்பாட்டுக்கோலப் பதிவினினை வாசித்துப்பாருங்கள், மேலைத்தேயர் தங்கள் விழுமியங்களை, எவ்வளவு அக்கறையுடன் அடுத்த சந்ததிக்கு கொடுக்க முயல்கிறார்கள் என்பது புரியும். ஆதலால்தான் யோகன் சொல்லுகின்ற கருத்தை இவ்விடத்தில் இணைத்துக் கொள்கின்றேன். சுவாமிக்கு வைர அலங்காரம் முக்கியமா? வாழ்த்துப்பாக்கள் முக்கியமா? ஆழ்வார்களும், நாயன்மார்களும், பாமாலை, பூமாலையும் புனைந்து மகிழ்ந்தார்களேயன்றி, வைரங்களும் தங்கங்களுமா சாற்றினார்கள். இவை தேவையெனும்போதே, இயல்பு மாறான காவல்பணிகளும் தேவையாகிறது. அப்படி அவைசேரும் போது, பக்திநிலை மாறிவிடும் தன்மை தோன்றுகிறதல்லவா?

இவை போன்று பல்வேறு விழுமியங்களைக் கொண்டிருந்தவர்கள் ஈழத்தமிழர்கள் நாங்கள். எங்கள் முன்னோர் செய்த தவறுகளினால், எங்கள் பண்பாட்டு விழுமியங்களைப் பாராமுகமாக இருந்துவிட்டு, இருந்ததையும், இனவாதத்திடம் பறிகொடுத்துப் பரிதவிக்கின்றோம். எனது அடுத்த பண்பாட்டுக்கோலம் பதிவு எம் மண்ணின் நிகழ்வுப் பதிவாக இருக்கும். அதை வாசித்துப்பாருங்கள். எங்கள் ஆற்றாமை புரியும். வலி தெரியும்.

இக்கருத்துக்ள் யார் மனதையாவது புண்படுத்தியிருக்மெனில் மன்னிக்கவும். மனதைத் தொட்டிருக்குமெனின், வாசித்ததோடு மட்டுமல்லாது, அப்பணி தொடர ஆவன செய்யுங்கள்.

நன்றி!

மலைநாடான் said...

யோகன்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்.
நன்றி!

குமரன் (Kumaran) said...

மலைநாடான், ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டது நீங்கள் சொல்வது. உண்மை. பண்பாட்டுக் கூறுகள் அழியாமல் காப்பது முக்கியம். அரையர் சேவை என்பது பல வைணவ கோவில்களில் இருந்தது என்று தான் நான் நினைக்கிறேன். தற்போது நான் ஏற்கனவே சொன்னபடி திருவரங்கம், வில்லிபுத்தூர் (ஆண்டாளின் திருவவதாரத் தலம்) இரு இடத்திலும் யோகன் ஐயா சொன்னபடி ஆழ்வார்திருநகரியிலும் (நம்மாழ்வாரின் திருவவதாரத்தலம்) இந்த அரையர் சேவை நடக்கின்றது என்று அறிகிறேன். மற்ற இடங்களில் அரையர் சேவை (அபிநயத்துடன் பாசுரங்களைப் பாடி நடித்துக் காட்டுவது) இல்லையென்றாலும் பாசுரங்களை இறைவன் முன் பாடும் 'கோஷ்டி' என்ற முறை இருக்கின்றது. மதுரையில் இந்த பாசுரங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் குறைந்து போனதால் நாயகி சுவாமிகள் நற்பணி மன்றம் என்ற நிறுவனத்தினர் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பாசுரங்களைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மூலம் அறிந்தேன். என்னால் முடிந்த அளவு பொருளுதவி செய்து வருகிறேன். இதில் ஒரு சின்ன சங்கதி - பாசுரங்களைச் சொல்லிக் கொடுப்பவர் அந்தணராக இருந்தாலும் கற்றுக் கொள்பவர்களில் பெரும்பான்மையினர் பிற வகுப்பாரே.

மலைநாடான் said...

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது குமரன். பயிற்சியும், அதற்கான உங்கள் பங்களிப்பும் தொடரட்டும். சிறுதுளி பெரு வெள்ளம்.
வாழ்த்துக்கள்!
நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான கட்டுரை மலைநாடான் ஐயா! திருவரங்கம் காணும் ஆவல் உங்கள் எழுத்தில் அப்படியே தெரிந்தது!

குமரன் சொன்னது போல், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, ஆலயங்களுக்கும் இப்போதெல்லாம் பாதுகாப்பு, surveillance camera என்றெல்லாம் அரசாங்கம் வைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது!
இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை!

//பாசுரம் பாடியவர்களுள் இளையவர்களும் இருந்தார்கள்//

இன்னும் ஆழ்ந்து பார்த்தோமானால், அனைத்து சாதியினரும் இதைச் செய்வது தெரியும். ராமானுசர் வகுத்துக் கொடுத்த திட்டம் இது; கோயில் ஒழுகு என்றே பெயர்!

பாட்டோலை வாசிப்பவர்கள், ஸ்ரீ பாதம் தாங்குவோர் என்று இவற்றில் கடையராகக் கருதப்பட்ட மக்களை ஈடுபடுத்தினார். அழகுத் தமிழில் இவர்கள் சொல்லும் சாற்றுக் கவிகளைக் கேட்டால் அப்படியே நெகிழ்ந்து விடுவோம்.
இன்றும் இதற்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்! ஆனால் வெகு சிலரே முன் வருகிறார்கள்!

சுவாமியை சொர்க்க வாசல் சேவையின் போது தூக்கிச் சேவை சாதிக்கும் உரிமையை அந்தணர் அல்லாதவர்களுக்கு மட்டுமே அளித்தார் ராமானுசர்; சாத்தாத ஸ்ரீவைணவர்கள் என்று இவர்களைச் சிறப்பிக்கிறார்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒன்று குறிப்பிட மறந்து விட்டீர்களே!
அரங்கத்தான் இலங்கையை நோக்கித் தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!

குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்றிசை இலங்கை நோக்கி

அவன் பார்வையில் வரும் கனிவு, இலங்கையில் சாந்தம் வீசிடும் நாள் என்னாளோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அரையர் சேவையைக் கிராமிய கலையாகவும் கருதி சில தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ப்புப் பணிகளில் முனைந்துள்ளனர்.

இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ்.அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். இந்தச் சுட்டியில் காணலாம்!

http://www.arangham.com/ritrev/kaisiki/team.html

மலைநாடான் said...

ரவி!

உங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும், மிக்கநன்றி. தங்கள் கருத்துக்களுக்கான பகிர்வுகளைச் சற்றுத் தாமதமாகத் தருகின்றேன். மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

மலைநாடன்,
தங்கள் திருவரங்கன் பதிவை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி.
எங்களுக்கும் இப்படி தெய்வத்தை வைரம் காட்டி,
நீங்கள் பாருங்கோனு சொல்வதில்
பிடித்தம் கிடையாது.
பெருமாளைப் பெருமாளுக்காகவேதான் பார்க்க வேண்டும் என்ற நினைப்புதான் எப்போதும் மேலோங்கும்.

ஆனால் வழிமுறை வழிபாட்டு முறை,வழக்கங்கள் பற்றியெல்லாம்
தெரிந்தாலும், அலங்காரம் பற்றி அதிகமாகத் தெரிந்திராத காரணத்தால் எதைப் பற்றியும் கருத்து சொல்லவும் பயம் தான்.
முடிந்தவரை,
தானம்,தர்மம் என்று செலவழிப்பதுதான் எங்கள் மூதாதையர் காண்பிக்கும் வழி.
மேற்காட்டின வைரங்களில் ஈடுபாடு கிடையாது.நன்றி ஒரு நல்ல பதிவுக்கு.

மலைநாடான் said...

வல்லி சிம்ஹன்!

நிச்சயமாக எந்தவொரு ஆன்மீக மார்க்கமும், மாயைகளை முன்னிறுத்திக்காட்ட முடியாது எனும் எண்ணப்பாடு கொண்டவன் நான். இந்த நடைமுறைகள் பலவற்றிலும் காலவோட்டகளில் பல இடைச்செருக்கல்கள் ஏற்பட்டிருக்கவும் கூடும். அதை சுட்டுவதே இப்பதிவின் இறுதிப்பகுதியின் நோக்கமே தவிர வேறெந்த எண்ணமும் அல்ல. எனது மற்றைய பண்பாட்டுக்கோலங்கள் பதிவினையும் படித்தீர்களென்றால் அது தெள்ளெனப் புரியும். வெருகல் ஒருபண்பாட்டுக் கோலம் எனும் இந்தப் பதிவில் சுட்டியுள்ள திருத்தலத்தில் சென்றவாரம் இலங்கை இராணுவம் எறிகணைத்தாக்குதல் மேற்கொண்டுள்ளது. எப்படியெல்லாம் தமிழர்களின் விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன என்பதைப் பார்த்தீர்களா?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

அரையர் சேவை என்பது மிக அற்புதமான ஒன்று. இன்று வரி அதை நாதமுனிகளின் வம்சாவளியில் வந்தவர்கள் தொடர்ந்து செய்து வருவது அருமையிலும் அருமை. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உலகிற்கு தந்த பெருமை நாதமுனிகளுக்கு எப்படி உள்ளதோ தற்போது மட்டுமல்ல எப்போதும் அதை தமிழ் மண்ணிலிருந்து மறையாமல் காக்கும் பெருமை அவர் சந்ததியினருக்கு உள்ளது என்பதை பார்க்கும் போது எவ்வளவு பெரிய பொறுப்பு,எவ்வளவு பெரிய பொறுப்பு ! ஆயிரக்கணக்கான உயிரை பலி கொடுத்து ஸ்ரீரங்கத்தையும்,நம்பெருமாளையும் காப்பாற்றியவர்களின் வைராக்கியம் தான் இன்று நாம் தரிசிக்கும் பெருமாள்.திருக்கோவிலூரில் ஆரம்பமானதை காட்டுமன்னார் கோவிலில் கண்டுபிடித்து, கடைசியில் ஆழ்வார்திருநகரியில் தொகுத்ததை இன்றளவும் ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசியிலும் கேட்கக்கூடிய பாக்கியம் செய்த திருமங்கையாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் எல்லோருக்கும் என்றேன்றுமான கோடி கோடி நமஸ்காரம். பிரகாஷ், திருச்சி.(9443922723)