Saturday, May 06, 2006

தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம்

வலைப்பதிவு செய்யத் தொடங்கிய போதே இதை எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். எழுதத் தொடங்கிய சில நாட்களில் திருகோணமலை பற்றிய பதிவை எழுதத் தொடங்கி, அது தொடராக நீண்டதால் இந்தப்பதிவு தாமதமாயிற்று. ஆயினும் இதைப்போல் வேறு சில பதிவுகளும் எழுதுகின்ற எண்ணம் உண்டு. அதற்கான காரணம், எங்கள் கலைஞர்கள் குறித்த ஒர் அக்கறை அல்லது பெருமிதம் எனக் கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபலமான இளம் கர்நாடக இசைவித்தகி ஒருவரை, வானொலி நிகழ்சிக்காகச் செவ்விகண்டு கொண்டிருந்தேன். அப்போது, இலங்கைக்கலைஞர்கள் பற்றிய கருத்தாடல் வந்தபோது, இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சிலர் பற்றி நான் குறிப்பிட்டேன். அந்தச் சந்தர்பத்தில் அவர் தனக்கு அவர்களைப்பற்றி எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள், தமிழகக் கலைஞர்களுக்கு இணையான தகமை மிக்கவர்கள். இலங்கை வானொலியுட்பட, வேறுபல தொடர்பூடக முன்னிலைக்கலைஞர்கள். அத்தகைய கலைஞர்கள் பற்றி அறிந்திராத அவர், மேலைத்தேய இசைக்கலைஞர்கள் பற்றியெல்லாம் வெகு ஆர்வமாகப் பேசினார். ஏன் அப்படி? எனக்குப் புரியவில்லை. தான் சார்ந்த துறையில், அதுவும் அண்டை நாட்டுக்கலைஞர்கள் பற்றி அறியாமைக்குக் காரணம் என்ன? ( ஆனால் பாகிஸ்தான் கலைஞர்கள் பற்றிக் கதைத்தார்.) இதேகேள்வியை எங்கள் ஈழத்துக் கலைஞர்களிடம் கேட்டிருந்தால், தமிழகக் கலைஞர்கள் பற்றிய நிறையச் சொல்வார்கள்.

எங்கள் ஈழத்துக்கலைஞர்கள் பற்றி, தமிழகக் கலைஞர்களும், தமிழக மக்களும், அறியாது போனதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதிலும் பார்க்க, உலகை ஒன்றிணைக்கும் இணையத்தில், எங்கள் கலைஞர்கள் பற்றிய சிறிய அறிமுகங்களையும், அவர்களது இசை வடிவங்களையும், அவ்வப்போது பதிவாகத் தருவது நல்லதென்றெண்ணினேன். எழுதுகின்றேன்.

திருமதி பார்வதிசிவபாதம்.
இவர் யாழ்ப்பாணத்து இசைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். நீண்டகாலமாக மெல்லிசைப்பாடல்கள் பாடிவருபவர். பல்வேறு இசைக்குழுக்களிலும் பாடியவர். 80 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் , ஏனைய பிரதேசங்களிலும் நடைபெற்ற பல்வேறு கோவில் திருவிழாக்களிலும், கலைவிழாக்களிலும், நடைபெற்ற இசைக்கச்சேரிகளில் பங்கேற்றுக் கொண்டவர். இவரது தனித்துவமானகுரல்வளம், இவரது பாடல்களின் சிறப்பு. ஒரு காலத்தில் பார்வதி சிவபாதத்தின் இசைக்கச்சேரி இருப்பது, விழாவிற்கு பெருமையாகப் பேசப்பட்டதும் உண்டு.

விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த பின்னர், இவரது குரலில் , விடுதலைப்பாடல்கள் பல ஒலித்தன. கம்பீரமான அவரது குரலில், அவ்விடுதலைக் கீதங்கள் ஒருவித மிடுக்கோடொலித்தன என்றால் மிகையாகாது. தொடர்ந்து தமிழத்தேசியத்தின் இசைக்குரலாகப் பாடிடும் அவர், தேசிய விடுதலைப்போருக்காய் தன் குரலை மட்டுமல்ல, குழந்தைகளையும் கொடுத்து நிற்கும், தாய்.
அவரது குரலில் பல பாடல்கள் வந்திருந்த போதும் என்குப் பிடித்தது இந்தப் பாடல்தான். கடற்புலிகளின் ''நெய்தல்'' இசைத் தொகுப்பில் வந்த இப்பாடலுக்கு இசை அமைந்திருப்பவர், இசைவாணர் கண்ணன்.
இனி, எங்கள் ஈழத்து இசைக்குயிலின் குரலில் கடலலையே கொஞ்சம் நில்லு.....

அருகே பார்க்க கேட்க ரசிக்க பகுதியில் உள்ள Stickam player ல் 5 வது பாடல் கடலலையே கொஞ்சம் நில்லு.

கடற்புலிகளின் நெய்தல் இறுவட்டுக்குழுவினர்க்கு நன்றி!


16 comments:

வன்னியன் said...

நல்ல பதிவு.
நாளைக்கு அவவின்ர ரெண்டு மூண்டு பாட்டுக்களைத் தரவேற்றிப் பதிவு போடுறன்.

வெற்றி said...

மலைநாடான்,
நல்ல பணி. தொடருங்கள். ஈழத்து தவில் , நாதசுவரக் கலைஞர்கள் பற்றியும் எழுதுங்கள்.
"கடல் அலையே கொஞ்சம் நில்லு" என்ற பாடலை இவரா பாடினார்? அருமையான குரல் வளம். பாடலில் வரும் ஒவ்வொரு வரியையும் அழகாக உச்சரித்துப் பாடியிருந்தார். ஈழத்துக் கலைஞர்கள் பற்றி எழுதும் போது, அவர்களின் நிழற்படங்கள்[photos] இருந்தால் அவற்றையும் இணைக்கப் பாருங்கள். உன்னதமான எம் மண்ணின் கலைஞர்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என ஆவலாக உள்ளது.

கானா பிரபா said...

மலைநாடான்

நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் உண்மை, பார்வதி சிவபாத்தின் கடலலையே பாடலை நெய்தல் இசைப்பேழையின் நினைவுப்பதிவில் நானும் சிலாகித்திருக்கின்றேன்.

சனநாயகம் said...

ஆமாம். இந்த அம்மா பாடும்போது நான் மிகவும் இளமையான பெண் என்றே கருதி வந்துள்ளேன். அவரின் குரல் 18 வயதைத் தாண்டாத குரல், கணீர் என்று ஒலிக்கும். அவரை புலத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும்போது என்னால் என்னை நம்பமுடியவில்லை

மலைநாடான் said...

வன்னியன்!
நல்லது. நிச்சயம் செய்யுங்கள்

வெற்றி!
உண்மை.பாடல் வரிகளின் வீரம், துயரம், இலட்சியம், எல்லாம் அவர் குரலில் மிக அழகாக வெளிப்படுகிறது. புகைப்படங்களை இணைக்க முற்சிக்கின்றேன்

பிரபா!
உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்பதை அறிவேன்

சனநாயகம்!
இந்தப்பாடல் பதிவாகும் போதே
அவருக்கு கனிசமான வயதாயிருக்கும் எனநினைக்கின்றேன்.

நண்பர்களே!
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

இளங்கோ-டிசே said...

பார்வதி சிவபாதம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி மலைநாடன்.
....
பார்வதி சிவபாதத்துடன் எனது தாயாருக்கு நல்ல அறிமுகம் இருப்பதால் (அவருடன் ஒரே பாடசாலையில் படித்ததால்) பழைய நினைவுகளை எனது தாயாரும் நினைவுகூர்வார். இப்போது வன்னியில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

மலைநாடான் said...

டி.சே. தமிழன்!
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

பார்வதி சிவபாதம் உங்கள் தாயாரின் வகுப்பு தோழி எனக் குறிப்பிட்டதால் உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது. அவரது சொந்த இடம் அளவெட்டிதானே? இது குறித்த விபரங்கள் தந்தீர்களானால், பதிவில் சேர்த்துக் கொள்ள உதவியாகவிருக்கும்.
நன்றி!

இளங்கோ-டிசே said...

/அவரது சொந்த இடம் அளவெட்டிதானே?/
கீரிமலை(யாம்).

வசந்தன்(Vasanthan) said...

கலியாணம் முடிச்சு இருந்த இடம்தான் விழான் (அல்லது அளவெட்டி?) எண்டு நினைக்கிறன்.
அவவின்ர மகன் வீரச்சாவடைந்தது 91 இல் கட்டைக்காட்டுச் சமரில்தானே?

மலைநாடான் said...

நன்றி, டி.சே.தமிழன், வசந்தன்!

முன்பு விளம்பரங்களில் அளவெட்டி பார்வதி சிவபாதம் என அச்சிடப்பட்டதாக ஞாபகம்.

அவவின் இரு பிள்ளைகள் போராளிகள் என நினைக்கின்றேன். சமரில் மறைந்தது பற்றித் தெரியாது.
நன்றி!

Anonymous said...

இப் பாடகியின் குரல் இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்;இப் பாடலை இப்போது தான் முதல் தடவையாகக் கேட்கிறேன். இனியகுரல், ரம்மியமான இசை.
யோகன்
பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!
வருகைக்குநன்றி.

தனி மடலில் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமா?

malainaadaan@hotmail.com

கானா பிரபா said...

யோகன் அண்ணா குறிப்பிட்ட இலங்கை வானொலிப்பாடல்கள் என்னிடம் இருக்கின்றன, எனது வானொலி அனுபங்கள், ஆக்கங்களுக்கான தனித்தளம் உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் கைகூடும் போது அவற்றைப் பகிற்ந்துகொள்கின்றேன்.

வன்னியன் said...

பார்வதி சிவபாதம் அவர்கள் பாடிய பாடலொன்று (சேர்ந்து பாடியது) பதிவாக இட்டுள்ளேன். இன்னும் சில பாடல்களை இடுவேன். பதிவு போட்டபின் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

போரம்மா

வன்னியன் said...

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

Jeyapalan said...

மலைநாடான்,
உங்கள் பக்கங்களைப் பல தடவை பார்த்திருக்கிறேன். இப்பொழுது தான் பின்னூட்டம் இடுகிறேன்.
பார்வதி சிவபாதம் திருவிழாக்களில் மேடைகளில் அருமையாகப் பாடுவார். அவரின் குரலினிமைக்காக, அவரை "ஈழத்துச் சுசீலா" என்று அன்பாக அழைப்பார்கள்.

அந்தக் காலத்தில் ஈழத்துச் செளந்தரராசன் என்றும் ஒரு பாடகர் அப்படியே செளந்தரராசனின் குரலில் பாடுவாரே. அவரைப் பற்றியும் எழுதலாமே.