Saturday, April 29, 2006
சிலுவைப்பாடு - ஒரு பண்பாட்டுக் கோலம்
1998 ம் ஆண்டில் பார்க்கத்தவறியதே என எண்ணிக் கவலைப்பட்ட ஒரு பண்ணபாட்டுப் பாராம்பரியத்தை, சென்ற 13.14ம் திகதிகளில் பார்க்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது.ஐரோப்பியர்களின் பாரம்பரிய பழமை பேணுதலில் இத்தாலியர்களின் மரபு உலகப்பிரசித்தமானதே. கத்தோலிக்க மத பாரம்பரியம் சார்ந்த அவர்களது பழமை பேணுதல் இன்றைய பொழுதுகள் வரை தொடர்கிறது.
ஜெர்மனிய, பிரெஞ்சு, இத்தாலிய, பாரம்பரியங்களுடன், தமது பூர்விக பாரம்பரிய நடைமுறைகளும், மிகக் கவனமாகப் பேணப்பட்டு வருகின்ற சிறிய தேசம் சுவிற்சர்லாந்து. இதன் இத்தாலிய எல்லைப்புறமாநிலம் ரெசின் என அழைக்கப்படுகிறது. இத்தாலிய கத்தோலிக்க பாரம்பரியங்கள் நிறைந்து காணப்படும் இம்மாநிலத்தில் உள்ள சிறிய நகரமொன்றில் புனித வியாழன் புனித வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறும் சிலுவைப்பாடு நிகழ்வுகள் பிரசித்தமானதும், ரசனைக்குரியதென்றும், என் நண்பன் தெரிவித்திருந்ததனால், 98ல் குடும்பத்தினருடன் அவ்வைபவத்தைக் கண்ணுறச் சென்றிருந்தபோதும், காலநிலைச் சீர்குலைவால் அந்த வருடத்தில் அதைக் காணமுடியாது போய்விட்டது. ஆயினும் பேணுதல் என்னும் சொல்லிற்கான பொருளை அங்குணர்ந்தேன்.
ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்காக கல்வாரி மலைக்கு சிலுவை சுமந்து செல்லும் கதையினை சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரமுள்ள வழிப்பாதையில், வீதிநாடகப்பாணியில் செய்து காண்பிப்பதுதான் பிரதான நிகழ்வு. கல்வாரி மலைக்கு கிறிஸ்து அழைத்துச் செல்லப்பட்ட அந்தக்காலத்தைய ஆடை ஆபரணங்கள் முதல், வாத்தியங்கள், குதிரைப்படை வீரர்கள், அவர்களது போர்க்கவசங்கள், ஈட்டிமுதலாய ஆயுதங்கள், தீப்பந்தம் காவுவோர், அராபிய அடிமைகள், என அக்காலத்திற்குரிய அத்தனை பாத்திரங்களும் உள்ளடங்கப்பட்ட மிகப்பெரிய நகர்வல நிகழ்வு அது. இந்த நிகழ்வு நடைபெறும் அந்நகர்பகுதி கட்டிடங்கள் கூட அந்தப் பழமையைப் பேணிநின்றன. இந்நிகழ்வையொட்டி, அப்பகுதிக்கு புராதன நகர் எனப் பெயர் சூட்டி, கட்டிடங்களின் வெளிப்புறங்களிலோ, வீதிகளிலோ, புராதன வடிவமைப்புக்களில் மாற்றம் செய்யாதவாறு அந்நகரசபை கவனித்துக் கொள்கிறது. நாகரீகப் பாவனையில் வந்த மின்சார ஒளிரும் வழிகாட்டிப்பலகைகளும், தெருவிளக்குகளும் கூட குறித்த நேரத்தில் அணைக்கப்பட்டுவிடுகின்றன.
தனியே தீப்பந்தங்களின் வெளிச்சத்திலே நிகழ்வு நடைபெறும். இசைக்கப்படும் இசை, குதிரைகளின் குளம்பொலி, தீப்பந்தங்களின் செந்நிறஒளி, சூழலின் நிசப்தம், என 2000 வருடங்களுக்கு முன்னைய காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்று, ஒருமதக்கோட்பாட்டை கலைவடிவமாக நிகழ்த்திக்காட்டுகிறார்கள். மதக்கோட்பாடும், கலாரசனையும், இணையும் புள்ளியில் பார்வையாளர்கள், கதைமாந்தர்களாகிவிடுகிறார்கள். ஏசுபிரான் சிலுவையைச்சுமந்து தள்ளாடி நடந்து தடுக்கி விழும்போது, அரச அடக்குமுறைக்கு அடங்கிய மக்கட்கூட்டமாக, ஏங்கித் தவிக்கின்றனர் பார்வையாளர்கள்.
1998ல் 200 வது ஆண்டாக, அந்த நிகழ்வுகள் நடைபெறுவதனால், சிறப்பான ஏற்பாடுகளும், ஐரோப்பாவெங்கிலுமிருந்து ஆர்வலர்களும், மதப்பற்றாளர்களும் குழுமியிருந்தனர். அணைத்து ஏற்பாடுகளும் நிறைவாக நடைபெற்றாயிற்று. 65க்கும் மேற்பட்ட குதிரைகள், உரியவர்களால் கொண்டு வரப்பட்டாயிற்று. பாத்திரங்களை ஏற்கும் கலைஞர்கள் வந்தாயிற்று. ஆயினும் அழையா விருந்தாளியாக வந்த மழைமட்டும் விட்டபாடில்லை. இதுவே நம் ஊராக இருந்தால், இறைவன் ஆசீர்வதிக்கின்றான் என்று சொல்லிக்கொண்டு, அல்லது அடாது மழை பெய்தாலும், விடாது நாடகம் நடத்தப்படும் எனச் சொல்லிக்கொண்டும், வெளியில் இறங்கி ஆடி முடித்திருப்போம். ஆனால் அங்கே அத்தருணத்தில் கூடிய நிர்வாகக்குழு, பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வரப்படுகின்ற, அந்த ஆடைகள், ஆபரணங்கள், இன்ன பிற விடயஙகள் யாவும், மழையினால் பழுதடைந்துவிடக்கூடாது, ஆகவே அப்பொருட்களின் காப்பகத்தில் சென்று மக்கள் அவற்றைப்பார்க்கலாம், ஆனால் வீதிபவனி நடைபெறமாட்டாது என ஒலிபெருக்கியில் அறிவித்தது. நிகழ்வுக்கான இரு மணித்தியாலங்களுக்கு முன்னதாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. நிகழ்வை அன்று பார்க்க முடியாது எனும் ஏமாற்றம் கண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோதும், பழமையான பொருட்களை பேணுகின்ற அவர்களது அக்கறை என்னைக் கவர்ந்தது. அன்று அப் பொருட்களை காப்பகத்தில் பார்த்துவிட்டு, ஒரு தேவாலயத்தில் இருந்து மற்றுமொரு தேவாலயம் வரை செல்லுக்கின்ற அந்த நிகழ்வுப் பாதையில், அமைக்கப்பட்டிருந்த பைபிளின் பல்வேறு ஒளிச்சித்திரங்களைப் பார்த்தபடியே வீடுதிரும்பினோம்.
அன்று பார்க்கத் தவறிய அந்த காட்சி அனுபவங்கள் இவ்வருடத்தில் கிடைத்தது. புனித வியாழனில் கல்வாரி மலைநோக்கிச் செல்லும் நிகழ்வும், புனித வெள்ளியில் அன்னைமேரியுடன், மரித்த இயேசுவின் பவனியும் நடைபெறுகிறது. இரண்டுநாள் நிகழ்வுகளும், மன உணர்வுகளை அழுத்தும் வகையில் நிகழ்த்தப்படுகின்றன. இதில் எனக்குக் கிடைத்த மற்றுமொரு அனுபவம், இது ஒருமதக்கோட்பாட்டு நிகழ்வாக இருந்தபோதும், பலரும் அதை ஒரு சமூகப்பாராம்பரியமாக நோக்கினார்கள்.
அந்தப்பகுதிப்பிரசையான என் நண்பரின் நண்பர் ஒருவர், தீவிர இடதுசாரிக்கொள்கைக்ககாரர். ஆனால் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளில் அவரும் கணிசமான பங்கு வகிக்கின்றார். ஒரு சரித்திரப்பேராசிரியரான அவர், இது ஒரு சமுகத்தின் வரலாற்றுப்பதிவு. அதை பேணி அடுத்த தலைமுறைக்கு பிசகின்றிக் கொடுக்க வேண்டியது நமது காலக்கடமை என்கிறார். நிகழ்வு முடிந்து திரும்பும் வழியில், நண்பன் கேட்டான் ''மூத்தகுடிப்பாரம்பரியம் பேசும் நாங்கள் எங்கே நிற்கிறோம் ?..''உண்மைதான். நாகரீகத்தின் உச்சாணியில் நிற்கின்ற ஒரு சமூகம், தங்களது வரலாற்றுப் பாரம்பரியத்தை கச்சிதமான ஒரு கலைப்பண்பாட்டுக்கோலமாக ஒப்படைக்கும் பொறுப்போடு செயற்பட நாங்கள் நாகரீகத்தின்பேரால்....?
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்தியாவில் இதுபோன்ற நிகழ்சிகள் இன்றும் நிறைய உண்டு
நண்பர்களே!
இப் பதிவினை வாசித்த கிறிஸ்தவ நண்பர் ஒருவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், இப் பதிவின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்துள்ளேன்.
நன்றி!
your page is nice, nice , nice. Congratulations, Bye friends
எனக்கு யாழ்ப்பாணத் திருமறைக் கலா மன்றம் நடத்தும் நிகழ்வு நன்றாகப் பிடித்தது. பொதுவாக 'பாஸ்' என்று பேச்சுவழக்கில் இப்படியான நிகழ்வுகள் குறிக்கப்படுகின்றன.
இவ் விழாவை தொலைக் காட்சில் ;பார்த்துள்ளேன். இலங்கையில் நீர்கொழும்பிலுள்ள " துவ" எனும் கிராமத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடுவார்கள்.80 ல் பார்த்துள்ளேன்.
யோகன்
பாரிஸ்
வன்னியன்!
யாழ்.திருமறைக்கலாமன்றத்தின் மதநம்பிக்கைகளுக்கும் அப்பாலான நல்ல கலைப்பணிகள் பற்றிக் கேள்விப்பட்டிருக் கின்றேன்.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!
Post a Comment