Monday, October 08, 2007

கருப்பைக் காலால் உதை.

பெயரிலி ஏதோ கனக்க போபியாக்கள் பற்றி எழுதிறார் என்டதுக்காக நான் இதை எழுதுவதாக நினைக்கப்படாது.:)) சுவிஸின் இன்றைய பொழுதுகளில் க்ஸேனோபோபியா ( Xenofopia ) என வருணிக்கப்படுகின்ற சுவிஸ் உள்நாட்டு அரசியல் சர்ச்சை, குறித்த செய்திகளிவை.


சுவிற்சர்லாந்தில் என்றுமில்லாதவாறு, இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர், " இது சுவிற்சர்லாந்தின் ஜனநாயக பாராம்பரியத்துக்கு முரணானது" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இம் முறை இவ்வளவு குழப்பங்களும் நிகழக் காரணம் என்ன? SVP எனும், வலதுசாரி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களும், பரப்புரைகளுமே இவ்வன்முறையின் தோற்றுவாயெனலாம். குறிப்பாக அது வெளியிட்டுள்ள சுவரொட்யும், அதே கருத்தைக்கொண்ட பிரச்சாரங்களும் பல தரப்பின் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அதுபோலவே பல சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.




சுவிஸின் இவ்வருட தேசியதினத்தின் போதே, இந்தச் சுவரொட்டிச்சித்திரம் சிறிய அட்டைகளாக வெளியிடப்பட்டது. சுவிஸின் பகுதியில் நிற்கும் மூன்று வெள்ளை ஆடுகளில் ஒன்று கருப்பு ஆடொன்றைக் காலால் உதைத்து வெளியேற்றுவது போன்று வரையப்பட்டுள்ளது. அத்தோடு "பாதுகாப்பை உருவாக்குவோம்" எனும் வாசகங்களும் இருந்தன. இதனுடைய விளக்கமாக வெளிநாட்டவர்களின் குற்றச் செயல்களில் இருந்து சுவிஸைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் சுட்டி எழுதப்பட்டுமிருந்தது. அதற்கான காரணங்களாக அல்லது ஆதாரங்களாக குறிப்பிட்டிருந்தது, சுவிஸ் காவல்துறை வெளியிட்டிருந்த, சுவிஸில் நடைபெற்ற குற்றச்செயல்கள் சம்பந்தமான அறிக்கையிலிருந்து, வெளிநாட்டவர்களின் விகிதா சாரம் . ஆகவே பாதுகாப்பான தூய சுவிஸை உருவாக்க அணிசேருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டது.
இது வெளியிடப்பட்டபோதே இலேசாக எதிர்ப்புக்களும் கிளம்பத் தொடங்கின. இப்படியாக ஆரம்பமாகிய இந்தப்பிரச்சாரம், அக்கட்சியின் தேர்தல்பிரச்சாரமாக மாறியபோது மேலும் எதிர்ப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கின. அதன் நீட்சியாக, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரமும் நிகழ்ந்துள்ளன.





தேர்தல் பிரச்சாரத்திற்கா ஒரு கட்சியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வசனங்களை மாற்றி எழுதுவது, கிழிப்பது, போன்றவற்றை, முதல்முறையாக இந்த ஆண்டிலேதான் சுவிஸில் நான் காண்கின்றேன். இந்தளவிற்கு நிலமை செல்வதற்கு அந்தக் கட்சின் பரப்புரைகளும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்து எழுப்பப்படும் ஆட்சேபனைகளுக்கு முழு வெளிநாட்டவர்களையும் நாம் அப்பிடிச் சொல்லவில்லை, குற்றச் செயல்களைச் செய்பவர்களை மட்டுமே வெளியேற்றச் சொல்கின்றோம் என்கிறார்கள்.


இப்படிச் சொல்கின்ற அக்கட்சியின் இணையத்தளத்தில், இணைய விளையாட்டுக்களிலும் இதேவிதயத்தைப் புகுத்தியுள்ளார்கள். இதன் மூலம் சிறுவர்கள் மத்தியிலும், வெளிநாட்டவர்களுக்கெதிரான உளப்பாங்கை உருவாக்க முயல்வதாக. ஐ.நா. சபையின் மனிதஉரிமைகளமைப்பு குற்றம் ட்டியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.




வெளிநாட்டவர்மேல் வெறுப்பைக் காட்டும், க்ஸேனோபோபியா ( Xenofopia ) கருத்துருவாக்கம் என மாற்றுக்கருத்தாளர்களால் விமர்சிக்கப்படும் இப்பிரச்சாரத்தை, "தூய சுவிற்சர்லாந்திற்கான பாதுகாப்பை உருவாக்குவோம்" என முன்வைக்கின்றனர், SVP/UDC கட்சியினர். இவர்களது வேண்டுகோளுக்கு சுவிஸ் மக்கள் என்ன பதிலளிக்கப் போகின்றார்கள் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
படங்கள் நன்றி: K Image

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
நல்லதோர் விடயத்தைக் கவனத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். பரவலாக மேற்குலக அரசியலில் வெளிநாட்டவருக்கு எதிரான கருத்துக்களே; செல்லும் என்ற மனநிலை வெகுவாக வளர்ந்து வருவதன் வெளிப்பாடு இவை.
ஒரு பல்பொருள் அங்காடியில் வெள்ளைப்பிள்ளை மிட்டாய் திருடுனால் அது செய்தியல்ல;அதையே ஒரு
வெளிநாட்டவர் பிள்ளை செய்தால் தலைப்புச் செய்தி எனும் மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
இதேவேளை நம்மவர் சிலர் அடிக்கும் கூத்துக்களும் குறைந்ததல்ல.
தேர்தல் முடிவு ;;இக்கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பதாகத் தான் இருக்கும்.
பிரான்சில் நடந்ததும் இதே!!

ஏன் கறுப்பை எனப்போடாமல் கருப்பு எனப் போட்டுள்ளீர்கள்.

மலைநாடான் said...

யோகன்!

தங்கள் வரவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல், மிக மென்மையாக இவ் எதிர்ப்புணர்வு ஊட்டப்படுகிறது என்றுதான் பலரும் கருதுகின்றார்கள். ஆனால் அவர்களோ அப்படியில்லை, குற்றவாளிகளை மட்டுமே சுட்டுகின்றோம் என்கிறார்கள்.

எதுவாயினும் ஐரோப்பா முழுவதும் இப்போ முடுக்கப்பட்டுள்ள இவ்விடயம், இன்னும் சில காலங்களில் பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடும்.

கருப்பு = கறுப்பு என்ற எண்ணத்தில் எழுதிவிட்டேன்.

Vasanthan said...

கருப்பையைக் காலால் உதைக்கிறது பற்றியோ கருப்பையின் காலால் உதைக்கிறது பற்றியோ கதைக்கிறியள் எண்டு நினைச்சன்.
வாசிச்சு முடிஞ்சபிறகும் தலைப்பு விளங்கேல.

கறுப்பைக் காலால் உதை எண்டு சொல்ல வந்தியள் எண்டு நினைக்கிறன்.

நீங்கள் எப்ப தொடக்கம் கருப்பு எண்டு எழுதத் தொடங்கினியள்?
சொல்லிப் போட்டு மாறக்கூடாதே? நாங்களும் வந்திருப்போமெல்லோ?

மலைநாடான் said...

வசந்தன்!

வாங்கோ கன நாளைக்குப் பிறகு.:)

கறுப்பில இருந்து, கருப்புக்கு சொல்லாமல் மாறினது பிழைதான். மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

Anonymous said...

தேர்தல் பிரச்சாரம் நேரம் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதன் மூலம் அந்த கட்சியினர் எதிர்பார்ப்பது என்ன? தாய்நாட்டு மக்கள் இந்த கருத்துக்களால் திசை திருப்பப்படுவார்கள் என்ற அரசியல் நோக்கமாகவும் இருக்கலாம் அல்லவா! எனவே தேர்தல் முடிவுகள் நிச்சயம் சுவிற்சலாந்தின் உண்மையான ஜனநாயகத்தன்மையை உலகத்திற்கு எடுத்தியம்பும்!

கொழுவி said...

வசந்தன்
அண்ணையும் அங்காலை போக முயற்சிக்கிறார் போல. ஏற்கனவே ஒருவர் போயிட்டார். :)))

மலைநாடான் said...

கீர்த்திகன்!

நீங்கள் சொல்வது உண்மையே. தேர்தல் முடிவுகள் பலராலும் இதே நோக்கோடு எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்கும் வரவுக்கும் நன்றி

மலைநாடான் said...

கொழுவி!

எங்கால போக முயற்சிக்கின்றேன்?, எனக்கு முன்னால போனவர் யார்?,
கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுமன் :)