Friday, March 16, 2007

அவன் நினைவுக்கு வந்தான்.

அந்தப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. ஆமாம் சதாம் எனும் ஒரு சர்வாதிகாரியின் பெயர் மெல்ல மெல்ல உலகில் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால் சதாமின் வாழ்வினூடு மறக்கப்படக் கூடாத பல விடயங்கள் உண்டு.

ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வரும் வழியில்தான் அவனைச் ச்ந்தித்தேன். சத்தார் என்ற வகையில் ஏதோ பெயர். அவனும், அவனது மனைவியும், அழகான இரண்டு குழந்தைகளுமாக வந்திருந்தனர். அவன் ஒரு குர்த்திஷ் விடுதலைப்போராளி. அவன் மனைவி ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியை. பிள்ளைகள் ஏதுமறியா இளமைப்பருவம். குர்திஸ் விடுதலைப் போராட்டம் தந்த கசப்பான அனுபவங்ளை மனத்திலும், காயங்களை உடம்பிலும் கொண்டிருந்தான். எத்தனையோ பேர் இருந்த அந்த அகதிகளுக்கான முகாமில், ஏறக்குறைய அவனது மனநிலையே , அப்போது எனக்கும் இருந்ததால் ஏதோ ஒரு நெருக்கம் எங்கள் மத்தியில் தோன்றிற்று.

ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில், இரண்டாம் உலகப்போரில் பாவிக்கப்பட்ட, பழைய இராணுவமுகாமிருந்த கட்டடிடத்தில், எந்தவிதமான அறிமுகங்களும் பொழுதுபோக்கு வசதிகளும் அற்ற ஒருநிலையில், உணவு நேரங்களில், உணவு மண்டபத்தில் அவனது குழந்தைகளின் சிரிப்பினூடு ஆரம்பமாகி எங்கள் அறிமுகம், அங்கிருந்த ஒரு வாரகாலத்தில், சற்று நெருக்கமாகவும், பரஸ்பரஆறுதலாகவும், இருந்தது. இருவருக்கும் தெரிந்தளவிலான ஆங்கிலத்தில் எங்கள் உரையாடல்கள் அமைந்தன. அப்படியிருந்தும், உரையாடல்களின் உட்பொருள் இருவருக்கும் ஏற்புடையதாகவோ, பொருந்துவதாகவோ, அல்லது ஒத்ததாகவோ இருந்ததினால், அவனது மனைவி தயாரிக்கும் கறுப்புத் தேநீரைக் குடித்தபடி நள்ளிரவு தாண்டியும் அவை நீண்டன. பெரிய நிலப்பரப்பில் மின்விளக்குகள் தந்த குறைந்த ஒளியில், பருத்த மரங்களின் நிழல்கள் தரும் இருள் அச்சத்தையும், அவன் பிள்ளளைகள் தூங்குவதற்காக சிறிய ரெக்டகோடரில் மெலிதாக ஒலிக்கவிடப்பட்டிருந்த குர்திஸ்விடுதலைப்பாடல்கள், எங்கள் உரையாடல்களுக்கு பின்னணியிசையாக சேர்ந்தன.

நீண்ட காலமாக குர்திஸ்விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது அரசியல் செயற்பாட்டுப் பொறுப்புக்குள்ளிலிருந்த கிராமத்தின் மீதுதான் சதாம் விஷவாயுக் குண்டுகளை வீசி ஓரேநாளில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்களை, சிறுவர் பெரியவர், பெண்கள் எனும் பேதமில்லாமல், கொண்றொழித்திருந்ததிலிருந்து, அப்போராட்டத்தை அழித்தொழிக்க, ஈராக், ஈரான், துருக்கி, என எல்லா நாட்டு அரசுகளையும், சந்தர்பத்துக்குத் தககவாறு அமெரிக்கா பாவித்துக் கொண்டது பற்றியும், குர்திஸ் போராளிகள் எவ்விதமாக இந்தச்சூழ்சிகளுக்குப் பலியாகினார் என்பதையும் விலாவாரியாகப் பேசினான். சோகமும், கோபமும், நிரம்பிய கதைகள் அவை. இரத்தமும், சதையும் சிதறிய துயரங்கள் அவை.

அண்மையில் சதாம் தூக்கிலிடப்பட, எல்லோரும் சதாமைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். சதாமின் மரணம் சிலருக்கு மகிழ்ச்சியாகவும சிலருக்குத் துக்கமாகவும் இருந்தது. ஆனால் அவனுக்கு எப்படி இருந்திருக்கும். அது சதாமுக்கு நூற்றிநாப்பது சொச்சம் சுனி முஸ்லீம்களின் கொலைவழக்குககாக வழங்கப்பட்ட மரணதண்டனை. ஆனால் அதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னால் நடத்தபட்ட, எண்ணிக்கையில் அதி கூடிய குர்த்திஷ் மக்களைக் கொன்ற விடயங்கள் நீதிமன்றுக்கு ஏன் வரவில்லை. அல்லது அவை குறித்த விசாரணைகளும், வழக்குகளும், விசாரிக்கப்படுதற்கு, முன்னதாகவே, சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்கக் கூடிய அவன் என்ன நினைத்திருப்பான்.

சரி. இதையெல்லாம் இவ்வளவு நாளுக்குப் பிறகு நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களா? இரண்டொரு தினங்களுக்கு முன், ஐரோப்பியத் தொலைக்காட்சியொன்றில், சிறிலங்காவின் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் காங்கிரசின் அமைச்சர் ஒருவர், புலிகள், தங்களை, முஸ்லீம்களை அங்கீகரிக்க வில்லையென்பதற்காகத்தான் தாங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றோம். அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றோம், என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போதும் அவன் நினைவுக்கு வந்தான்.

4 comments:

சயந்தன் said...

//இரண்டொரு தினங்களுக்கு முன், ஐரோப்பியத் தொலைக்காட்சியொன்றில், சிறிலங்காவின் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் காங்கிரசின் அமைச்சர் ஒருவர், புலிகள், தங்களை, முஸ்லீம்களை அங்கீகரிக்க வில்லையென்பதற்காகத்தான் தாங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றோம். அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றோம், என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போதும் அவன் நினைவுக்கு வந்தான்.//

அந் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்கு கொஞ்சம் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் மலைநாடான். கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

மலைநாடான் said...

சயந்தன்!

முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

ஒரு காலத்தில் குர்திஸ் இனப்போராளிகளுக்கெதிராக, சதாம் அமெரிக்காவோடு சேர்ந்து செய்த வரலாற்றுத் தவறை, இலங்கை முஸ்லீம் தலைவர்கள் செய்கிறார்கள் எனக் கருதுகின்றேன்.
புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை, அல்லது புலிகளை எதிர்கிறோம் என்று சொல்லியவாறு இவர்கள் அரசுடன் இணைந்து தமிழீவிடுதலைப்போரை அழிக்க முற்படுவது, அல்லது துணைப்போவது, என்பது பின்னாட்களில் அவர்களுக்குப் பாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்தும் என்பதையே அவ்வரிகளில் உணர்த்த முயன்றேன்.

இப்போது சற்று விளக்கமாக இருக்குமென நம்புகின்றேன்.

நன்றி.

✪சிந்தாநதி said...

மலைநாடான்

அரசியல் என்பதுவே எங்கும் சூதும் வாதும் நிறைந்ததுதான் உலகெங்கிலும் அதைப் பார்த்து வருகிறோம். யாரும் எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை.

மலைநாடான் said...

சிந்தாநதி!

// யாரும் எதிலிருந்தும், எதுவும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.//

சரியாகச் சொன்னீர்கள்.

கருத்துக்கு நன்றி.