Tuesday, March 13, 2007

ஆண்டொன்று போனால்..




எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்பது மட்டும் அவாவுற வைக்கிறது. வலைப்பதிவு எழுத வந்த இந்த ஒரு வருடகாலத்திலும் அனுபவித்திராத அவஸ்தையிது. நினைத்த மாத்திரத்தில் நினைத்தை எழுதிவிடுவது வழக்கம். ஆனால் இன்று, நின்று நிதானிக்கத் தோன்றுகிறது. எதையும் தவறவிட்டுவிடக் கூடாது எனும் எண்ணமே தவற வைத்துவிடும்போல் இருக்கிறது. ஆனாலும் எழுதவேண்டும்..

எழுத்து, வாசிப்பு, எனத்தொடங்கிப் பிரியப்பட்ட கலைகளிலெல்லாம் தொட்டுப்பார்க்கும் சிறுபிள்ளை ரசிப்பு ரகம் என்னது. அதுவே அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம், எனும் சமுத்திரக்கரைகளிலும் சற்று நடந்துவரத் தூண்டியது. இதனால் பார்பவர்க்குக் குழப்பங்களின் கலவைதான் இந்த மலைநாடான்.

எண்ணியதிலெல்லாம் முயன்று, முட்டி,மோதி,விழுந்து, எழுந்த போதினில், புலப்பெயர்வு. புதிய வாழ்க்கையில் முன்னையதின் எச்சங்கள் எதுவும் தொடராதிருக்க வேண்டும் என்பதில் கவனமாயிருந்தேன். ஆயினும் கலைகள் எதுவும் என்னை கைகட்டிநிற்க விடவில்லை. ஆடியகால்கள் ஆடித்தான் ஆக வேண்டுமென அடம்பிடித்தன. புலத்தின் இறுக்கத்திற்கு, இந்தத் தளர்வும் வேண்டும் போல் தோன்றிற்று. ஆனாலும் அனுபவம் தந்த பட்டறிவின்பால் நின்று நிதானித்துச் செயற்பட முடிந்தது. அப்படியிருந்தும், கலையுலகில் கால்வாரலுக்கென்ன பஞ்சமா? பட்டு,நொந்து விட்டு விலகி நின்றேன். ஆனால் எந்தப் பொழுதிலும், ஏழுவயதில் என் அன்னை எனக்குக் கற்றுத்தந்த வாசிப்பு என்பது மட்டும் ஒட்டிக்கொண்டே வந்தது. அந்த வாசிப்பின் வரிசையிலே வலையுலகும் இருந்தது. சென்ற ஆண்டு மார்ச்மாதம், கானா.பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடியால் தமிழ்மணத்துக்கு வந்தேன். எழுத்துக்கள் சில எனைக் கவர்ந்தது. சரி நாமும் ஒரு பாராட்டுச் சொல்லிவிடலாமே என முயன்றபோது முடியவில்லை. உதவிப்பக்கங்கள் தந்த அறிவுறுத்தலின் வழிநடத்தலில் வந்து விழுந்த இடம்தான் என் முதலாவது வலைப்பூவான குறிஞ்சிமலர். முடியாததென்று எண்ணியதொன்று, எளிதில் சாத்தியமாயிற்றே எனும் நிறைவோடு அன்று நித்திரைக்குப் போனேன்.

பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை மலரும் பூ. நாமும் குறைந்தது பன்னிரெண்டு வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாம் என்பதற்கும், மலைநாடான் என்பதற்கும் ஏற்புடையதாக குறிஞ்சிமலர் எனப் பெயரிட்டேன் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறியது அப்போது எனக்குத் தெரியவில்லை). என்ன எழுதுவது?. நமக்கு எப்போதும் பிடித்தமான, சாதரண மனிதர்களைப் பற்றிக் கொஞ்சம் பதிவு செய்வோமே என்றுதான் எண்ணினேன். ஆனால் முதலில் எழுதவேண்டுமென எண்ணிய ஒரு சாதாரண மனுசியைப்பற்றி இன்னமும் எழுதவேயில்லை. ஏன்?.. பிறகு சொல்கின்றேன்.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பழக்கம். சிலருக்கு எழுதுவதென்றால் இசைவேண்டும், சிலருக்கு இரைச்சல் வேண்டும். எனக்கு இவையிரண்டையும் விட முக்கியம் எழுதும் தளத்தின் வடிவம். அதுவென்னவோ படிக்கும் காலத்திலேயே அப்பியாசக்கொப்பி வேண்டினால், அதற்கு அழகாகச் சட்டைபோட்டு, பெயரிடுவதுவரைக்கும கணகச்சிதமாய் நடக்கும். படிப்பது..?.. :)))).

இலவமாகத் தந்த அடைப்பலகையை இரவு பகலாகக் கழட்டிப்பொருத்தினத்தில், HTML என்ற அந்த மொழி கூட சற்றுப் புரிந்ததுபோல் தெரிந்தது. சரி வெட்டி ஒட்டி விளையாடிப் பார்த்தில், நானும் நாலுந் தெரிஞ்ச மனுசனாகிப்போனேன். அதனால்தான் இன்று என் அடைப்பலகைகள், இரண்டுங்கெட்டானாய் நிற்கின்றன. சோடிச்சால் மட்டும் போதாது, ஏதாவது எழுதவும் வேணும்தானே. தெரியாத விசயங்களை விட்டு, தெரிந்தவற்றைச் சொல்வோம் என எண்ணிய போதினில் என் தேசம் பற்றிய கதைகளே அதிகம் நினைவுக்கு வந்தன. ஆரம்பத்தில் ஆர்வமாய் வந்த நண்பர்கள் சிலர், அரசியற் பேச்சுக்கள் வந்தபோது, விலகிக் கொண்டார்கள். வேறு சிலர் விரும்பி வந்தார்கள்.

எழுதுவது என்பது விருப்பமாயினும், எழுதுவதற்குச் சற்றுச் சோம்பேறிதான். ஆனால் தீர்மானித்து இருந்துவிட்டால், முடிக்காது எழும்புவதில்லை. குறிப்புக்கள் எதுவும் வைத்துக்கொள்ளாது, எண்ணப்போக்கிலே எழுதிக்கொண்டிருக்கும்போது, இடையில் நிறுத்திவிட்டால், திரும்பவும் அது எழுதுப்படுவதென்பது அநேகமாக இல்லை. அப்படிக் குறையாக நிற்கும் பதிவுகள், சேகரிப்பில் நிறையவே உண்டு. அதற்குள் முன்னர் குறிப்பிட்ட அந்த வயதான மனுசியும் இருக்கிறாள். இந்தத் தொடரெழுத்துப் போக்குக்கு தொடும் விசயங்களும் காரணமாகலாம். ஆனாலும் வலைப்பதிவுலகில், எழுதுவதிலும் பார்க்க வாசிப்பதே எனக்கு எப்போதும் பிடித்தமாயிருந்தது. எழுதத் தொடங்கிய பின்தான், தென்தமிழீழத்து, தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவு செய்யப்படாதிருப்பதை அறிந்தேன். அதை எழுத முற்பட, தளத்தின் வடிவம் உறுத்தத் தொடங்கியது. உடன் உருவாகியதுதான் எனது இரண்டாவது வலைப்பூவான மருதநிழல். ஒன்றிலேயே ஒழுங்கா எழுதாத பயலுக்கு, இத்தனை வலைப்பூ தேவையா என எண்ணிய நண்பர்களே, என் வலைப்பூக்களின் பின்னால் உள்ள பிறப்பு இரகசியம் இதுவே. அதன் நீட்சி
யே நெய்தற்கரையும், முல்லைவனமும்.

வலைப்பதிவுலகம் விசித்திரமானது. இங்கே எல்லோரும் எழுதுபவர்கள், எல்லோரும் வாசிப்பவர்கள். ஆகையால் ஆரோக்கியமான ஒரு கருத்துக்களம் என்ற எதிர்பார்புடனேயே வந்திருந்தேன். வந்த ஒரு சில பொழுதுகளிலே தெரிந்துவிட்டது இதன் சீத்துவம். நமக்கென்ன நமது பாட்டுக்கு ஒரு ஓரமாய் செல்வோம் என நடந்த போதினில் பல நல்ல நண்பர்களைச் சந்திக்க முடிந்து. நான் பார்க்க வளர்ந்த கானா.பிரபா, எல்லோருடனும் பின்னூட்டத்தால் உறவாடும் யோகன் பாரிஸ், நகைச்சுவையும் நல்லிதயமும் கொண்ட வசந்தன், சயந்தன்,( இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.) அசமாத்தமில்லாமல் அட்டகாசம் பண்ணும் சின்னக்குட்டி,( வசந்தனின் பின்னவீனத்துவப்பதிவில், அத்துவித ஒப்பீட்டை கமுக்கமாகப் போட்டிட்டு கம்மென்று இருப்பதைப்பாருங்கள்), பெயரற்றவன் எனச்சொன்னாலும் பல பெயர்களுக்குச் சொந்தக்காறனான பெயரிலி, ( இவர் வலையில் என்னிடம் சிக்கியதே ஒரு சுவாரசியமான அனுபவம்தான்.) எல்லோரிடத்திலும் இலகுவில் பழகிடும் மதி,பதிவர் வட்டத்தில் அமைதிப்பூங்காவாக இருக்ககூடிய சந்திரவதனா, தனித்துவமான எழுத்து நடையால் எல்லோருக்கும் தெரிந்த தமிழ்நதி, சிநேகிதமான சிநேகிதி, இப்போ வந்த வி.ஜெ. சந்திரன், என ஈழத்து நண்பர்கள் வரிசை நீள்கையில், தமிழக நண்பர்கள் பட்டியல் இன்னும் நீண்டது. திரு, பொன்ஸ், செல்வநாயகி, குமரன், ஆழியூரான், ஜி.ராகவன், ஞானவெட்டியான், ஜெகத், சிந்தாநதி, பாலபாரதி, கீதா.சாம்பசிவம், எனத் தொடர்கிறது....
இதற்கப்பால், அவ்வப்போது பல நண்பர்கள் வந்து உறவாடி, உற்சாகமூட்டுகின்றார்கள். எல்லோர்க்கும் நன்றிகள்!

வலைப்பதிவில் எழுதும் எல்லோரும், தமது திருப்த்திக்காகத்தான் எழுதுகின்றார்கள். அதே போல்தான் நானும். ஆனால் நமது எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? என அறிய எல்லோர்க்கும் விருப்பம் இருப்பது இயல்பே. அதே எண்ணம் எனக்குமுண்டு. ஏனெனில் எம் எழுத்துக்களை வாசிப்பவர்களது நேரத்தை நாம் எடுத்துக்கொள்கின்றோமே, அது அவர்களுக்குப் பயனுடையதாகவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்வதாயின் எப்படி என்று எண்ணிய போது எண்ணத்தில் வந்தவர்கள் சிலர்.

தெளிந்த நீரோடைபோன்ற எழுத்துக்குச் சொந்தக்காறர்களாக இருக்கக்கூடிய சிலரில், வலைப்பதிவுகளின் மூலம் அறிமுகமான செல்வநாயகி. தமிழகத்தைச்சார்ந்த இவரது பார்வைக்கும், ஈழம்சார்ந்தவர் பார்வைக்கும் வேறுபாடிருக்கலாமே எண்ணியபோது, ஈழம் சார்ந்த ஒருவருடைய கருத்தையும் இணைத்துக் கொள்ளலாம் எனத்தோன்றியது. அந்த எண்ணம் வந்தபோது கூடவே இன்னுமொரு யோசனையும் வந்தது. வலைப்பதிவுகளுக்கப்பாலிருந்து வாசிக்கும் ஒரு நண்பரைத் தெரிவு செய்யலாமே என்று. அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தார் நண்பர் ஏ.ஜே.யோகராஜா. சரி இவர்களிருவரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களாயுள்ளார்கள், வலைப்பதிவு வட்டத்திற்கப்பால்இளையவர்கள் சிலர் என எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகின்றார்கள். ஆகவே இளையவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தெரியாது போய்விடுமே என்று சிந்திக்கத் தோன்றியது. அதை நினைத்த போது, நினைவுக்கு வந்தவர் வலைப்பதிவு நண்பர் ஜெகத். மூவரிடமும் மின்மடல் மூலம் எண்ணத்தைச் சொல்லியபோது, எந்தவித மறுப்பும் சொல்லாது, எழுதித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள் சொன்ன போலவே எழுதிக்கொடுத்துள்ளார்கள். இந்த மூவருக்கும் எனக்குமுள்ள பரிச்சயமும், பழகுதளங்களும், வெவ்வேறானவை. ஆனால் மூவருடைய பதிவுகளும் ஏறக்குறைய ஒரே கருத்தியலில் வந்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என் எழுத்துக்களைவிடப் பன்மடங்கு சுவாரசியமான அவர்களது கருததுக்கோர்வைகள் அனைத்தும் , நான் முக்கியமென எண்ணி எழுதிய பதிவுகளைத் தொட்டுக்காட்டியபோது, நம்மாலும் ஏதோ எழுத முடிந்திருக்கிறது எனும் திருப்தி ஏற்படுகிறது. இதுவே இப்போதைக்கு எனக்கு மேலதிகமான பொறுப்புணர்வையும் தந்து நிற்கிறது..

இந்த ஓராண்டு காலத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவிய, உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், சென்ற செப்டெம்பர் மாத்தின் ஒருவாராத்தில் நட்சத்திரமாக அறிமுகம் செய்து பெருமைப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், எனது பல ஆக்கங்களையும் பூங்கா இதழில் இணைத்துச் சிறப்பித்த பூங்கா இதழ் குழுவினருக்கும், மிக்க நன்றிகள்.

செல்வநாயகி, யோகராஜா, ஜெகத், நீங்கள் மூவரும், என்னை எனக்கே மீளவும் அடையாளங் காண்பித்துள்ளீர்கள். நான் பயணிக்கும் பாதை சரியெனச் சுட்டியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருத்தரும், பல்வேறுபணிச்சுமைகள் மிக்கவர்கள் என்பது, நன்கறிவேன் நான். அத்தகைய நெருக்குதல்களுக்கும் நெஞ்சார்ந்த நேயமுடன் கருத்துரைத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு நன்றிசொல்வது நாகரீகமாகாது எனினும்,இப்போதைக்கு நன்றியைத் தவிர வேறோன்றும் பகிர முடியவில்லை. நன்றி நண்பர்களே!

நண்பர்களின் கருத்துக்களையும், இந்த ஒருவருட காலத்தில் சுயமாகக் கற்றுக்கொண்ட இணையத்தொழில் நுட்ப அறிவினைக் கொண்டு நான் வடிவமைத்துக்கொண்ட இணையத்தளத்தினையும் காண, இவ்வழியால் வாருங்கள்.

30 comments:

ஆவி அம்மணி said...

வாழ்த்துக்கள் மலைநாடன்!

சயந்தன் said...

அடுத்த உங்கடை பாய்ச்சல் பாலை என்றிருந்தேன். ம்.. இது இன்னும் வித்தியாசமான சிந்தனை தான். வாழ்த்துக்கள்.
//நகைச்சுவையும் நல்லிதயமும் கொண்ட வசந்தன், சயந்தன்//

ஆகா.. சந்தோசமா படுக்கப் போறன். இண்டைக்கு இது போதும். மிச்சத்தை ஆறுதலாக சொல்லுங்கோ.. :))

//( இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.) //
தமிழ் வலைப்பதிவு உள்ளவரை உங்கள் இருவரயும் ஒருவராக எண்ணக் கடவது என யாரும் சாபம் இட்டார்களோ தெரியவில்ல. :((

சின்னக்குட்டி said...

வணக்கம் மலை நாடன் .. உங்கள் ஒரு வருட வலை பதிவை ஒட்டி இந்த சின்னக்குட்டியின் மனமுவர்ந்த வாழ்த்துக்கள். பன்முக ஆளுமுடைய நீங்கள் மேலும் பல சாதனை செய்ய வேண்டுமென வாழ்த்துக்கிறேன்.

உங்களுடைய புதிய வெப்சைற்றும் சென்று பார்த்தேன் நன்றாக இருக்கிறது

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் மலை நாடன்

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

யோகன் அண்ணாவுக்கு ஒரு அடைமொழி இடுவது போல அண்ணா என்று உங்களை அழைக்காவிட்டாலும் உறவு முறை கடந்து உயர்ந்த இடத்தில் நான் வைத்திருக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர். 23 வருஷங்களுக்கு முன் என் பால்ய நாட்களில் இன்னொரு முகமாகக் கண்ட மனிதரைக் கடந்த ஆண்டு வலைப்பதிவு மூலமாகக் காட்டியது 23 வருஷம் கழித்து.

கழிந்து போன நினைவுகளையும் நம் தாயகத்துப் பெருமைகளையும் எழுத்தில் வடிப்பதன் மூலம் ஒரே அலைவரிசை கொண்ட இன்னொருவரைச் சம்பாதித்தது இன்னும் சிறப்பு. சொல்லும் சிந்தனையும் வேறுபடாது நீங்கள் எழுதும் பதிவுகளின் நியாயத்தன்மையைக் காட்டியதும் ஒரு படி உங்களை உயர்த்தியது. தொடர்ந்தும் எழுதுங்கள் ஓய்ந்துவிடாதீர்கள், வாழ்த்துக்களுடன்

சினேகிதி said...

இணையத்தத்தில் தமிழின் பாவனை அளவு இரண்டாவது இடத்திலிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆவற்றுள் வலைப்பூக்கள் அதிகம் எனலாம் வலைப்பூக்களை திரட்டி அவற்றை பாவனையாளர்களுக்கு வசதியாய் வழங்கவும் இப்போது தளங்கள், பல முளைவிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தளவிற்க்கு இந்த வலைப்பூக்களின் வளாச்சி இருக்கின்றது. இந்த வலைபதிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலைப்பழம் பற்றி வாசிக்கப்போய் பழக்கமானவர்தான் மலைநாடன் (அதற்குமுதலும் ஒருசில இடுகைகளை வாசித்திருந்தாலும்). என்னுடைய பதிவொன்றைப்பார்த்துவிட்டு நீங்களும் மாத்தளையில் வசித்தீர்களா என்று கேட்டு நான் படித்த பள்ளிக்கூடத்தின் பெயரையும் சரியாகச் சொல்லிவிடவும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகப்போட்டுது (பயமுந்தான்து).

நானெல்லாம் ஒரு ப்ளாக் ஐ வைச்சுக்கொண்டு அம்பலோதிப்பட்டுக்கொண்டிருக்கு மலைநாடான் நாலு ப்ளாக் வைச்சுக்கொண்டு நால்வகை நிலங்களின் பெயரில் ஐந்தாம் இடமாம் இணையத்தில் இயற் தமிழில் இவர் தரும் கட்டுரைகள், எழுத்துக்கள் அதிகம். பொதுவாக எல்லா விடையங்களையும் எழுதும் வழக்கம் கொண்ட இவரின் மலையும் மலைசார்ந்த இடமான, குறிஞ்சிமலர் பதிவில் பல வெளிநாட்டுக்கலைஞர்களின் கவிதைகள், மற்றும் பத்திரிகைகளின் வெளிவந்த நகைச்சுவைப்படங்களையும் பாரக்கும்போது அந்நிய மொழிகளில் இவருக்கு இருக்கும் ஆர்வமும் அவற்றை தமிழர்களிடம் சமர்பிக்க வேண்டிய தேவையையும் அறிந்தவர் எனபது புலனாகிறது.

அதே போல, வயலும் வயல் சார்ந்த இடத்தை குறித்து அவரது மற்றை வலைப்பதிவுக்கு அவர், மருத நிலம் என பெயரிட்டுள்ளார். பெயருக்கேற்ற வாறே அவரின் பதிவுகளும் இருக்கிறது. இங்கும் கவிதைகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள் என்று பதிவு செய்துள்ளார் மலைநாடன். நீரும் நீர்சாhந்த இடத்தை குறிக்கும் முல்லைவனம். முல்லை வனத்தில் அதிகமாக படங்கயை பதிவு செய்து அவற்றுக்கு அவர் விளக்கங்களை இட்டுள்ளார். படங்கள், பல்வேறு மொழிப் பத்திரிகைகளிலிருந்தும், இணையங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கு தமிழில் விளக்கமிட்டுள்ளார். இதில் குறிப்பிடவேண்டியது இவருடைய பிள்ளைகளின் ஆக்கங்களுக்கு இவர் குடுக்கும் ஊக்கம்.குறிப்பாக மலைநாடானின் மகள் வரைந்த அந்தக்கிளிப்படம் மிகவும் அழகானது. அடுத்து, கடலும் கடல் சார்ந்த இடத்தை குறிக்கும், நெய்தல்க்கரையை ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும், இணையத்தில் இன்பத்தமிழ் எனும் நிகழ்ச்சினை பதிவு செய்து வருகின்றார்.

மலைநாடன் அவர்களது குரலில் அந்நிகழ்ச்சியை அவரே தொகுத்து வழங்குகிறார். எழுத்தில் மட்டுமன்றி, ஒலிபரப்பிலும் அவரது திறமை, பாராட்டப்படவேண்டியது எனலாம்.அதுவும் முக்கியமாக வலைப்பதிவுகளைத் தெரிந்தெடுத்து அது பற்றித் தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்தல் வரவேற்கப்படவேண்டியதொன்று.

ஆனால் இந்த நான்கு வலைப்பதிவுகள் பதியப்படுவதிலும், ஒரே வலைப்பதில் அனைத்து விடையங்களையும் பிரிவாக பிரித்து, பதிவு செய்தால், வாசகர்கள் ஓரிடத்தில், வந்து இலகுவாக அனைத்து பதிவுகளை பார்வையிட வசதியாக இருக்கும், அல்லது கட்டுரைகள், கவிதைகள், அந்நிய மொழி ஆக்கங்கள் என்று வெ வ்வேறு பதவுகைள இட்டிருப்பினும் அது நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

வாழ்த்துற அளவுக்கு பெரிய மனுசி இல்லை இருந்தாலும் இன்னும் நிறையப் பயனுள்ள விடயங்களைப் பற்றி எழுத வாழ்த்துக்கள்.

வி. ஜெ. சந்திரன் said...

மலைநாடான் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள், வானொலி பணி என பல் துறையிலும் மேலும் நல்ல காத்திரமான பங்களிப்பை தோடர்ந்து வழங்குங்கள்.
பொதுவாகவே பதிவுகளை படிக்கெ நேரம் கிடைப்பதில்லை. அவ்வப்போது நுனிபுல் மேய்வது போல தமிழ்மணத்தில் தெரியும் ஒன்று இரண்டை வாசிப்பதோடு சரி.

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள் மலைநாடான்

Thillakan said...

வாழ்த்துக்கள்

✪சிந்தாநதி said...

வாழ்த்துக்கள் நண்பரே

நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருப்பதால் நண்பர்களின் பதிவுகளைக்கூட தொடர்ந்து தேடிப் படிக்க முடியாமலிருக்கிறது. அவ்வப்போது தமிழ்மணத்தில் தோன்றுகையில் நண்பர்களின் பெயர்கள் தென்பட்டால் உடனே வாசித்து விடுவது. அப்படித்தானாகி விட்டது வழமை.

நீங்கள் பதிவுக்கு வந்து ஓராண்டாகி விட்டதற்கும் உங்கள் அருமையான மண்ணின் மணத்தோடு கூடிய படைப்புகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

பகீ said...

வாழ்த்துவதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா எனத்தெரியவில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள் மலைநாடான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வாழ்த்துக்கள் மலைநாடான். திணைப் பெயர்களில் நீங்கள் வலைப்பதிவது நன்று.

சயந்தன் - நீங்களும் வசந்தனும் தோள் மேல் தோள் கைபோட்டு graphics ஏதும் இல்லாமல் ஒரு video பதிவு போட்டு வெளி இடுங்களேன்..இருவரின் முகத்தையும் தொப்பியால் வேண்டுமானால் மறைத்துக் கொள்ளலாம் ;)

சிநேகிதி - தமிழ் இரண்டாம் இடம் என்றீர்கள்? இந்திய மொழிகளிலா? உலக மொழிகளில் நிச்சயம் இரண்டாவதாக இருக்க இயலாது.

வைசா said...

வாழ்த்துகள் மலைநாடான்.

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
ஒரு வருசமாச்சா!!;இப்ப போல கிடக்கு! எனக்குப் பின்னூட்ட மெழுதத் தெரியாத காலத்திலேயே;உங்கட எழுத்தப் படித்துவிட்டு இருந்துள்ளேன்.பிறகு என் கட்டுரை குமரன் பதிவில் வந்த போது பின்னூட்டி; பயமின்றி தொலைபேசி இலக்கம் தந்து; பேசி என்னை எழுதவேண்டுமென ஊக்கப்படுத்தி (பலர் ;மலைநாடருக்கு இது தேவையிலாத வேலை எனக் புறுபுறுப்பது,தெரிகிறது; இதுதான் விதி); என் தொழில் நுட்பவல்லமை அறிந்து ,தானே எனக்காகத் தளமுருவாக்கி எழுதவைத்தது. மறக்க முடியாதது.
பாராட்ட வேண்டிய விடயம்;இந்தக் கணனிக்குள் புகுந்து வருவது;எதாவது புதிது புதிதாக நாளாந்தம்
தளத்தில் நல்ல மாற்றம் செய்வது. அத்துடன்..அயராமல் பல விடயங்களைக் கையாள்வது.
கிழக்கீழம் பற்றிய பல இவர் பதிவுகள்;எனக்குப் புதிய செய்தி!!
இவர் பிள்ளைகளைக் கூட ஊக்குவிப்பது பயனும்;பாராட்டுக்குரியது.
அத்துடன் எல்லோர்க்கும் இனியவர்!; சிக்கலைத் தவிர்ப்பவர்!!
இப்போ இவர் எழுத்தில் நாட்டம்;சற்றுக் குறைவாக உள்ளார்; நேரம் பிரச்சனையாக இருக்கலாம்.
ஆனால் எழுதுவார் என நம்புகிறேன்.

கொழுவி said...

உங்கடை நட்பு வட்டத்தில் என்னைச் சேர்க்காமல் விட்டதற்கு அச்சம் தரக்கூடிய நியாயமான காரணங்கள் உங்களுக்கு இருந்த போதும் அது எனக்குப் பாரிய ஏமாற்றத்தையும் சொல்லொணாத் துயரத்தையும் அளிக்கிறது. எனினும் ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் இந்த நல்ல நாளில் தொடர்ந்தும் இயங்க வாழ்த்தி விடைபெற்று எனது இருக்கையில் சென்று அமர்கிறேன். நன்றி வணக்கம்.

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் மலைநாடன், மென்மேலும் பல ஆண்டுகள் பதிவெழுத வாழ்த்துக்கள் :)

//இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.//
பெயர்கள் ஒன்றுபோல் இருப்பதால் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பம் வந்ததுண்டு. [ஒரே மாதிரி பெயர் என்று விசயகாந்துக்கும் ரஜினிகாந்துக்குமிடையே வித்தியாசம் தெரியாமல் கழிந்த குழந்தைப் பருவம் என்னுடையது.. அதனால் இந்தளவுக்குக் கூடக் குழப்பிக் கொள்ளாமல் எப்படி ? :)) ]

மலைநாடான் said...

ஆவி அம்மணி!

மொதல்ல வந்து அடிச்சீங்க, அப்ப விழுந்தவன் இப்பதான் எந்திரிச்சேன்.

சயந்தன்!
இவ்வளவு சந்தோசமென்டா, இன்னும் இரண்டு வார்த்தை சேர்த்துச் சொல்லியிருப்பேனே.

சின்னக்குட்டி!
மிக்க நன்றி. நீங்கள் என்ன குறைஞ்ச ஆளா?

மலைநாடான் said...

பத்மா அர்விந்த்!

வாங்க பத்மா! வாழ்த்துக்களுக்கு நன்றி. வலைப்பதிவுகளில் என்னை அசத்திய பெண்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்களுக்கு நன்றி.

பிரபா!
எனக்கும் கூட உங்களைப்பார்க்கும் போது நிறைவாகவே இருக்கிறது. தொடர்வோம்:) பகிர்தலுக்கு நன்றி.

Anonymous said...

வாழ்த்துக்கள் மலைநாடன்!

தொடர்ந்து எழுதுங்கள். உங்களைப் பற்றிய செல்வநாயகியின் பார்வைகளோடு ஒத்துப் போகிறேன்.

நன்றி.

சாரா

மலைநாடான் said...

சிநேகிதி!

என் எழுத்துக்கள் பற்றிய இளையவர்களது பார்வை அறியும் நோக்கில் உங்களிடமும், மலேசியாவில் வசிக்கும் ஈழத்து இளைஞர் ஒருவரிடமும், கருத்துக் கேட்டிருந்தேன். நீங்கள் பல்கலைக்கழகப் படிப்பு நேரத்துக்கிடையில் நிறைவாகச் செய்ய முடியுமோ எனத் தெரிவித்திருந்தீர்கள். இப்போ ஒரு பதிவளவுக்கு உங்கள் பார்வையில் கருத்துக்களைத் தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
நான் எழுதத்தொடங்கிய போதினில் புளொக்கரில் வகைப்படுத்தும் வசதி வரவில்லை. ஆயினும் எனக்கு என் எழுத்துக்களின் பின்னால்தெரியும் பின்புலம்பற்றிய ஆர்வமும் இருந்ததால் வேறுவேறு தளங்களின் எழுதினேன். உங்கள் கருத்தை வேறுசில நண்பர்களும் சொல்லியிருந்தார்கள். அதனால்தான் எல்லாவற்றையும் மலைநாடான் பக்கங்களில் தொகுத்துவிட்டேன். இனிச்சிரமம் இருக்காதென நம்புகின்றேன். தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

மலைநாடான் said...

வி.ஜெ.சந்திரன்!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி

திலகன்!
மிக்க நன்றி

சிந்தாநதி!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

மலைநாடான் said...

துளசியம்மா!
உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருவது.

பகீ!
வாழ்த்துவதற்கு மனசுதுதான் தேவை.:) தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ரவிசங்கர்!
மிகவும் நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தினைத்துணையும் தமிழ் அறியா எம் போன்றோர்க்கு
திணைப் பெயரால் தமிழ் அளிப்பதற்கு நன்றி.
அதுவும் சுகந்தமான ஈழத் தமிழ்க் காற்று வீசுவது இன்னுமொரு சிறப்பு.

வாழ்த்துக்கள் மலை நாடன் ஐயா.
பதிவுகளில் சிறப்பு செய்த தங்கள் குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

மலைநாடான் said...

கொழுவி!

உண்மையாக உமது பெயரைச் சேர்க்க மறந்துவிட்டேன். மற்றும்படி உம்மோடு உறவாடுவது என்பதற்கெல்லாம் பயமென்றில்லை. நான் மட்டுமல்ல வலைப்பதிவர்கள் பலரும் உம்மோடு நேசமாகவே இருக்கின்றனர். ஏனெனில் நீர் ஒரு நியாயமான கலகக்காரன்.:)
ஆர்வத்தோடு வந்து சிறப்புரையாற்றி அமர்ந்தமைக்கு மிக்க நன்றி.

வெற்றி said...

மலை,
வணக்கம்.
கன காலம் தமிழ்மணப்பக்கம் வராததனால் நான் விரும்பிப் படிக்கும் பல பதிவர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை. அதில் உங்களினதும் ஒன்று. இனித் தான் ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். நிற்க.

உங்களின் ஓராண்டுப் பூர்த்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்தில் பிறந்திருந்தும், தென் தமிழீழத்தின் பல அருமையான வரலாறுகளைத் தெரியாதிருந்தேன். ஆனால் உங்களின் பதிவுகள் மூலம் அக் குறை தீர்ந்தது.

நீங்கள் தென் தமிழீழத்தின் பல வரலாற்றுப் பதிவுகளை ஆரம்பித்து, இடையில் நிறுத்தி விட்டீர்கள் போல்
தெரிகிறது. தயவு செய்து அவ் வரலாற்றுப் பதிவுகளைத் தொடருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஒரு வருடத்தில் தங்களின் பதிவுகள் மூலம் நான் அறிந்து கொண்ட சங்கதிகள் ஏராளம் ஏராளம். இன்னும் பல ஆண்டுகள் பல்சுவையான பல பதிவுகளைத் தந்து எம்மை மகிழ்விக்க திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கும் எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்கி நிற்கிறேன்.

மலைநாடான் said...

பொன்ஸ்!
வாழ்த்துக்கு நன்றி!

சாரா!
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கண்ணபிரான் ரவிசங்கர்!
என்ன தினைத்துணையும் தமிழறியாதவரா நீங்கள்? :) இது நல்ல பகிடி.

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.


வெற்றி!
மன்னிக்கவேணும். தொடர்ந்து எனக்கு ஊக்கம் தரும் நண்பர்களில் நீங்களும் ஒருவர். தவறவிட்டுவிட்டேன்.
நீங்கள் குறிப்பிடும் தம்பலேஸ்வரம் தொடர், சில படங்களின் வருகைக்காக காத்திருக்கின்றேன் வந்ததும் தொடர்வேன்.

நன்றி.

✪சிந்தாநதி said...

நீங்களும் உங்கள் குறும்பு அல்லது வினோதங்களைப்பற்றி சொல்ல வேண்டும்...(வியர்டு என்று ஒரு சுற்றில் என்னையும் சுற்ற வைத்து விட்டார்கள். நான் உங்களையும் இழுக்க வேண்டியதாகி விட்டது ;)

http://valai.blogspirit.com/archive/2007/03/26/weird.html

மலைநாடான் said...

சிந்தாநதி!

அழைப்புக்கு நன்றி. இனித்தான் யோசிக்கவேண்டும் என்னவென்று. பார்ப்போம். விரைவில் தர முயற்சிக்கின்றேன்.

செல்லி said...

வாழ்த்துக்கள்!, மலைநாடான்.
"தனக்கொரு பேர் வைத்த மலைநாடான்
தன் மருதத்திற்கும் இவர் மலைநாடான்
மலைநாடானுக்கேது மருதம்? -அதன்
வலைத்தமிழுக்கே இவரொரு சிகரம்"

மலை, நீங்க இவ்வளவு உயரமென்
பதை அறியாதிருந்தேனே இதுவரை
நற்றமிழ்ப்பணி மேலுந் தொடர்ந்திடவே
மற்றவருடன்னானும்வாழ்த்துகிறேனே.
(மற்ற+வருடம்+நானும்)

பாரதி தம்பி said...

எதையும் நினைத்த நேரத்தில் செய்யாமல் தாமதப்படுத்துவதில் எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி. முன்னமே படித்துவிட்டேன்..வாழ்த்து சொல்ல இம்புட்டு நேரமாகிப்போச்சு.

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

அப்புறம் உங்க புது இணையத்தளம் ரொம்ப அழகா இருக்கு