Sunday, January 14, 2007

எங்கள் பொங்கல்

பொங்கலோ பொங்கல்....

தமிழரின் தனித்துவமான பண்டிகை. தரணியெங்கும் பரந்து வாழும் தமிழர்களெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடும் ஒரு திருநாள். உழவர்கள் தங்கள் தொழிலுக்கு உறுதுணையாய் நின்ற பகலவனுக்கு நன்றிச்சொல்லி, தங்கள் விழை பயன்பொருட்களைப் படைத்து மகிழ்வுறும் நாள் இந்த இனிய நாள், பொங்குதிருநாளாக எங்களுக்கும் இருந்தது. ஒரு காலத்தில்...ஈழத்தின் தமிழர்பகுதிகளிலெல்லாம் பெரு மகிழ்வாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும், அவ்வப் பகுதிகளுக்கான தனித்துவங்களுடன் கொண்டாடப்பட்டது. பொதுமையில் ஒரேவிதமாகக் காணப்பட்ட போதும், அந்தத்தப் பகுதிகளுக்கான சிறப்புக்களும் சேர்ந்தே மிளிர்ந்தன. ஆனால் எல்லா இடங்களிலும் நகர்புறங்களைவிட, கிராமங்களில் இந்தப் பண்டிகையின் சோபிதமே அலாதியானது. இது உழவர் திருநாளல்லவா?. அந்த உன்னதமானவர்களின் உறைவிடம் கிராமங்கள்தானே?

ஈழத்தின் வடக்கே, பொங்கல் சற்று இந்து மதபாரம்பரியம் சார்ந்ததாக இருக்கும். ஆனாலும் தமிழர் திருநாளின் தனித்துவங்கள் தவறிப்போவதில்லை. காலையில் எழுந்து அனைவரும் குளித்து, புத்தாடைகள் அணிந்து, வீட்டின் முற்றங்கள் சாணகத்தால் மெழுகப்பட்டுக் கோலங்கள் வரையப்பட்டு, குத்துவிளக்கு, நிறைகுடம் வைத்து, நிறைகுடத்திற்குப் பக்கத்தில் முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றும் அலங்கரித்து வைத்து, அடுப்பு மூட்டுவார்கள். அடுப்பு மூட்டுவதற்காகப் பெரும்பாலும், காய்ந்த தென்னம் பாளைகள் விறகாகப் பாவிப்பார்கள். பொங்கல் பானைகளின்( பிற்காலத்தில் அவை அலுமினியப்பானைகளாகின) கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி சூடாக்குவார்கள். பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது சிலர் ‘பொங்கலோ பொங்கல் ‘ என்பார்கள், சிலர் சூரியனைப்பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள். பொங்தித்தள்ளும் அந்த நுரைத்தபால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.சிறுவர்கள் சேர்த்துக்கட்டி வைத்திருக்கும், வெடிக்கட்டுக்களைக் கொழுத்தி வெடிவெடிப்பார்கள். வெடிகளின் அதிர்வை வைத்தே அயல்வீடுகளில் பொங்கல் பொங்கிற்றா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொங்கி முடித்ததும் படையல் செய்வார்கள். தலைவாழையிலை விரித்து, சர்க்கரைப்பொங்கலிட்டு, அதன்மேல் சற்றுத் தயிர்விட்டு, அதன்மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து, சுற்றிவர பண்டிகைக்காகத் தயாரிக்கப்பட்ட பொங்கல் பட்சணங்களும் சேர்த்துப் படைப்பார்கள். குடும்ப மொத்தமும் ஒன்று கூடிநின்று, சூரியனைப்பார்த்து தேவாம்பாடித் துதிப்பார்கள். பின் அனைவரும் பொங்கல் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள். சிலர் ஆலயம் சென்று வழிபாடியற்றிபின் வீடு வந்து உண்பார்கள். எப்போதும், பானையிலிருக்கும் பொங்கலை விடவும், வாழையிலையில் படையல் செய்த பொங்கலை, தயிருடன் சேர்த்துச் சுவைப்பது, மிகுந்த சுவையாக இருக்கும்.

பொங்கலன்று மாலைகளில், சில இடங்களில் மாட்டுச்சவாரியும் இடம்பெறும். பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் நடைபெறும். இது யாழ்ப்பாணத்தில் அநேகமாக மாலைவேளைகளிலேயே நடைபெறுவதைக் கண்டிருக்கின்றேன். மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, மாடுகட்டும் இடங்களிலேயே பானை வைத்துப்பொங்கிப் படைத்து, பின் பொங்கலை மாடுகளுக்கு தீனியாக்கி மகிழ்வார்கள்.

தங்கள் தொழிலுக்குத் துணையாகவிருந்த மாடுகளை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும், இம் மாட்டுப்பொங்கலும், சூரியனுக்கு நன்றி சொல்வதாக அமையும் தைப்பொங்கலும், தமிழர்களின் நன்றியுணர்வுக்குச் சான்றான ஒரு பண்டிகை எனவும் சொல்லலாம். தென் தமிழீழத்தின் பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். எப்படியென்று அறிய ஆவலா? இங்கே வாருங்கள்.

11 comments:

Anonymous said...

மலைநாடான்

உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள், மலைநாடான் ஐயா!

கானா பிரபா said...

//வெடிக்கட்டுக்களைக் கொழுத்தி வெடிவெடிப்பார்கள். வெடிகளின் அதிர்வை வைத்தே அயல்வீடுகளில் பொங்கல் பொங்கிற்றா என்பதை அறிந்து கொள்ளலாம்.//


அது ஒரு இனிய காலம், பதிவு சிறப்பாக இருந்தது, உங்களுக்கு என் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

மலைநாடான் said...

ரவி!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.


அனானி!

உங்களது வாழ்த்துக்கும் நன்றி!

Anonymous said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மங்கை said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்..வருங்காலம் இனிதாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மலைநாடான் said...

அரைபிளேடு! உங்கள்வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்கள்.


மங்கை!

வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

வைசா!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகளும், எங்கள் வாழ்த்து்களும்.

Anonymous said...

மலைநாடர்!
பொங்கல் மறக்கமுடியாத திருநாள்தான்; நீங்கள் கூறிய அத்தனையுடன்;இது எல்லாவீட்டிலும் நடப்பதுதான் ; உறவினர் நண்பர்களில் பொங்காதவர்கள் (பிள்ளைப்பேறு;மரணம்) வீட்டுக்குச் சருவச்சட்டியில் பொங்கல் கொண்டுபோய்க் கொடுப்பது;எங்கள் வீட்டில் அப்பணி எனக்கு வரும் அதில் அப்பாவின் சக ஊழியர் மரியாம்பிள்ளை மாமா வீட்டுக்குக் கட்டாயம் கொடுக்கப் போனால் கட்டாயம் 2 ரூபா தருவார்.
அத்துடன் அன்று சக்கரைப் பொங்கல் தெவிட்டும் . ஆனால் அடுத்தநாள் ஆவலாக இருக்கும். என் தம்பி அடிப்பானைப் பொங்கல் பிரியன்..
மறக்க முடியாத நாட்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களும் ரசிக்கத்ததக்கவையே. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

மலைநாடான் said...

சோதனைதான்