Saturday, May 13, 2006

Locarno - சர்வதேச திரைப்பட விழா

சுவிசின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று அல்ப்ஹோர்ன் ( Alphorn) . அன்னளவாக எமது நாதஸ்வரத்தை ஒத்திருக்கும். குழல் வடிவான இக்கருவி வாய்பகுதியிலிருந்து சிறிது சிறிதாக அகன்று சென்று, மேல் நோக்கி வளைந்து , பலத்த சத்தத்தை ஒலிக்கும் வகையில் பருத்து விரியும். நிலத்தில் நின்றவண்ணம் ஊதி இசைக்கும் இக்கருவியின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மீற்றரைத் தாண்டும். கோடைகால வருகையுடன், மேச்சலுக்காக கால்நடைகளை அல்ப்ஸ் மலைச்சாரல்களை நோக்கி நகர்த்துகின்ற விவசாயிகள், கூடிக்குதுகலித்து குரலெழுப்பும் விவசாயிகளின் செய்தி கூறுமிசையாகவும் இதைப்பார்க்க முடிகிறது. இயற்கை வனப்புக்களோடு முட்டி மோதி வருகின்ற சுவிசின் சுவாசக்காற்றை, சுருதி பேதமின்றி ஒலிக்கும் அல்ப்ஹோர்ன் போன்று, சுவிஸ்வாழ் தமிழர்களின் வாழ்வியலைப் பேச வருகிறது எனும் செய்தியோடு , அல்ப்ஹோர்ன் தமிழ்குரல் என்ற பெயரில் புதிய தமிழ்ப்பத்திரிகை ஒன்று சுவிற்சர்லாந்தில் முகிழ்ந்திருக்கிறது.

சுவிஸ் தமிழ்சமுகம் சார்ந்த பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இதன் முதல் குரலில், உலக சினிமா சார்ந்து வெளிவந்த கட்டுரையொன்றினை, திரைப்பட ஆர்வம் நிறைந்த தமிழ்மணநண்பர்களுக்காக இங்கே, நன்றியுடன் பதிவு செய்கின்றேன்.

Pardo - Locarno சர்வதேச திரைப்படவிழா - சிலகுறிப்புக்கள்

- கபிலன் -

உலகத்திரைப்பட விழாக்களென்றதும், எமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது, அமெரிக்காவின் ஆஸ்கார் திரைப்பட விழாவும், பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவுமே. ஆனால் அவ்விழாக்களில் இல்லாத தனித்துவ மெருகோடு சுவிற்சர்லாந்தில் நடைபெறும் உலகத்திரைப்படவிழா, லோக்கார்ணோ (Locarno) சர்வதேச திரைப்பட விழாவாகும். வருடந்தோறும் ஆவணி மாத முற்பகுதியில் நடைபெறும் இவ்விழாவின் தனித்துவம், உலககெங்குமிருந்து திரைப்படத்துறைக்குள் நுழையும் புதியவர்களை அடையாளப்படுத்துவதாகும். பிரபலமானவர்களுக்கே களம் தரும் ஏனைய சர்வதேச திரைப்படவிழாக்களிலிருந்து இவ்விதம் வேறுபடும், லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா இத்துறையின் புதுமுகங்களுக்கு நல்லதொரு நுழைவாயில்.

இத்தகையசிறப்பு மிக்க இத்திரைப்பட விழா 1946ம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. அக்காலப்பகுதியில் ஐரோப்பிய சினிமாவில் ஏற்பட்டிருந்த ஒருவிததேக்கநிலையை, களையும் நோக்குடனேயே முதலில், இத்திரைப்படவிழா ஆரம்பமானது. ஆரம்பமும் சுமுகமாக இருக்கவில்லை. பிரான்சிலும், இத்தாலி வெனிசிலும், இருவார இடைவெளிக்குள் நடைபெற்ற சர்வதேசவிழாக்களைத் தொடர்ந்து இவ்விழாவும் தொடங்கப்பட்டது. முதலில் Lugano நகரிலே இவ்விழாவினைத் தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டபோதும், அப்பகுதி மக்களின் சம்மதம் கிடைக்காத காரணத்தால் Locarno வில் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட முதல் வருடத்தில், நான்கு இத்தாலிப் படங்களும், ஆறு வேற்றுமொழிப் படங்களும், இரண்டாம் உலகப்போர் குறித்த மூன்று திரைப்படங்கள் உட்பட பதினைந்து படங்கள் திரையிடப்பட்டன. இவ்வாறு தொடங்கப்பட்ட இத்திரைப்படவிழா முசோலியின் பாசிசக் கொள்கையாளர்களின் நெருடல்களுக்கு உள்ளானதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுவிற்சர்லாந்தின் இத்தாலிய மொழிபேசும் மாநிலத்தில் அமைந்துள்ள Locarno நகரில் இவ்விழா நடைபெற்றபோதும், இவ்விழாவின் மூலமொழி பிரெஞ் மொழியாகவே இருக்கிறது.

இப்படி உருப்பெற்ற லோகார்ணோ சர்வதேசதிரைப்படவிழா, 1970 ம் ஆண்டில் புதிய பாச்சலாக இளையதலமுறையினரை உள்வாங்கிக்கொண்டது. 1971ம் ஆண்டில் Livio Vacchini எனும் தொழில் நுட்பக்கலைஞரின் எண்ணத்தில் உதித்த திறந்தவெளித்திரையரங்கு, நகரின் மத்தியிலமைந்த பெரு முற்றத்தில் அறிமுகமானது. 1972ம் ஆண்டு தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடிய இவ்விழா, 1978ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக நடத்தப்படவில்லை. உலகத்திரைப்படவிழாவாக நடைபெறும் இவ்விழாவில், இந்தியத்திரைப்படங்கள் பலவும், இயக்குநர் அடூர், கோபாலகிருஷ்ணன், மணிரத்னம் உட்பட பல்வேறு கலைஞர்களும், இயக்குனர்களும் கலந்துள்ளார்கள்.

1989 ல் சாயிகருணின் 'பிறவி', 1992 ல் அஜயனின் 'பெருந்தச்சன்', 1994 ல் 'வாயு', 1995 ல் சந்தீப்ரேயின் 'ராக்கெட்', அதே ஆண்டில் மணிரத்தினத்தின் 'பம்பாய்', 1998 ல் மணிரத்தினத்தின் 'இருவர்', 2000 ல் கமலஹாசனின் 'ஹேராம்', என்பன இவ்விழாவில், கலந்து கொண்ட சில இந்தியத் திரைப்படங்களாகும்.

பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தொடங்கப்பட்டு, பாயும் வேங்கைப்புலியினை அடையாளமாகவும், மஞ்சள்நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப்பெயரையும் கொண்டமைந்த இத் திரைப்படவிழாவின் வளர்ச்சிப்போக்கில், இவ்வாண்டு முதல் குறும்படங்களுக்கான பிரிவையும் இணைத்துக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்விழா தங்கள் பகுதியில் நடைபெறக்கூடாதெனக் கருத்துத் தெரிவித்த பகுதிகளில் கூட, தற்போது இவ்விழாவின் நகல்கள் போன்றமைந்த சிறு திரைப்பட விழாக்கள் நடைபெறுவதும், இவ்விழாவின் மற்றொரு பரிணாமம் எனக் கொள்ளலாம்.

கோடை வெயில் அடங்கிய மாலையில், ஏரிக்கரையிருந்து எழுந்து வரும் இதமான தென்றலில், நீள் விரியும் வானமே கூரையாக, திறந்த வெளியமர்ந்து, உலகப்பெருவெளியில் உதித்த உன்னதங்களை, அகலத்திரையில் அசையும் நிழலாய் பாரப்பது, அற்புதமான சுகானுபவம். இந்த அனுபவத்தினை பெறவேண்டுமாயின், இவ்வருடம் 02.08.2006 முதல் 12.08.2006 நடைபெறும் லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவிற்குச் செல்லலாம்.


1 comment:

வசந்தன்(Vasanthan) said...

கட்டுரைக்கு நன்றி