Wednesday, May 17, 2006

தமிழீழத்தின் தலைமுறைக்கலைஞன் -வர்ண.ராமேஸ்வரன்

திருகோணமலையில் என் இளம்பபராயத்தில் எங்கள் வீட்டுக்கு வரும் அந்தப் பெரியவருக்கு முருகேசர் எனத் தொடங்கும் ஒரு பெயர். என் அப்பாவுடன் மிக நெருக்கமானவர். எனக்கு அவரை ஐயா எனக் கூப்பிட்ட ஞாபகம்தான் இருக்கு. தினமும் எங்கள் வீட்டுக்கு வரும் அவர், சிலவேளைகளில் அப்பாவுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இசைவடிவங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பார். அவர்களது உரையாடலில் அம்மாவும். இடைக்கிடை சேர்ந்து கொள்வார்கள். அப்பாவிற்கு இசைக்கத் தெரியாது ஆனால் ரசிக்கத் தெரியும். அம்மா வயலின் வாசிக்கக் கூடியவர்கள். பெரியவர் சுருதிசேர்த்துப் பாடக்கூடியவர். இவர்களோடு எங்களுக்கு அருகாமையில் வசித்த நாதஸ்வர வித்துவானும் சேர்ந்துகொண்டால், அன்றைய மாலைப்பொழுது இசை அரட்டையாகவே இருக்கும். அப்படி இருந்த பொழுதுகளில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு ஒலிபரப்பில் சங்கீதக்கச்சேரியில் முக்கிய வித்துவான் ஒருவரின் கச்சேரி இடம்பெறப்போகின்றதென்று பொருள்.இரவு மீண்டும் அந்த ரசிகர்வட்டம் சேரும். எனக்கும் றேடியோக் கச்சேரி கேட்க ஆசைதான். ஆனால் இலங்கை வானொலியில் கர்நாடக இசைக்கச்சேரி இரவு பத்துமணிக்குப் பின்தான் ஆரம்பமாகும். கச்சேரி ஆரம்பமாகும் போது நானும் நித்திரையாகிவிடுவேன். மறுநாள் முந்தைய இரவுக்கச்சேரி பற்றி ரசிகர்வட்டம் கதைக்கும்போது, எனக்கு ஏமாற்றம் அழுகையாக வரும். அம்மா அடுத்த கச்சேரி கேட்கலாம் என்பார்.

காலவோட்டத்தின் பின் யாழ்ப்பாணத்தில், சின்ன வயதில் கேட்க முடியாது போன அந்த வித்துவானின் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. என் தோழியொருத்தி, நடன ஆசிரியை. அவளின் மாணவிகளினது நடன நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தாள். நிகழ்ச்சியில் அந்த வித்துவானின் கச்சேரியும் இருந்தது எனக்கு பெருவிருந்து.அவர்பாடப்பாட என்னுள் இனம்புரியா உணர்வொன்று எழுந்தெழுந்து மறைந்தது. ''பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே.. முருகா உன்னைத் தேடித்தேடி.. எங்கும்கானனே'' இது பெங்களுர் ரமணியம்மாளின் பாடலொன்று. கச்சேரியின் இடையில் இந்தப்பாடலும் அவர் பாடினார். ''முருகா! .. '' என விழித்து அவர் பாடின அந்தப்பாடல் இன்னும், இருபத்தைந்து வருடங்கள் கழித்தும், என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் இலங்கை வானொலிபுகழ் கர்நாடக சங்கீத வித்துவான் எம். வர்ணகுலசிங்கம்.


86 களிலென்று நினைக்கின்றேன். கொக்குவிலிலுள்ள என் நண்பரொருவர் சாயிபக்தர். அவர் வீட்டில் நடந்த ஒரு சாயி பஜனைக்கு என்னை வற்புறுத்தி அழைத்திருந்தார். அந்தப் பஜனையைப்பார்த்துக் கொண்டிருந்த என்னை மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் வெகுவாகக் கவர்ந்தான். என்னை மட்டுமல்ல இன்னும் பலரை அவன் இசை கவர்ந்திருந்தது என்பது பஜனையின் முடிவில் தெரிந்தது. அவன் நன்றாக பாடவும் செய்வான் என்பது எப்படியோ அந்தக் கூட்த்தில் தெரிந்து விட்டது. பலரும் விரும்பிக் கேட்க, கல்யாண வசந்த ராகத்தில், இயலிசைவாரிதி யாழப்பாணம் வீரமணிஐயர் எழுதிய கல்யாண வசந்த மண்டபத்தில்.. எனும் பாடலைப்பாடினான். மனதுக்குள் ஆசனமிட்டு அமர்ந்துவிட்ட அந்தக் குரலை சில வருடங்களுக்கு முன் புலத்தில், ஒரு தமிழ்க்கடையில் ஒலிக்கக் கேட்டேன். உரிமையாளரிடம் விசாரிக்க, அவர் ஒரு இறுவட்டினைத் தூக்கித் தந்தார். திசையெங்கும் இசைவெள்ளம் என்ற அந்த இசைஇறுவட்டில் பதினொரு பக்திப்பாடல்கள். பிரித்தானிய தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடாக வந்த அந்த இறுவட்டிலுள்ள இசைக்கோலங்களை இசைத்தவன், 86களில் இசையால் எனைக்கவர்ந்த அந்த இளைஞன்தான் என்பதை அப்போதுதான் அறிந்தேன். அறிந்தது அதுமட்டுமல்ல. இப்பதிவின் முதல் பகுதியில் வரும் பெரியவர் முருகேசு ஐயா அவர்களின் மகன் வித்துவான் வர்ணகுலசிங்கம் அவர்களின் மகன்தான் ராமேஸ்வரன் என்பதும் அப்போது அறிந்ததே.

ஆம் வர்ண ராமேஸ்வரன், தமிழீழத்தின் தலைமுறைக்கலைஞன். இவன்குரலில் பல விடுதலைக்கீதங்கள் வெளிவந்ததாகவும் அறிந்தேன். ஆயினும் அவனது இந்த இறுவட்டின் இசைக்கோலங்களின் முதலாவது பாடலான ''இணுவையம்பதியில் இருந்திடும் கணபதி ..'' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. பாடல் என்னவோ பக்திப்பாடல்தான். ஆனால் பாட்டினூடு ஒரு செய்தி வரும். இது எமக்குப்புதிது. இருக்காத பின்ன? பாடலை எழுதியது யார்?.. புதுவை இரத்தினத்துரை.

அருகில் உள்ள Stickam player ல் 4 வது பாடலில் அந்தத் தலைமுறைக்கலைஞனின் குரலைக் கேட்கலாம்.

பிரித்தானிய தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினர்க்கு நன்றிகள்.

25 comments:

மலைநாடான் said...

பாடல் பற்றிய மேலதிக தகவலொன்று. பரராஜசேகரமன்னனால் கட்டப்பட்டு இன்றும் சிறப்புடன் திகழும், கோவிலையே இப் பாடல் போற்றுதல் செய்கிறது. கானா.பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரும் அவரே.

கானா பிரபா said...

நல்லதொரு நினைவுமீட்டல், வர்ணராமேஸ்வரனின் நல்லைக்கந்தன் பாடல்களும், நீங்கள் குறிப்பிடும் திசையெங்கும் இசைவெள்ளம் இசைத்தட்டுப்பாடல்களும் மிகவும் அருமை. இவர் இணுவில் சிவகாமியம்மன் ஆலயத்திற்கு அருகில் தான் இருந்தவர், இராமனாதன் நுண்கலைக்கல்லூரியில் கற்றவர்.
ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று இசைக்கச்சேரி வைத்தவர். 2003 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து இசைவிருந்துபடைக்க ஏற்பாடு செய்திருந்தும் சில காரணங்களால் அது கைகூடவில்லை.
தற்போது கனடாவில் வாழும் இவர் "இசைக்கு ஏது எல்லை" என்ற தொடர் இசை நிகழ்ச்சிகளை நடாத்திவருகின்றார்.


அன்புடன்
கானா பிரபா

வெற்றி said...

மலைநாடான்,
இன்னுமொரு ஈழத்து கலைஞனைப் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அருமை. தமிழீழக் கவிக்கோ புதுவை இரத்தினதுரை எழுதிய நல்லைக் கந்தன் பாடல்களை மிகவும் உணர்வுபூர்வமாகவும், பத்தி உணர்வோடும் தனது கணீர் என்ற குரலால் பாடியிருந்தார் திரு. வர்ண. இராமேசுவரன். கானா பிரபா குறிப்பிட்டது போல், இசைக்கு ஏது எல்லை எனும் தொடர் மூலம் பல கலைஞர்களை ஊக்குவித்து வருகின்றார். வாழ்க அவரின் இசைப் பணி.

Anonymous said...

புதிய தகவலுக்கு நன்றி!
இக் குரல் இனிமை; பாடல் அருமை! இராக ஆலாபனையுடன் ,சுர சங்கதிகளும் சேர்த்துத் முழுமையான கச்சேரி வடிவமைத்திருக்கலாம் என்பது சுரப்பிரியனான எனது தாழ்மையான அபிப்பிராயம். சாதாரணபாடல்களை கூடச் சுரம் கூட்டி சிறப்பிப்பதில் சீர்காழி- மதுரை சோமு -மிகவல்லவர்கள். சீர்காழியின் நியூயோர்க் கச்சேரியின்,பிரதான பாடல் "சரச மோகன சங்கீர்தாமிர்த" எனும் பாடல் நல்ல உதாரணம். சாதாரண 3 நிமிட திரைப்படப்பாடலாக வந்தது. அக்கச்சேரியில் 30 நிமிடம் பாடப் பட்டது.
யோகன்
பாரிஸ்

குமரன் (Kumaran) said...

அருமையான கம்பீரமான குரலினிமை மலைநாடான் ஐயா. தமிழிசையை இந்தக் கம்பீரக் குரலில் கேட்பதற்குத் தான் எவ்வளவு நன்றாக இருக்கிறது. அளித்தமைக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

ஒரு முறைக்குப் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன்.

மலைநாடான் said...

//இவர் இணுவில் சிவகாமியம்மன் ஆலயத்திற்கு அருகில் தான் இருந்தவர், இராமனாதன் நுண்கலைக்கல்லூரியில் கற்றவர்.//

இவரது சொந்த இடம் விளான் பகுதியாக இருக்க வேண்டும். சிலவேளைபிற்காலத்தில் இணுவிலில் வசித்திருக்கக் கூடும்.
இராமனாதன் நுன்கலைக்கல்லூரி மாணவன் என்பது நான் பின்னர் அறிந்ததே. தற்போது கனடாவில் வாழ்கின்றார் என்பது நான் அறியாதது.
வருகைக்கு நன்றி பிரபா!

மலைநாடான் said...

அவர் இசைத்துறையில் பல்துறைக்கலைஞர். ஆதலால் அவர் செய்யும் இசைப்பணி நிறைவாகவே இருக்கும்
வெற்றி! உங்களைப்போன்றோரின் ஊக்குவிப்பே, தொடர்வதற்கு ஆதாரமாக உள்ளது.
நன்றி!

மலைநாடான் said...

யோகன்!
உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி. அடுத்த இசைப்பதிவு நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். காத்திருங்கள்.

மலைநாடான் said...

குமரன்!
எனக்கு நீண்ட நாட்களாகவே தமிழீழக் கலைஞர்களை, தமிழர்களாகவிருந்தும், தமிழகச்சகோதரர்கள் கண்டுகொள்ளாமையையிட்டு,மனக்குறை உண்டு.
உங்களின் மனந்திறந்த பாராட்டு மகிழ்வு தருவதாகும்.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!

சின்னக்குட்டி said...

நன்றி.மலைநாடன் உங்கள் இசை பதிவுக்கு...பாடல்களை கேட்டேன் நன்றிகள்.வீரமணி ஜயர் பாடிய மிக பிரசத்திய பாட்டு..எங்களைப் போல சாதரண மட்ட இசை ரசிகர்கள கூட கவர்ந்தது.அந்த பாடலின் பெயர் மறந்துவிட்டேன்.உங்களால் அப்பாடலை ஊகிக்க முடிந்தால் அந்த பாடலை தாருங்கள். நன்றிகள்

குமரன் (Kumaran) said...

உங்கள் மனக்குறை உண்மையானது மலைநாடான் ஐயா. முடிந்த வரை எனக்காவது அறிமுகம் செய்யுங்கள். என் மின்னஞ்சல் முகவரி kumaran.malli@gmail.com

Anonymous said...

வீரமணி எழுதி சௌந்தரராஜன் பாடிய பாடலையா சின்னக்குட்டி சொல்கிறீர்கள்?

கற்பகவல்லியின் பொற்பதம் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

மலைநாடான் said...

//வீரமணி ஜயர் பாடிய மிக பிரசத்திய பாட்டு..எங்களைப் போல சாதரண மட்ட இசை ரசிகர்கள கூட கவர்ந்தது.அந்த பாடலின் பெயர் மறந்துவிட்டேன்.//

நீங்கள் கேட்கும் பாடல் 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்து நற்கதி அருள்வாயம்மா.' இது வீரமணிஐயர் எழுதி, டீ.எம்,எஸ் பாடிய பாடல். இது ஒரு ராகமாலிகை.
இதுபற்றி ஒரு தனிப்பதிவு விரைவில் தருவேன்.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள் சின்னக்குட்டி!

மலைநாடான் said...

//முடிந்த வரை எனக்காவது அறிமுகம் செய்யுங்கள்//

நிச்சயமாக குமரன். என்னால் முடிந்தளவுக்கு உதவுவேன்.
நன்றி!

சினேகிதி said...

வணக்கம் மலைநாடான்...
வர்ணராமேஸ்வரன் வர்ணம் கலைக்கூடத்தையும் நடாத்தி வருகின்றார்.

மலைநாடான் said...

வணக்கம் சிநேகிதி!

நீங்கள் சொல்லிய தகவல் புதியது. இதுபற்றி சற்று விபரமாக அறியத்தாருங்களேன்.
நன்றி!

வன்னியன் said...

பத்திப்பாடல்களுக்குள்ளால் எனக்கு அறிமுகமில்லையென்றாலும் ஈழத்துப் போராட்டப் பாடல்களுக்குள்ளால் நிறையவே அறிமுகம். அவரது பாடல்களிலும் பலவற்றை என் தளத்தில் தரவேற்றுவேன்.

Anonymous said...

வீரமணி ஐயர் ஈழத்தின் சிறந்த சாகித்ய கர்த்தா! அவர் "கற்பகவல்லி உன் பொற்பதம் ;;;பாடலில்; "நாகேஸ்வரி நீயே நம்பிடும் எமைக்காப்பாய்!;;;;;என சேர்த்து,நயினை நாகபூசணியை பாடல் பெற்ற கோவிலாக்கியவர். பின்பு சீர்காழியார்; சுட்டிபுரம் வந்த போது, "சுட்டிபுரம் வாழும் சிவசுந்தரியே! கண்ணகியே" என எழுதிப் பாடவைத்தவர்.இவை மிக உருக்கமான பத்திப் பனுவல்கள்.
யோகன்
பாரிஸ்

வெற்றி said...

வீரமணி ஜயர் அவர்கள் பற்றி பேரசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய சில சங்கதிகள்:

[1]"N. Veeramani Iyer of Inuvil, Jaffna, was the celebrated writer/composer of the extremely popular devotional song ‘Katpahavalli,’ sung in honour of the presiding goddess at Kapalisuwarar temple, Mylapore, Chennai. This song and the way its musical composition is written gained for Veeramani Iyer praise from both the vidwat musicians of Tamil Nadu as well as the hundreds of thousands of the devotees of the temple."

[2]"Veeramani Iyer was a student of the great composer Papanesam Siva who is known both for his virtuosity in music and the religiosity of the compositions he wrote. "

[3]"Veeramani Iyer’s claim to undying fame rests on the brilliance and virtuosity he has shown in composing songs in the 72 mela kartha ragas. In the carnatic musical tradition it is held that the basic raga system consists of 72 ragas, and many thousands of variant ragas arise out of each of these mela kartha ragas."

[4]"The late Veeramani Iyer has written songs on almost all the important shrines of Jaffna such as the Nallur Murugan temple, Maviddapuram Murugan temple and the Pararajasegara Pillair temple at Inuvil. "

[5]"More importantly, he has written a number of pathams used in the repertoire of Baratha Naddium. Pathams are expressions of love towards the Godhead. There will be no important Baratha Naddiam teacher of Jaffna who has not, at one time or the other sought the assistance of Veeramani Iyer to get a new pathams."

[6]"It is true that we cannot compete with Chennai, but we have had great artistes and music scholars who have commanded attention and sometimes recognition from the music establishments in Chennai."

சினேகிதி said...

வணக்கம் மலைநாடான்.
வர்ணராமேஸ்வரன் உங்கள் பதிவைப் படித்தார்.வலைப்பதிவு பற்றிக் கேட்டார்; விரைவில் அவரே வர்ணம் கலைக்கூடம் பற்றி பின்னோட்டம் போடுவார்.:-)

மலைநாடான் said...

நன்றி சிநேகிதி!

உங்கள் தொடர்பாடலுக்கு மெத்த நன்றி. முடடியுமாயின் வர்ண.ராமேஸ்வரனிடம் என் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து எனக்கு ஒரு மடல் போடச் சொல்லுங்கள்.
நன்றி!

மலைநாடான் said...

சிநேகிதி!
இதுதான் என் மின்னஞ்சல் முகவரி. முன்பு குறிப்பிட மறந்துவிட்டேன்
நன்றி!
malainaadaan@hotmail.com

வன்னியன் said...

வர்ண.இராமேஸ்வரனின் பாடொன்றைப் பதிவாக இட்டிருக்கிறேன்.

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா

மலைநாடான் said...

வன்னியன்!

மேலேயுள்ள முகவரிக்கு. தொடர்புகொள்ள முடியுமா ?