நான் வலைப்பதிவெழுதத் தொடங்கி இன்றுடன் முழுதாக இரண்டு மாதங்கள் நிறைவுபெறுகிறது. ஒரு நாளில் திடீரென நடந்த நிகழ்வு. தமிழ்மணம் தளத்திற்கு வந்த போது எழுந்த ஆசை, நீண்ட நாள் கனவை ஒரு பொழுதில் நிறைவேற்றியது. மகிழ்ச்சியாக இருந்தது. நீண்டகாலமாக விட்டுப்போயிருந்த எழுத்தார்வம் மீண்டும் தொற்றிக் கொண்டது. எழுதினேன் என்பதைவிட எழுதுவிக்கப்பட்டேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நமது எழுத்தைத் தமிழ்மணப்பரப்பில் யாரவது கண்டு கொள்வார்களா? என எண்ணியிருந்த வேளையில், கணிசமானோர் வந்தது உற்சாகம் தந்தது. நல்ல அறிமுகங்கள் கிடைத்தது. சில நண்பர்கள் கிடைத்தனர். புதிய கருத்துக்கள் கிடைத்தன. இணைய வடிவமைப்பில் செய்யக் கூடிய சில விடயங்களைச் சுயமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. இதுவும் ஒரு நல்ல அனுபவம்.
இதமான இளவேனிற்காலம். ஐரோப்பாவில் கோடையின் ஆரம்பமும், முடிவும், வண்ணமயமானவை. மரங்களெல்லாம் துளிர்ந்திருக்கும் இந்த நேரத்தைய இளம்பச்சை வண்ணம், ரம்யமானது. அந்தப் பசுமைக்கு நடுவே, காலைச்சூரியனின் மிதமான வெப்பத்தையும், காலைப்பனியின் மெதுவான குளிரையும், ஒருசேர அனுபவித்து சாலைகளில் பயனிப்பது சுகமானது. மலைச்சாரல்களின் வளைந்தோடும் சாலைகளில், கார் ஓடுவது எனக்கு ரொம்பப்பிடிக்கும். சென்ற ஞாயிற்றுக்கிழமை. நான் நல்ல காலநிலை. அல்ப்ஸ் மலையின் சாரல்களில், அந்தச்சுகானுபவம் கிட்டியது. கத்ரி கோபால் முதல் பொப்மாலி வரை கதம்பமாக, என் கார் பயணங்களைப் பங்குகொள்ளும் இசைக்கோர்வையில் 'திங்கள் மாலை வெண்குடையா..' னும் (பிரபாவின் உதவியில்) 'கடலலையே கொஞ்சம் நில்லும்' சேர்ந்து கொள்ள இன்னும் சுவைத்தது.
இலங்கையில் இந்தியாவில் எதிரெதிராக விலத்திச் செல்லும் வாகனங்களின் சாரதிகள், முகப்பு விளக்கினை அழுத்தி அல்லது ஒலிச்சமிக்ஞை செய்து, தங்களுக்குள் தொடர்பாடல் செய்வதைக் கண்டுள்ளேன். கோடைகாலப் பயணங்களின் போது பல தடவைகள் கண்டிருந்தாலும், நேற்றுத்தான் அது எண்ணத்தில் உறைத்தது. ஐரோப்பாவில் கோடைகாலங்களில் அதிகம் வீதிகளில் வரும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், ஒருவரையொருவர் எதிரெதிராக விலத்திச் செல்லும் போது, ஒற்றைக்கையுயர்த்தி விரல் நீட்டி சமிக்ஞை செய்து போவார்கள். இப்படிச் சமிக்ஞை செய்து விலத்திச் செல்பவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களோ அல்லது ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களோ அல்ல. ஆனால் கணப்பொழுதில் நிகழும் அந்த அசைவு, பேசு பொருள் எத்தனை? அந்தச் சைகையின் வரிகள், நானும் நீயும் ஒத்த விருப்புள்ளவன் எனத் தொடங்குமா? உன் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள் என்று சொல்லித் தொடருமா? முகந் தெரியா மனிதர்களின் அந்த உணர்வாடலைக் கண்டபோது என்னுள் எழுந்த வினா,....
சகமனித நேசிப்பை, மொழியால் முழுமையாக எழுத, பேச, உண்மையாக முடிகிறதா?
8 comments:
வாழ்த்துகள் மலைநாடான் அவர்களே!
அது சாலை விதியா அல்லது ஒரு conventionஆ?
அங்கு காலைவேளைகளிலும் கார்களின் தலைவிளக்குகளை போட்டுக் கொண்டு செல்வதைக் கண்டிருக்கிறேன். எதற்காக ?
நன்றி குமரன்!
மணியன் ஐயா!
மோட்டார் சைக்கிள் ஒட்டிகளின் சைகை, அவர்களுக்கிடையேயான ஒருபழக்கம் மட்டுமே. ஆனால்பகற்பொழுதுகளிலும், வகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுச் செல்வது சாலைவிதி.
மலைநாடான்,
தங்களைப் போலவே பல நல்ல நண்பர்களத்தமிழ்மணம் எனக்கும் கொடுத்திருக்கின்றது.
தமிழ்மணத்தால்தான் உங்களையே நான் சந்திக்க முடிந்தது.
நன்றி பிரபா!
மலைநாடன்! வணக்கம்
உதைபந்தாட்ட வீரர்;கோல் போட்டதும்;குத்திக்கரணமடிப்பது போல் ;இந்த மோட்டார்ச் சைக்கிள் காரர்களும்; கையுயர்த்தும் பழக்கம் வந்ததாக இ ருக்குமேன நினைக்கிறேன்.பிரத்தியேக காரணங்கள்; இருக்காதென நினைக்கிறேன்.
நீங்கள் ஐரோப்பாவிலா,,? இருக்குறீர்கள்.
யோகன்
பாரிஸ்
எனது கருத்து என்னவென்றால் மொழி ஓர் எல்லைக்கு உட்பட்டது. உணர்வுகள் எல்லைக்குட்பட்டவை அல்ல. மனித நேயம் இனம்,மதம்,மொழி ஆகிய எல்லைகளைக் கடந்தது.
piran
பிரன்!
உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். உங்கள் வருகையும் வாசிப்பும் மகிழ்ச்சி தருகிறது.
Post a Comment