Friday, February 23, 2007

இந்திய மயிரும், ஏற்றுமதி வர்த்தகமும்.


பாரிஸின் மத்திய நகர் பகுதியிலிருக்கும் அந்தப் பிரபலமான சிகையரிப்பு நிலையத்திலிருந்து வெளியே வரும் கிறிஸ்டினாவின் முகத்தில் அளவிலா ஆனந்தம். தன் தோள்களில் புரளும் அந்தப்பளுப்பு நிற முடிக்கற்றைகளை, ஆசையாய் வருடி, அழகாகக் கோதுகிறாள்.
அங்கே வரும் ஸ்டெல்லா, கிறிஸ்டினாவைக் கண்டதும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அளவளாவி, முத்தம் சொரிந்து, குசலம் விசாரிக்கின்றாள். கிறிஸ்டினாவின் தோள்களில் புரளும் முடியின் அழகு அவளையும் வசீகரித்திருக்க வேண்டும், அவளும் ரசித்து மகிழ்கிறாள்.
“ இப்போதுதான் செய்து கொண்டு வருகிறேன். நூற்றியம்பது முடிச்சுக்கள் நடுவதற்கு ஆயிரம் யூரோக்கள்.. “ என்றவள் ‘ இது செயற்கை முடியல்ல, இயற்கையானது ’ என மேலும் பெருமிதமாய், தொட்டுத் தடவி ரசிக்கின்றாள்...

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 00 0 0 0 0 0 0 0 0 0


ஏழு குண்டல வாடா, வெங்கட ரமணா, கோவிந்தா கோவிந்தா. எனும் பக்தி கோஷம் கேட்கிறது, ஆட்களின் உடை அலங்காரம், முகங்களின் பரிச்சயம், யானையின் அலங்கரிப்பு, உயர்ந்தெழுந்த கோபுரங்கள், என ஒவ்வொன்றாகத் தொலைக்காட்சியில் கமெரா காட்சிப்படுத்தும் போதே உணர்ந்து கொள்ள முடிகிறது அது ஓர் இந்திய நகரம் என்று. எண்ணிக் கொண்டிருக்கும் போதே, ‘ நான்கு மாடிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய சிகைதிருத்து நிலையம் என அறிமுகம் செய்கிறது விவரணக்குரல். அட ஒரு தடவை சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் நேரும் என நம்மக்களின் மனதில் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கும் திருப்பதியில், ஆழ்வார்களும், அடியவர்களும் போற்றித் துதித்த திவ்வியதிருத்தலத்தில் உள்ள வேண்டுதல் மையத்திற்கு, அல்லது நேர்த்திக்கடனென நிறைவேற்றப்படும் நம்பிக்கை மையத்திற்கு, இப்படியொரு அடைமொழி வர்ணனனையா? சுவிற்சர்லாந்து தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் ஒளிபரப்பாகியது அவ்விவரணம்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவில்களில் நேர்த்திக்காக மழிக்கப்படும், நீண்ட மயிர்கள் சேகரிக்கப்பட்டு, உள்ளுர் தரகரூடாக சேகரிக்கபட்டும், திருப்பதி தேவஸ்தானத்தில் வேண்டுதலுக்காக மழிக்கப்படும் மயிர்கள் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து பெறப்பட்டும், மொத்த ஏற்றுமதியாளரரூடாக இத்தாலிய நாட்டிற்கு ஏற்றுமதியாகிறது. இப்படி ஏற்றுமதி செய்யப்படும், ஒவ்வொரு கிலோ மயிருக்கும், சுமார் இருநூறு யூரோக்கள் வழங்கப்படுகிறது.

இத்தாலிக்கு இறக்குமதியாகும் இந்திய மயிர்கள், இரசாயணச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் கருமைநிறம் அகற்றப்படுகிறது. கருமைநிறம் இழந்த வெண்முடிகளுக்குத் தேவையான வண்ணம் ஏற்றப்பட்டுகின்றன. இதன்பின் நடைபெறும் தரப்பிரிப்பிப்பில், வண்ணமூட்டப்பட்ட மயிர்களுக்கிடையில், கறுப்பு நிறத்தில் காணப்படின், அம்மயிர்கற்றைகள் மீளவும், இந்தியாவுக்குப் பயனப்படுகின்றன. அங்கு வைத்து அவை குறைந்த கூலிக்குக் கிடைக்கும் தொழிலாளர்களின் மூலம் துல்லியமாகத் தெரிவு செய்யப்பட்டு, மீளவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறுதியாக வந்து சேரும் தெரிவு செய்யப்பட்ட மயிர்க்கற்றைகள், தரவாரியாக, கவர்ச்சிகரமாகப் பொதி செய்யப்பட்டு, உலகின் பல பாகங்களிலுமுள்ள, மிகப்பெரிய சிகைபராமரிப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வர்த்தகத்தில் புழங்கும் பணப்பெறுமதிகளைக் கேள்விப்படும் போது, ஆச்சரியமாகவிருந்தது. மிகக்குறுகிய காலத்துக்குள் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் சம்பாதிருப்பது லட்சங்களில் அல்ல கோடிகளில். விவரணத்தின் இறுதியில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் முக்கியமானவை.

வெளிநாடுகளில் தற்போது அதிகரித்து வரும் இயற்கைப்பொருட் பாவனை ஈர்ப்பும், பெண்களிடையே அடர்த்தியான நீண்ட முடிமீது ஏற்பட்டுள்ள பெருவிருப்பும், இத்தகைய தலை மயிர் வர்த்தகத்திற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை நிவர்த்தி செய்ய இந்திய்ர்களின் தலைமயிர்கள் நீளமாகவும், அடர்த்தியாகவும், இருப்பதனால் , இந்தியா இவ்வர்த்தகத்தில் முக்கிய கவனிப்புப் பெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் இருபதினாயிரம் இந்தியர்கள், தங்கள் மயிர்களை மத ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிப்பார்களாம். அவர்களுக்கு இலகுவில் நன்றாக மயிர் வளர்ந்துவிடும். ஒருவர் மற்றுமொரு தடவை மயிர் வழிக்காவிடினும் கூடக் கலையில்லை. இந்தியாவில் அதியுயர் சனத்தொகையிருப்பதனால், அதற்கும் மேலாக மதரீதியான நம்பிக்கை வலுத்திருப்பதனால், இந்த மயிர்க் கொள்வனவில் தடங்கல் கிடையாது. இவ்வாறு அதீதமான நம்பிக்கையோடு கூறுகின்றார்கள் மூன்று ஹெலிகாப்டர்கள், ஆடம்பர பங்களா, என அட்காசமாகப்பொருள் சேர்த்திருக்கும், இவ்வர்த்தகத் தொழிலதிபர்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000000000

கிறிஸ்டினாவின் முடியழகில் மயங்கிய ஸ்டெல்லா, அது இயற்கை முடிதான் என்பதை, கிறிஸ்டினாவிடம் கேட்டு, மீளவும் உறுதி செய்கின்றாள்.

கிறிஸ்டினா விடைபெற்றுச் செல்ல, ஸ்டெல்லா சிகை பராமரிப்பு நிலையத்திற்குள் நுழைகின்றாள். வேறெதற்கு, தனது முடியையும் நீளமாக அடர்த்தியாக மாற்றிக்கொள்ளத்தான். ஏனென்றால் ஐரோப்பிய ஆண்களுக்கு நீள் முடி மங்கையரைத்தான் நிரம்பப் பிடிக்கிறதாம்...

தலைமயிரை மழித்து, மொட்டையிட்டிருப்பவர்களைப் பார்த்து, "திருப்பதியா, பழனியா? " எனக்கேட்பதுண்டு. இனி, பாரிஸா இத்தாலியா? எனக் கேட்கலாமோ?.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
நான் இந்தத் தொலைக்காட்சி விவரணச்சித்திரத்தைப் பார்த்தேன். ஆம் இந்த இத்தாலியர்கள் மிக வசதியாக குடும்பமாக இந்தத் தொழிலை நடத்துகிறார்கள்.இதை விட நீளமான நரை முடிக்கு விலை அதிகம். அவற்றை மழிக்குமுன் கட்டாகக் கட்டி;உடனே நிறுத்து மேற்பார்வையாளரிடம் கொடுக்கப்படுகிறது.
இவற்றுக்கு உபமுகவராக இருப்பவர் ஆங்கிலேயக் குடியுரிமை பெற்ற இந்தியர். அவர்களும் வசதியாகத் தான் உள்ளார்கள்;
இந்த முடி டோப்பாகி ஆபிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
பதிவுக்கு நன்றி

மலைநாடான் said...

யோகன்!

ஆம் அந்த உப முகவர் பற்றிய விபரம் குறிப்பிட மறந்து விட்டேன். குறிப்பிட்டமைக்கு நன்றி.

நம்பி.பா. said...

அன்பரே,

இது குறித்து இந்த வியாபாரத்தின் மறுபக்கமாக, பாதிக்கப்படும் திருப்பதி கோயில் நிர்வாக ஊழியர்களின் நிலை குறித்து ஏற்கனவே எழுதப்பட்டுள்ள ஒரு தமிழ் வலைப்பதிவு இதோ-
http://porukki.weblogs.us/2006/12/14/hollywoodil_thiruppathi_masir/