Wednesday, August 23, 2006

பெருந்துயரின் உணர்வாகிய பிஸ்மில்லாகான்

85ம் ஆண்டென்று நினைக்கின்றேன் நெடுந்தீவுக் கடலில் பயனித்த குமுதினிப்படகில் வைத்து, இலங்கைக்கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழ்மக்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க முனைந்த வேளையில், அந்தக் காட்சிப்படிமங்கள் தந்த அவலத்தை, தொகுத்து முடிந்தபோது, மனது வலித்தது. பச்சிளம் பாலகனின் செஞ்சில் பதிந்திருந்த பைனட் கத்திக்குத்தல் அந்தப்பயங்கரத்தை அதிகப்படுத்தியது. இந்தக் கோரத்தை அப்படியே மக்கள் முன் வைத்தால், பார்பவர்களின் மனநிலைகள் பாதிக்கப்படலாம். ஆகவே உணர்ச்சிகளின் வடிகாலாக, கரைதலாக, பின்னனி இசையொன்றினை இணைப்பது நல்லது என எண்ணினேன்.

அதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வெளிவராத அவ்வீடீயோப்பதிவுகளுடன், அன்றிரவு முழுவதும், கழித்ததினால் ஏதோ ஒருசுமை அழுத்துவதுபோல் ஒரு எண்ணம். அழுத்தத்தின் அயர்ச்சியாலும், காட்சிகளின் கோரத்தாலும், சோர்ந்துபோய் இருந்த என்னை , சூடான தேநீருடன் சந்தித்தார் 'நியூ விக்ரேஸ்' உரிமையாளரான குணம் அண்ணர்.
இராணுவக் கெடுபிடி நிறைந்திருந்த அன்றைய பொழுதுகளிலும், இப்படியான படத்தயாரிப்புக்களுக்கு தன் ஒளிப்பதிவுக் கூடத்தினை, இரகசியமாக இரவுகளில் தந்துதவும் நல்ல மனிதர் குணம் அண்ணா.

தேநீரைக்குடித்தபடி, தொகுத்திருந்த காட்சிகளைப் போட்டுக்காட்டினேன். அதிர்ந்துபோன குணமண்ணர், இந்தப்படங்களை இப்படியே வெளியிடுவதன், கடுமை குறித்துக் கருத்துச் சொன்னார். எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது. அத்துயரினைக் கரைக்கும் ஓர் இசையைப் பின்னணியில் சேர்க்கலாம் என எண்ணிய என் எண்ணத்தினைச் சொல்லியபோது, நல்ல யோசனை என்றவர், என்ன இசையைச் சேர்க்கப் போகின்றீர் எனக்கேட்டார். அதுபற்றித்தான் யோசிக்கின்றேன் என்றபோது, அவரே சொன்னார் 'ஷெனாய்' சேர்த்தால் நல்லது என்றார்.

'ஷெனாய்' அதுவரையில் நான், கேள்விப்பட்டிராத வாத்தியம். என் அறியாமையைச் சொன்னதும், அவர் தன்னுடைய சேகரிப்பிலிருந்த ஒலிப்பதிவுகளிலிருந்து, பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைப்பதிவை எடுத்து ஒலிக்க விட்டார். அப்போதிருந்த மனநிலையில், அந்த இசைகேட்ட மாத்திரத்தில் அழுதே விட்டேன். அப்படியொரு உருக்கமான வாத்திய இசையை அதுவரை நான் கேட்டதே இல்லை. Photobucket - Video and Image Hostingஅன்றைய காலையில் அறிமுகமான பிஸ்மில்லாகானை பின்னர் பலதடவை அனுபவித்து ரசித்திருக்கின்றேன். அதுமட்டுமல்ல தமிழீழத்தின் தெருக்களிலே, குறிப்பாக யாழ்ப்பாணத்து வீதிகளிலே, பல தடவைகள் பிஸ்மில்லாகானின் அற்புமதமான இசை ஒலித்திருப்பதும், அப்போதூன் புரிந்தது.

முன்னாள் பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி மறைந்தபோது யாழ்ப்பாணம் அழுதது. அந்த அழுகையோடு இணைந்திருந்தது பிஸ்மில்லாகானின் ஷெனாய்தான். என் மனங்கனத்த பொழுதுகள் பலவிலும், அவருடைய இசைப்பதிவுகளைக்கேட்டு அமைதியாகிப்போனபோதும், ஐரோப்பா வந்தபின்தான் அவருடைய கச்சேரி ஒன்றினை ஒளிப்பதிவில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய சுதந்திர பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் கங்கைக் கரையிருந்து அவர் இசைத்த அற்புதமான கச்சேரியை, ஐரோப்பித் தொலைக்காட்சியொன்றில் கேட்க, பார்க்கக்கூடிய வாய்புக் கிடைத்தது.

சோக உணர்வினை மிதமாகத் தருவதாலோ என்னவோ, ஷெனாய், தில்ரூபா, போன்ற வாத்தியங்களும், அவற்றின் இசையும், தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், சோகமே வாழ்வாகிப்போன தமிழீழ மக்களின் பெருந்துயரில், ஏதென்றறியாமலே, எவரென்று புரியாமலே, பிஸ்மில்லாக்கானும், அவரது ஷெனாய் வாத்திய இசையும் உணர்வாகி இசைந்தது என்றால் மிகையாகாது.

இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருது பெற்ற அந்தக்கலைஞனின், ஆண்மீகப்பணி காசிவிஸ்வநாதர் ஆலயம்வரை விசாலித்திருந்ததென்பதை அறிந்தபோது, மதங்களுக்கப்பால் விரிந்திருந்த அந்தக்கலைஞனின் மனம் புரிந்தது. 91 வயதில் மறைந்திருக்கும் அம்மேதையை ஏற்றுதல் செய்வோம்.

பிஸ்மில்லாகானின் மறைவு குறித்து நண்பர் சிவபாலனின் மற்றுமொரு பதிவு

9 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலநாடர்!
உன்னத கலைஞரை நினைவு கூர்ந்துள்ளீர்கள்; "இந்த செனாய்" என் 15 வயதில் விபத்தாகக் கேட்டுள்ளேன்.அகில இந்திய வானொலி திருசிராப்பள்ளி,மெட்ராஸ் வானொலி சகல இரவும் வீட்டார் இரவு 9.30 இசைக்கச்சேரி கேட்க்கும் போது; மாத மொரு சனி இரவு ;அகில இந்திய ஒலிபரப்பாக எல்லா நிலையங்களிலும்; கிறேட் ;கலைஞர்களின் இசைக்கச்சேரிகள் இடம் பெறும்; அதில் தென்னிந்தியக் கலைஞர்களும் இடம் பெறுவர். ஓர் இரவு தற்செயலாக இவரின் இசை;வீட்டார் மகாவித்துவான் எனக் கூறிக்கேட்டார்கள்; நானும் கேட்டேன். நாதஸ்வரத்தை விட சற்றுக் கீச்சென்றிருப்பது போல் என் எண்ணம்
பல தமிழ்ப்படப் பாடல்களில் இந்த வாத்தியம் ;சோகத்துக்குக் கனம் சேர்க்க வந்து போகும்.குறிப்பாகக் "கர்ணன்" படப்பாடல்களில் இவ்வாத்தியத்தை விஸ்வநாதன் -ராமமூர்த்தி வெகுவாகப் பயன் படுத்தி இனிய பாடல்களைத் தந்துள்ளார்கள்.பரிபூரணமாக வாழ்ந்து; காசி விஸ்வநாதருக்கும்; இந்துஸ்தானி இசையுலகுக்குக் சேவை செய்து;இந்திய இசைக்குச் சர்வதேச அங்கீகாரத்துக்கும் வழிகோலிப் பெருமிதம் கொள்ளாது வாழ்ந்த ஒப்பற்ற கலைஞன். என் இசைத்தட்டுத் தொகுப்பில் இவரது ஒரு இசைவட்டுள்ளது. எனக்குப் பெருமையாக இருக்கிறது. எங்கள் நாதஸ்வர வித்துவான் சேக் சின்ன மௌலானா குழல் நாதம் கேட்கும் போது; இவர் நினைவுவரும். மதத்துக்கப்பால் மாமனிதர்களாக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற கலைஞர்கள். இனிப் இவர்கள் போல் வர சாத்தியமில்லை.அன்னார் ஆத்மா காசி விஸ்வநாதர் பாதமமரும்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!
உண்மைக்கலைஞனின் ஆளுமைக்கு முன்னால், மதம் நாடு, மொழி, என்பதெல்லாம் எல்லைகளாக மாட்டாது என்பதற்கு பிஸ்மில்லாக்கான் நல்தோர் எடுத்துக்காட்டு. அவர் இசையைப் பலசந்தர்பங்களிலும் கேட்டிருக்கக்கூடிய நம் தமிழீழ மக்கள் பலர், அவரைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

செல்வநாயகி said...

அருமையான கலைஞர். உங்களின் இப்பதிவு மூலமே அவரின் மறைவை அறிந்தேன். வருத்தமான செய்தி.

Chandravathanaa said...

பிஸ்மில்லாகானைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி.

அந்த ஆவணப் படத்தை எடுத்து முடித்தீர்களா?

மலைநாடான் said...

சந்திரவதனா!
அந்த ஆவனப்படத்தை ஒரு அமைப்புக்காகவே தொகுத்திருந்தேன். முடிந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தாயிற்று. பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாயை நீங்களும் யாழ்ப்பாணத்தில் கேட்டிருக்கக்கூடும்.

தங்கள வருகைக்கு நன்றி!

இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள் மலைநாடான்.
....
உஙகளின் நட்சத்திரப்பதிவில் பின்னூட்டம் எழுதமுடியாது இருப்பதால் இங்கே வாழ்த்திவிடுகின்றேன்.

Anonymous said...

மலை நாடன், நான் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயம் இந்த பதிவுப் போட்டு இருக்கிறீர்கள். அதனாலேயே என்னால்
படிக்க முடியாமல் போய்விட்டது. சிவபாலன் அவர்களின் பதிவும் படித்தேன். நம் ஊரில் செனாய் என்பது துக்க சமாச்சாரங்களுக்கு,
வானெலியில் வாசிப்பது என்று இருக்கிறது.
-ramachandranusha

மிதக்கும்வெளி said...

நல்ல பதிவு

suvanappiriyan said...

அருமையான கலைஞர். உங்களின் இப்பதிவு மூலமே அவரின் மறைவை அறிந்தேன்.