Thursday, April 13, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 8

ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களிலெல்லாம், திருகோணமலையில் இனககலவரம் நிகழ்ந்திருக்கிறது. இப்போதும்....தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து நிற்பவர்கள் காலம்காலமாக பேரினவாதிகளால் அழிக்கப்படுகிறார்கள் என்பதை இப்பதிவில் நான் எழுதியதற்கு, மேலும் ஆதாரம் சேர்பதாக, பின்னூட்டப் பதிவிட்ட நண்பர் வசந்தன், \\ திருமலை நடராசன் \\ பற்றிய மேலதிகத் தகவல்கள் அமைந்தன. அவருக்கும், அவர்கூற்றை மேலும் உறுதிப்படுத்திய மற்றைய நண்பர்களுக்கும் நன்றி. இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலிலும், அன்றைய பொழுதில் நடந்தவை போன்ற தாக்குதல்களும், கொலைகளும் தொடர்ந்த வண்ணமிருப்பது, நாட்டின் மொத்த நலனுக்கும் ஊறுவிளைக்கக் கூடியதென்பது இன்னமும் உணரப்படாமலிருக்கும். கசப்பான உண்மை. இத்தகைய சந்தர்பங்களில் எல்லாம் ஊடாகங்களில் வரும் செய்திகளை உற்று நோக்கின் ஒரு ஒற்றுமையை அவதானிக்கலாம்.திருகோணமலையில் கலவரங்கள் நடைபெறும் போதெல்லாம்; தமிழர்கள் மீதான தாக்குதலுக்காக வெளியிடங்களில் இருந்து கலகக்காறர்கள் அழைத்து வரப்படுவதுதென்பது. இப்போதும் அப்படியே. திருகோணமலையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் சிங்கள ஒற்றுமையை கலைப்பதற்கு பேரினவாத ஆட்சியாளர் கையாளும் தந்திரோபாயம் இது. திருகோணமலையில் தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தடையாக வளர்ந்து விட்டது கண்ணுற்று மருண்டு போயிற்று. அதை முறியடிக்க பலவழிகளிலும் முயற்சிக்கிறது. அதில் ஒன்று இலங்கைத்தீவின் உள்ளநாட்டுப்பிரச்சனைக்கு மூல காரணமாய இனப்பிரச்சினையை, மதப்பிரச்சினையாக வெளியுலகுக்கு காட்ட முற்படுவது. வெளிநாடுகளின் கவனம் பல்வேறு காரணிகளாலும், இலங்கைத்தீவு நோக்கித் திசை திரும்பியுள்ள இக்கால கட்டத்தில் இப்பிரச்சினையை, பௌத்தபாரம்பரியத்தின் மீது தொடுக்கப்படுகின்ற போராட்டமாக அடையாளப்படுத்துவதன் மூலம், பௌத்தபாரம்பரியம் மிக்க சீனா, ஜப்பான், ஆகிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனும் தந்திரோபாயத்தை தற்போது பேரினவாதம் கவசமாக அணிந்து கொள்ள முனைகிறது.மேலும் இந்த விடயம் உடனடியாக, கவனயீர்ப்புப் பெற வேண்டுமாயின், உலகின் கண்கள் உற்று நோக்கும், திருகோணமலையில் அதை நடைமுறைப்படுத்துவதே பயன்தரும் எனப்புரிந்துகொண்டு செயற்படுகின்றது. இந்நோக்கத்தின் வெளிப்படையான செயற்படுதான், அண்மையில், திருகோணமலையில் மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்ட புத்தர்சிலை விவகாரம். உலகின் பார்வைக்கு இலங்கை ஒரு பௌத்த பாரம்பரிய நாடு என வெளிப்படுத்தவும், தனது ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களை நியாயப்படுத்தவும், திருகோணமலையில் தமிழர் வரலாற்றினை அழித்தொழிக்கவும், போடப்பட்ட இப்புதிய திட்டத்தினை, இரவோடிரவாக அரச இயந்திரத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தியது. இந் நடவடிக்கைக்கு எதிர்புத் தெரிவித்த தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தொடரின் மூன்றாவது பகுதிக்கு, தேவன் எனும் வாசகர் எழுதி, எம்மால் பிரசுரிக்கப்படாத பின்னூட்டம், உண்மைநிலையினைப் புரிந்து கொள்ளும் அவசியம் கருதி இங்கே சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
மலைநாடன் அவர்களே!
கேடு கெட்ட இந்துமதத்தின் பிள்ளையார்களை ஏன் தமிழர்கள் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? பிள்ளையார் குளிக்கப்போனால் அப்படியே போய்த்தொலையட்டும் என்று இருந்திருக்க வேண்டியதுதானே? தமிழர்கள் எல்லோரும் கேடு கெட்ட இந்து மதத்தை விட்டு விட்டு பௌத்தமதத்தில் சேர்ந்திருந்தால் சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் பூத்துக்குலுங்கியிருக்குமே? அதனை விட்டு ஏன் கேடு கெட்ட இந்துமதத்தின் குளிக்கப்போன பிள்ளையார்களை தேடி எடுத்து உட்கார வைக்க வேண்டும்? பிள்ளையார்களை விட்டுவிட்டு புத்தசிலைகளை மட்டுமே வணங்க வந்திருந்தால் இத்தனை பிரச்னைகள் இருந்திருக்காதே? அம்பேத்கார் வழியில் பெரியார் வழியில் பௌத்தமதத்தை தழுவியிருந்தால் இத்தனை அழிவு நடந்திருக்காதே. அதே வேளையில் உலகத்தின் ஒரே மோசமான விஷயமான சாதியையும் ஒழித்திருக்கலாம்.
சிந்தியுங்கள்.
எப்போது பௌத்தமதத்தில் இணைந்து சிங்களம் பேச ஆரம்பிக்கப்போகிறீர்கள்?
தேவன்.

மதங்களின் ஆளுமை, தேசிய சிறுபாண்மை இனங்களின் இறைமையை அழித்துவிடக் கூடாதென்பதே எமது கருத்து. இனத்தின், மொழியின், இறைமையைப் பாதிக்கா வண்ணம் இணைந்தியங்குவதென்பது வேறு, இனத்தை, மொழியை, ஆக்கிரமித்து, நிலைகொள்வதென்பது வேறு. அது பௌத்தமோ, இந்துத்துவமோ, கத்தோலிக்கமோ, அல்லது இஸ்லாமோ, எந்த ஒரு மதக்கோட்பாட்டையும், இனத்தின் அடையாளமாகக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்வது போன்று தமிழர்களெல்லாம் பௌத்தர்களாகிவிடுவது, இப்பிரச்சினைக்குத் தீர்வாகிவிடுமா?. இது சிறுபிள்ளைத் தனமான வாதமாக உங்களுக்குத் தெரியவில்லை. (இந்துத்துவ அடிப்படை, விமர்சனத்துக்குரியது என்பது வேறுவிடயம்.அதற்காக, அதை மேற்கோளிட்டு, சிங்களப்பேரினவாதத்துக்குச் சாமரம் வீசமுடியாது ) எங்களில் சிலர் இப்படியான எண்ணப்பாடுகளில் தான் இன்னமும் உள்ளார்கள். இத்தகைய எண்ணங்களே மாற்றார், எம்மை அடிமை கொள்ள வலுச்சேர்க்கிறது. இலங்கையில், திருகோணமலையிலும் ஏனைய தமிழ்ப்பிரதேசங்களிலும், தமிழ்மக்கள் மீது பௌத்த மூலாம் பூசப்பட்ட சிங்களப் பேரினவாதமே திணிக்கப்படுகிறதன்றி, தூய பௌத்தமதக் கோட்பாடு கொண்டாடப்படவில்லை என்பது அனைவராலும் உணர்ந்து கொள்ளப் படவேண்டியதொன்று. உணரப்படுமா...?

3 comments:

Anonymous said...

அண்ணே,
தேவனின்ர பின்னூட்டம் நையாண்டியாகக்கூட இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஏற்கனவே வலைப்பதிவில் இதுபற்றி எழுதிய கூட்டமொன்று இருக்கிறது. அந்த நேரத்திலேயே உவற்றை சீரியசாக எடுத்துக்கொண்ட கூட்டமும் உண்டு. இந்தப்பதிவுகளைப் பாருங்கள்.

பதிவு ஒண்டு
பதிவு ரெண்டு.

வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் எழுதும் பதிவுகளில் பதிவுக்கொரு படமாவது போடுங்கள். நன்றாக இருக்கும்.
இங்கே நாலைந்து இருக்கிறது.

மேலும் அருச்சுனாவிலும் இருக்கிறது.

மலைநாடான் said...

பெயர் சொல்லா நண்பரே!
தங்கள் கருத்துக்கும், சுட்டிக்கும் நன்றி!
வசந்தன்!
உற்சாகமூட்டும் உங்கள் தரவுகளுக்கு நன்றி. இனிமேல் நிச்சயம் முயற்சிக்கின்றேன்.