Sunday, April 09, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 7

கல்மெட்டியாவகுளம் என்று தற்போது அழைக்கப்படும் குளத்தின் உண்மையான பெயர் 'வெண்டரசன்குளம்'. கந்தளாய்குளத்தின் கட்டுமானப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிய தன் மந்திரிகளில் ஒருவனனான வெண்டரசன் பெயரினைக் கந்தளாய் குளத்தின் இனைக்குளமான இக்குளத்திற்கு குளக்கோட்டு மன்னன் வைத்து, அவனைக் கௌரவித்தான் என்பது இக்குளம்பற்றி திருகோணமலைவாழ் தமிழ்மக்கள் மத்தியில் செவிவழிக்கதையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுபற்றிய வரலாற்றுக்குறிப்புக்கள் இருப்பது பற்றிச் சரியாகத்தெரியவில்லை. ஆயினும் கந்தளாய்குளம், வெண்டரசன் குளம், என்பன அக்காலத்தமிழ்மன்னர்களின் சிறந்த நீர்ப்பாசனத்திட்டத்திற்குச் சிறப்பான உதாரணமாகச் சொல்லலாம்.தமிழ்மக்களின் வாழ்விடப்பயிர்நிலங்களின் நீர்ப்பாசனத்துக்கென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நீர்நிலைகளின் நீர்கூட, பேரினவாத அரசுகளின் சூழ்ச்சிகாரணமாக கந்தளாய் சீனி ஆலையின் கரும்பு வயல்களுக்குத் திருப்பப்பட்டு, சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாச்சப்பட்டு, எஞ்சிய நீரைதமிழ்பகுதிகளுக்கு வழங்கிய சம்பவங்கள் கூட நடந்தன. இந்த நீர்ப்பாசனங்களால் வருடத்திற்கு மூன்றுபோக நெற்செய்கை நடந்த தமிழ் வயல்களெல்லாம், இரண்டுபோகம், ஒருபோகமென்றாகி, விளைச்சலை முற்றாக நிறுத்திக் கொண்ட கொடுமை கூட, சிங்களப்பேரினவாதிகளின் கடும்போக்கில் நடந்தது. திருகோணமலை மாவட்டத்தின் நெல்விளைச்சலில், பெரும்பகுதியை விளைவித்துக் கொடுத்த அந்த விளைநிலங்களும், அந்த விளைநிலங்களின் உழைப்பாளர்களும், ஒருகாலத்தில் இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. திருகோணமலையின் புவியற்சிறப்பில் முக்கியமான மற்றொரு விடயம், தமிழ் கூறும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்பவற்றில், பாலை தவிர்ந்த ஏனைய நால்வகை நிலங்களையும், இம்மாவட்டத்தில் ஒரு சேரக்காணலாம். எத்துனை இன்னல்கள் விளைந்த போதும், இப்பகுதி மக்களின் திடமான மனப்போக்கினை அசைக்கமுடியாமலிருந்தது. அதனைக்குலைப்பதற்கு வேறு சில முறைகளைப் பேரினவாதம், கையாளத் தொடங்கியது. பலகாலமாக தமிழ்ப்பிரதேசங்களுள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்த சிங்களக்குடும்பங்களை (இவர்களில் சிலர் திருமணபந்தங்களினாலும், தமிழர்களோடு இணைந்திருந்தனர்) தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள். அதற்காகச் சிலபல சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படியான சலுகைகளுக்கு பலியாகிவிட்ட சிங்களக் குடும்பங்களையும், சில முஸ்லீம் குடும்பங்களையும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, முற்போக்கச் செயற்பட்ட இளைஞர்கள் சம்பந்தமான தரவுகளையும், வேறு விடயங்களையும், அறிந்து கொண்டார்கள். அப்படி அறியப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு, அவ் இளைஞர்களைக் குறிவைத்து அரச இயந்திரம் நகர்ந்தது. அந்த நகர்வில் சிக்குண்ட சில இளைஞர்கள் தவிர, பலர் பின்னாளில் தமிழீழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களின் முதல்நிலை உறுப்பினர்களானார்கள்.பின்னாட்களில், சிங்களப்பேரினவாதம் செயற்பட்ட விதத்திலும், அதன்வேகத்திலும், திருகோணமலையை சூழவும் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களால் முற்றாக அழிந்தொழிந்து போயிருக்கும். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறா திருப்பதற்கு முக்கிய காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்ததனாலென்றே சொல்லலாம். ஆயுதப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, இன்றைய பொழுதில் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டமாக மாற்றம் பெற்றிருக்கும் நிலையில், அதன் வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாத பேரினவாதம் மாற்று வழிகளை நாடத் தொடங்கியுள்ளது போன்று, அதன் தற்போதைய செயற்பாடுகள் தோற்றம் காட்டுகின்றன. அந்த நரித்தனச் செயற்பாடுகளால் மொத்த நாட்டினையும், அழிவின் பாதையில் வழி நடத்தத் துணிந்து விட்டார்கள் போலும்.....

1 comment:

Anonymous said...

திருமலையில் இவ்வளவு பிரச்சனையா?