Saturday, April 08, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி 6

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நதிமூலம், தமிழ் மாணவர்கள் மீதான கல்வித் தரப்படுத்தல் என்றே பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். வட தமிழீழ இளைஞர்கள், பேரினவாத அரசின் நிசத்தை நேரடியாகத் தரிசிக்க அது வழியிட்டிருக்கலாம். ஆனால் தென் தமிழீழத்தில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், தமிழீழம எனும் எண்ணப்பாடு கருவுறக் காரணமாய் அமைந்த முக்கிய அம்சம், பேரினவாத ஆட்சியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றங்களும், அக்குடியேற்றவாதிகள், தமிழ்மக்கள் மீது மெல்ல மெல்ல காட்டிய அடக்குமுறைகளுமே. 1983 க்கு முன்னரும் தென்பகுதியில் தமிழர்கள் மீதான தாக்குதல்களுடனான இனக்கலவரம், நடைபெற்றிருந்தாலும், 83 கலவரம் தேசியமட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், சற்றுச் சர்வதேச மட்டத்திலும், கவனயீர்ப்புப் பெற காரணமாக பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். அவை எல்லாவற்றிலும், குறிப்பிடத்தக்கதானது, தமிழ் இளைஞர்களின் ஆயுதத் தாக்குதல். ஆனால் இக்கால கட்டத்திற்கு முன்னமே, தென் தமிழீழத்தில், சிங்களக் காடையர்களிடமிருந்து, தங்கள் பிரதேசங்களைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்தாக்குதல் செய்ய, அல்லது எதிர்தாக்குதலுக்கு தயராக உள்ளார்கள் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழ்மக்களுக்கு இருந்தது. அந்தக் கட்டாயத்தை உணர்ந்து அதனைக் கையேற்றுக் கொண்டவர்கள் தமிழ் இளைஞர்கள்.தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள், தங்கள் பாராளுமன்றப் பதவி பறிபோகா வண்ணம், தமிழ்காத்துக் கொண்டிருக்க, ஆங்காங்கே எந்தவித நிறுவனப்படுத்தலுமின்றி, சிறுசிறு குழுக்களாக, (விழிப்புக்குழு, எல்லைக்குழு, காவற்குழு, என்பது போன்று) தமிழ்மண் பறிபோகா வண்ணம் காத்துக் கொண்டிருந்தார்கள் தமிழ் இளைஞர்கள்.நானறிந்தவரை, திருகோணமலையில் சிவன்கோவிலடி, பத்தாம்குறிச்சி, நிலாவெளி சாம்பல்தீவு, தம்பலகாமம், சேனயூர் கட்டைபறிச்சான், அரசடி, படுக்கை,ஆகிய பகுதிகளில், இவ்வாறு சில இளைஞர்குழுக்கள் அவ்வப்போது நிகழும் கலவரங்களிலிருந்து, தமிழ்பிரதேசங்களைக் காப்பாற்றி வந்தார்கள். அவர்களின் எதிர்செயற்பாடு குறித்து இனஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் அச்சமும் இருந்தது.காலப்போக்கில், கருத்தியல் ரீதியாக இவ்விளைஞர்கள் நெருக்கம் கொள்ள, இதே கருத்தோட்டத்திலிருந்த வடபகுதி இளைஞர்களோடும், தொடர்புகளுண்டாயிற்று. இந்தக் கருத்தியலும் எண்ணப்பாடும் பரவலாகத் தமிழ்இளைஞகள் மத்தியில் வலுப்பெறவே, தமிழ்அரசியற் தலைவர்களின் தலைக்குள்ளும் இது விடயம் மெதுவாகக் குடிபுகுந்தது. என்நினைவுக்குள்ள வரையில் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோஷத்துடன் தேர்தலுக்கு களமிறங்கியது. தமிழுணர்வால் உந்தப்பட்டிருந்த இளைஞர்களை உள்வாங்கவும், அவர்கள் உடலுழைப்பினைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெற்றுக்கொள்ளவும், தமிழீழக்கோஷம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தமிழீழம் எனும் தனிநாட்டுக் கோரிக்கையும், தமிழீழத்தின் தலைநகராக திருகோணமலை மொழியப்பட்டதும், அந்தச் சந்தர்ப்பத்திலென்றே கருதுகின்றேன். அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்ற பின், வெற்றிக்கொண்டாட்டங்கள் பெரும் விழாவாக திருகோணமலையிலேயே நடந்தன. சிவன்கோயிலடியிலிருந்து, விழா நடந்த திருமலை முற்றவெளிவரைக்கும், அலங்காரங்களும் , ஊர்வலங்களும் கூட நடைபெற்றதாக ஞாபகம். வெற்றித் தலைவர்களுக்கு இரத்தத் திலகங்கள் கூட வைக்கப்பட்டதாகவும் ஞாபகம். இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம், பேரினவாதிகளைச் சற்று மருளச்செய்ததென்றும் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் வெகுகாலம் நீடிக்கவில்லை. ஆக்கிரமிப்பும், அடக்குமுறைகளும், தொடர்ந்தன. ( இந்த இடத்தில் பெயர் சுட்டாது பின்னூட்டமிட்ட நண்பர் குறிப்பிட்ட சம்பவத்தைச் சேர்த்துக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன்.) தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்களின் சாம்பல் திருகோணமாலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செய்யப்பட்ட போதும் ஒரு கலவரம் வெடித்தது. தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அச்சமுற்ற பேரினவாதம், அதைக்குலைத்துவிடவேண்டுமென்ற அக்கறையோடு, அச்சமூட்டும் வகையில் அரங்கேற்றியது. அதைவிட இரகசியமாக இன்னொரு விடயமும் நடந்தது. தமிழுணர்வுடன் செயற்பட்ட இளைஞர்கள், பேரினவாதக்கட்சிகளில் அங்கம் பெற்றிருந்த தமிழ், முஸ்லீம், அரசியல் தலைவர்கள் சிலரால், அரச இயந்திரத்துக்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். இவ்விதம் திருகோணமலை, தமிழர்களால் முக்கியத்துவப்படுத்துவதைக் கவனித்துக் கொண்ட பேரினவாதிகளால், குடியேற்றச் செயற்பாடுகளிலும், புராதன தமிழ்நிலங்களிலிருந்து, மக்களை குடிவிரட்டும் செயற்பாடுகளிலும், தீவிரமாகச் சிங்களக் காடையர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இத்தகைய செயற்பாட்டுக்கு பலியான முதல் தமிழ்கிராமங்களென, பன்குளம், கந்தளாய், என்பவற்றைக் குறிப்பிடலாம்.மொரவேவாத் திட்டத்தின் மூலம் குடியேற்றஞ் செய்யப்பட்டவர்களால், பன்குளம் சூறையாடப்பட்டது. பன்குளத்தில் வசித்த மக்கள் அடித்துவிரட்டப்படனர். தங்கள் உறவுகள் வாழ்ந்த ஏனைய இடங்களுக்கு, அவர்கள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். இதுபோல் கல்மெட்டியாவத்திட்டத்தின் மூலமும், மற்றுமொரு திட்டத்தின்( பெயர்சரியாக ஞாபகம் இல்லை) மூலமும், கந்தளாய் பகுதியைச் சூழவும் குடியேற்றப்பட்ட காடையர்களால், கந்தளாய் பகுதி தமிழ்மக்கள் நிர்க்கதியாக்கப் பட்டார்கள். இதில் கல்மெட்டியாவத்திட்டத்தின் மூலமான கல்மெட்டியாக்குளம், ஒரு புராதன நீர்பாசனத்திட்டம். அதற்குச் சுவையான ஒரு கதையுமுண்டு. கதைகேட்க அடுத்த பகுதி வாருங்கள்..

13 comments:

Anonymous said...

//மற்றுமொரு திட்டத்தின்( பெயர்சரியாக ஞாபகம் இல்லை) மூலமும், கந்தளாய் பகுதியைச் சூழவும் குடியேற்றப்பட்ட காடையர்களால், கந்தளாய் பகுதி தமிழ்மக்கள் நிர்க்கதியாக்கப் பட்டார்கள்.//

அல்லை-கந்தளாய்த்திட்டம்

//நானறிந்தவரை, திருகோணமலையில் சிவன்கோவிலடி, பத்தாம்குறிச்சி, நிலாவெளி சாம்பல்தீவு, தம்பலகாமம், சேனயூர் கட்டைபறிச்சான், ஆகிய பகுதிகளில்,//

அரசடி, படுக்கை என்பனவற்றினையும் சேர்த்திருக்கலாம். எழுபத்தேழின் கொண்டாட்டத்தின் பின்னாலே, செல்வநாயகத்தின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த கலவரங்களையும் குறிப்பிடவேண்டும்.

நீங்கள் திருகோணமலையைச் சேர்ந்தவரோ? மலைநாடான் என்பதும் அவ்வழி புக்கியதோ?

வசந்தன்(Vasanthan) said...

விடுதலைப்புலிகளின் ஆவணப்படி ஆயுதம் தாங்கி சிங்களவரை எதிர்த்து முதல் வீரச்சாவடைந்த பொதுமகன் "திருமலை நடராசன்" என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவரைப் பற்றியோ அச்சம்பவத்தைப் பற்றியோ எழுதமுடியுமா?

மலைநாடான் said...

பெயர் சொல்லா நண்பரே!
உங்கள் சுட்டிக்கு நன்றி!.
அரசடி படுக்கை, என்பவற்றினையும் சேர்த்துவிட்டேன்.
/செல்வநாயகம் அவர்களின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த கலவரங்களையும் குறிப்பிடவேண்டும் / இக்கலவரவம் பற்றி நினைவிருப்பினும், சம்பவங்களைக் கோர்வையாக்க முடியவில்லை. அதனால் குறிப்பிட வில்லை. மன்னிக்கவும். பெயருக்கான காரணங்களில் அதுவும் ஒன்று. இவ்வளவு அக்கறையாக வாசித்து, ஆவனங்களும் தரும் நீங்களும் திருகோணமலையைச் சேர்ந்தவராகத்தான் இருக்கவெண்டும். சரிதானே?

மலைநாடான் said...

வணக்கம் வசந்த்ன்!
81 க்குப்பின்
திருகோணமலையுடனான எனது உறவு தொலைவாயிற்று. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் அதற்குப் பின்னராகத்தான் இருக்கவேண்டும். அந்த ஆவனம் பற்றிய சுட்டியேதும் உண்டாயின் தாருங்கள். நன்றி!

Anonymous said...

டிபிஎஸ் ஜெயராஜ்(கூட) கரிசனையோடு நீங்கள் போடும் வரிகளைப் போட்டிருக்கிறாரே
http://transcurrents.com/tamiliana/archives/128

Mudalikulam is now Morawewa;Kumaresan Kadavai is Gomarankadawela; Pankulam is Pankulama;Vilankulam is diwulwewa; Kallaru is Kallara;Thambalagamam is Thambalagamuwa; Kanthalai was once a Tamil region.81 வரை திருகோணமலியிலே இருந்தீர்களா? முடிந்தால்
tamilnetarchives at yahoo dot com இற்கு ஒரு மின்னஞ்சல் இடுங்கள்.

வசந்தன்(Vasanthan) said...

மலைநாடான், அது 81 க்குப் பின் இல்லை. அப்படியிருந்தால் அது ஏன் முக்கிய தகவலாக வரப்போகிறது?
இது நடந்தது அறுபதுகளில் என்று நினைக்கிறேன். அதாவது இளைஞர்கள் ஆயுதம்தூக்கிச் சண்டைபிடிக்க முற்பட்ட காலம். இதன் முழுவிவரம் மறந்துவிட்டது. வன்னியில தான் எங்கயாவது கேட்டுப்பாக்க வேணும். இங்கே கதைக்கிற பெயரில்லாதவருக்கும் உதுபற்றித் தெரியாதோ?

மலைநாடான் said...

நண்பரே!
நீங்கள் தந்த சுட்டியில் சென்று பார்த்த பின்தான் ஜெயராஜ் எழுதியுள்ள விடயம் எனக்குத் தெரியாது. உண்மைகள் ஒருபோதும் மாற்றம் பெறாது. பொய்கள் இடத்துக்கிடம் மாறுபடும்.
வசந்தன் குறிப்பிட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆவணப்படி ஆயுதம் தாங்கி சிங்களவரை எதிர்த்து முதல் வீரச்சாவடைந்த பொதுமகன் "திருமலை நடராசன்" என்று பதிவுசெய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து ஏதாயினும் தெரியுமாயின் அறியத்த தாருங்கள்.
நன்றி!

Kanags said...

திருமலை நடராசன் தனிச் சிங்களத்தை எதிர்த்துப் போராடியவர். திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் வைத்துச் சுட்டுக் கொள்ளப்பட்டவர். மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

Anonymous said...

திருகோணமலையிலே மடத்தடியிருந்து மணிக்கூட்டுக்கோபுரம்வரை நிறையப் பேர் தமிழர் என்பதற்காகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், நடராசன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டது முதல் இறப்பு எனலாமா? திருகோணமலையிலே எண்பத்துமூன்றுவரைக்கும் வெட்டிக்கொல்லப்படுதல்தான் வழக்கம்.

வசந்தன்(Vasanthan) said...

திருமலை நடராசன் இலங்கைச் சுதந்திர தினத்தன்று மணிக்கோட்டுக்கோபுரத்தடியில் சிங்கக் கொடியை எரித்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். ஆண்டு சரியான ஞாபகமில்லை. 1957 அல்லது 58 ஆக இருக்கலாமென்று ஒருவர் சொல்கிறார்.

முன்பு நான் சொன்னதில் ஒரு திருத்தம்.
"ஆயுதம் தாங்கி சிங்களவரை எதிர்த்து" என்ற தகவல் தவறானது. நடராசன் ஆயுதம் ஏந்தவில்லையென்று சொல்லப்படுகிறது. நான் தான் தவறான தகவல் தந்துவிட்டேன்.
ஆனால் ஏதோவொன்றுக்காக திருமலைநடராசனின் பெயர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதென்பது மட்டும் உண்மை.

Anonymous said...

வசந்தன் நன்றி.

//திருகோணமலையிலே எண்பத்துமூன்றுவரைக்கும் வெட்டிக்கொல்லப்படுதல்தான் வழக்கம்.//

நான் சொன்ன காலம் மீளவும் அதே சுழல் :-(

வசந்தன்(Vasanthan) said...

தமிழர் படுகொலையில் மணிக்கூட்டுக் கோபுரத்தடி பிரசித்தம் போலுள்ளது. இரு தினங்களுக்கு முன் நடந்த சம்பவமும் அங்குத் தான தொடங்கியதாகத் தெரிகிறது.

மலைநாடான் said...

திருகோணமலைபற்றி நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும். மணிக்கூட்டுக் கோபுரத்தடி எவ்வளவு பயங்கரமான இடமென்று. தமிழ்மக்களைப் பொறுத்தவரை அது சிங்களக்காடையர்களின் பதுங்குழி