
மூன்று வருடங்களுக்கு முன் ஒரு மார்கழிமாத பகல் பொழுதில் ஸ்ரீ ரங்கம் செல்லும் வாய்புக் கிடைத்தது. ஸ்ரீ ரங்கத்தின் ராஜகோபுரம் உயர எழுந்ததினால்தான் இலங்கையில் பிரச்சனை என்றும், கோபுரங்களில் அழகானது ஸ்ரீரங்கக் கோபுரம் எனவும், ' பச்சை மாமலை போல் மேனி.. எனத்தொடங்கி அரங்க மாநகருளானே' என முடிவுறும், தெரிந்த சில பாசுரங்களின் தமிழகும், தமிழகப்பத்திரிகைகளில் ஸ்ரீரங்கம் ஏதோ ஒருவகையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருந்ததாலும், என்பெற்றோர் ஸ்ரீரங்கம் பற்றிப் பெருமிதமாகக் கதைப்பதை சின்னவயதுமுதல் கேட்டு வளர்ந்ததினாலும், ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் எனும் ஆவல் என்னுள் எழுந்திருந்தது என்னமோ உண்மைதான். வைணவ தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம் என அறிந்திருந்தேன். அங்கே நடைபெறும் சுவர்க்கவாசல் ஏகாதசி பற்றியும் சிறிது தெரியும். ஆனால் அவை குறித்து வேறெதுவும் தெரியாது.
இந்நிலையில் அழைத்துச் சென்ற நண்பர் மேலதிகமாகச் சில தகவலகளைச் சொன்னார்.சுவர்க்க வாசல் ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களும், பின்னதாக பத்து நாட்களும், விசேட விழாநாட்கள் என்றார். அதிலும் முதல் பத்து நாட்களைப் பகல் பத்தென்றும், பின்னைய பத்து நாட்களை இராப்பத்தென்றும் குறிப்பிட்டு விழா நடப்பதாகவும் சொன்னார்.
இதன்பின் அவர் பேசும்போது இந்தியக் கலாச்சாரமும், தத்துவார்த்தமும், அவ்வளவு விரைவில் அழிந்துவிடும் என யாரும் அஞசத்தேவையில்லை எனும் நம்பிக்கை தரும் ஒரு விடயம் இந்த விழாவிலே உண்டு. நீங்கள் கொடுத்து வைத்தவர், இப்போ பகல் பத்து காலம். ஆகையால், பகல் உற்சவத்தின் போதே நீங்கள் அதைக்காணக் கூடியதாகவிருக்கும் என்று சொல்லி என் ஆவலை அதிகப்படுத்தினார்.

ஸ்ரீரங்கம் சென்றடைந்தோம். வானுயர் வண்ணக் கோபுரம் கண்டோம். மூலவரின் அழகுபார்த்து வியந்தோம். பின் பிரகாரம் சுற்றி வந்தோம். பிரகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் மக்கள் குழுமியிருந்தார்கள். பாசுரம் படிக்கும் சத்தம் கேட்டது. சுகமான ஒரு தாளலயத்தில் தனித்துவப் பண்ணோடு பாசுரம் கேட்டது. மக்கள் கூட்டத்தை அண்மிய பொழுது, ஆழ்வார்கள் போல் அலங்காரம் செய்த வண்ணமாய், அடியார்கள் சிலர் வரிசையாக நின்று, பக்தியுடன் பாசுரம் பாடும் காட்சி தென்பட்டது.
நண்பர் சொன்ன நாளைய நம்பிக்கையும் தென்பட்டதுபோலவே தோன்றியது. ஆம், பாசுரம் பாடியவர்களுள் இளையவர்களும் இருந்தார்கள். ஆகா இதுவல்லவோ நற்பணி என எண்ணிக் கொண்டிருந்தவேளையில், 'பெருமாள் வைர அலங்காரத்தில் காட்சி தாறார், சேவிச்சுங்கோ..' நண்பர் சொன்னார். ரங்கநாதரைத் தேடி என் கண்கள் சுழன்ற கணத்தில் விழிகளில் விழுந்த அந்தக் காட்சி அச்சம் தருவதாயிற்று.
ஆழ்வார்கள் பாசுரம் பாட அகமகிழ்ந்து கேட்கும் ரங்கநாதரைக்காண திரும்பிய என் விழிகளின் திரையில் ஸ்ரீரங்கநாதரும், நாச்சியாரும் மேடையில் வீற்றிருக்க, சூழவும் ஆயுதம் தரித்த சீருடைக் காவலர்கள். தூரத்தே செல்கையில் கேட்ட பாசுரத்தின் இனிமை மறந்துபோயிற்று. சூழல் ஏற்படுத்திய பக்திப் பரவசம் பறந்து போயிற்று.
கரும்படை காவல் சூழ வீற்றிருக்கும் அரசியலாளர் போலான இறையவரைப்பார்க்க முடியவில்லை.
விவரம் தெரிந்த நாள்முதலே, இராணுவ அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்ததாலோ என்னவோ, ஆயுதந்தரித்த வீரரைக் கண்டதும், அருவருப்பும் அச்சமும் இணைந்தே வருகிறது. என்ன செய்ய?
ஏன் இப்படி ? .....
'பெருமாள வைர அலங்காரத்தில பாரக்க புண்ணியம் பண்ணிருக்கோணும்.....' நண்பர் ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்...