Wednesday, August 23, 2006

பெருந்துயரின் உணர்வாகிய பிஸ்மில்லாகான்

85ம் ஆண்டென்று நினைக்கின்றேன் நெடுந்தீவுக் கடலில் பயனித்த குமுதினிப்படகில் வைத்து, இலங்கைக்கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழ்மக்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க முனைந்த வேளையில், அந்தக் காட்சிப்படிமங்கள் தந்த அவலத்தை, தொகுத்து முடிந்தபோது, மனது வலித்தது. பச்சிளம் பாலகனின் செஞ்சில் பதிந்திருந்த பைனட் கத்திக்குத்தல் அந்தப்பயங்கரத்தை அதிகப்படுத்தியது. இந்தக் கோரத்தை அப்படியே மக்கள் முன் வைத்தால், பார்பவர்களின் மனநிலைகள் பாதிக்கப்படலாம். ஆகவே உணர்ச்சிகளின் வடிகாலாக, கரைதலாக, பின்னனி இசையொன்றினை இணைப்பது நல்லது என எண்ணினேன்.

அதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வெளிவராத அவ்வீடீயோப்பதிவுகளுடன், அன்றிரவு முழுவதும், கழித்ததினால் ஏதோ ஒருசுமை அழுத்துவதுபோல் ஒரு எண்ணம். அழுத்தத்தின் அயர்ச்சியாலும், காட்சிகளின் கோரத்தாலும், சோர்ந்துபோய் இருந்த என்னை , சூடான தேநீருடன் சந்தித்தார் 'நியூ விக்ரேஸ்' உரிமையாளரான குணம் அண்ணர்.
இராணுவக் கெடுபிடி நிறைந்திருந்த அன்றைய பொழுதுகளிலும், இப்படியான படத்தயாரிப்புக்களுக்கு தன் ஒளிப்பதிவுக் கூடத்தினை, இரகசியமாக இரவுகளில் தந்துதவும் நல்ல மனிதர் குணம் அண்ணா.

தேநீரைக்குடித்தபடி, தொகுத்திருந்த காட்சிகளைப் போட்டுக்காட்டினேன். அதிர்ந்துபோன குணமண்ணர், இந்தப்படங்களை இப்படியே வெளியிடுவதன், கடுமை குறித்துக் கருத்துச் சொன்னார். எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது. அத்துயரினைக் கரைக்கும் ஓர் இசையைப் பின்னணியில் சேர்க்கலாம் என எண்ணிய என் எண்ணத்தினைச் சொல்லியபோது, நல்ல யோசனை என்றவர், என்ன இசையைச் சேர்க்கப் போகின்றீர் எனக்கேட்டார். அதுபற்றித்தான் யோசிக்கின்றேன் என்றபோது, அவரே சொன்னார் 'ஷெனாய்' சேர்த்தால் நல்லது என்றார்.

'ஷெனாய்' அதுவரையில் நான், கேள்விப்பட்டிராத வாத்தியம். என் அறியாமையைச் சொன்னதும், அவர் தன்னுடைய சேகரிப்பிலிருந்த ஒலிப்பதிவுகளிலிருந்து, பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைப்பதிவை எடுத்து ஒலிக்க விட்டார். அப்போதிருந்த மனநிலையில், அந்த இசைகேட்ட மாத்திரத்தில் அழுதே விட்டேன். அப்படியொரு உருக்கமான வாத்திய இசையை அதுவரை நான் கேட்டதே இல்லை. Photobucket - Video and Image Hostingஅன்றைய காலையில் அறிமுகமான பிஸ்மில்லாகானை பின்னர் பலதடவை அனுபவித்து ரசித்திருக்கின்றேன். அதுமட்டுமல்ல தமிழீழத்தின் தெருக்களிலே, குறிப்பாக யாழ்ப்பாணத்து வீதிகளிலே, பல தடவைகள் பிஸ்மில்லாகானின் அற்புமதமான இசை ஒலித்திருப்பதும், அப்போதூன் புரிந்தது.

முன்னாள் பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி மறைந்தபோது யாழ்ப்பாணம் அழுதது. அந்த அழுகையோடு இணைந்திருந்தது பிஸ்மில்லாகானின் ஷெனாய்தான். என் மனங்கனத்த பொழுதுகள் பலவிலும், அவருடைய இசைப்பதிவுகளைக்கேட்டு அமைதியாகிப்போனபோதும், ஐரோப்பா வந்தபின்தான் அவருடைய கச்சேரி ஒன்றினை ஒளிப்பதிவில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய சுதந்திர பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் கங்கைக் கரையிருந்து அவர் இசைத்த அற்புதமான கச்சேரியை, ஐரோப்பித் தொலைக்காட்சியொன்றில் கேட்க, பார்க்கக்கூடிய வாய்புக் கிடைத்தது.

சோக உணர்வினை மிதமாகத் தருவதாலோ என்னவோ, ஷெனாய், தில்ரூபா, போன்ற வாத்தியங்களும், அவற்றின் இசையும், தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், சோகமே வாழ்வாகிப்போன தமிழீழ மக்களின் பெருந்துயரில், ஏதென்றறியாமலே, எவரென்று புரியாமலே, பிஸ்மில்லாக்கானும், அவரது ஷெனாய் வாத்திய இசையும் உணர்வாகி இசைந்தது என்றால் மிகையாகாது.

இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருது பெற்ற அந்தக்கலைஞனின், ஆண்மீகப்பணி காசிவிஸ்வநாதர் ஆலயம்வரை விசாலித்திருந்ததென்பதை அறிந்தபோது, மதங்களுக்கப்பால் விரிந்திருந்த அந்தக்கலைஞனின் மனம் புரிந்தது. 91 வயதில் மறைந்திருக்கும் அம்மேதையை ஏற்றுதல் செய்வோம்.

பிஸ்மில்லாகானின் மறைவு குறித்து நண்பர் சிவபாலனின் மற்றுமொரு பதிவு

Friday, August 18, 2006

இரட்டைக்கலாச்சார முரணும், இரக்கமற்ற கொலையும்.

இன்று காலை வேலையிடத்தில், என்னைச் சூழ்ந்துகொண்ட இத்தாலிய நண்பர்கள் சிலர், இந்தச் செய்தியைச் சொன்னார்கள். சென்ற வெள்ளிக்கிழமை இத்தாலியின் ப்றெசியா எனும் இடத்தில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. நேற்றைய மாலைப்பத்திரிகையில் அச் செய்தி விபரமாக வந்திருக்கிறது.
சலீம் எனும் ஒரு பாகிஸ்தானியத் தந்தை, ஹினா எனும் தனது இருபது வயது மகளைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, பொலிசில் சரணடைந்துள்ளார்.

கொலைக்கான காரணம், கொலை செய்யப்பட்ட மகள் ஹினா, ஒரு இதத்hலிய இளைஞனைக் காதலித்து, அவனுடன் இணைந்து வாழ்ந்ததும், ஐரோப்பிய நாகரீக மங்கையாகத் தன்னை அழகுபடுத்திக் கொண்டதும். ஹினாவின் இச்செய்கையால், தன் குடும்ப கௌரவம், தனது சமூகத்தின் மத்தியில் கேலிக்குரியதாக்கப்பட்டதனால் ஆத்திரமுற்ற தந்தை, வெளியே தங்கியிருந்த மகளைத் தந்திரமாக அழைத்து, தன் மைத்துணர்களுடன் இணைந்து, இதுபற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஆத்திரமுற்று இக் கொலையைச் செய்திருக்கின்றார்.


புலம் பெயர்ந்த வாழ்வில், இரட்டைக்கலாச்சார முரண்பாடு என்பது முன்னெழுந்து நிற்கும் பெரும்பிரச்சனையாகும். இதை எதிர்கொள்ளப் போகும் வழிமுறைகள் பற்றி இன்னமும் சரிவரப் பேசப்படவில்லை அல்லது முற்றாக அறிந்துணரப்படவில்லையென்பதே உண்மையாகும்.
இப்பிரச்சயைபப்பற்றி என்னுடன் கதைத்த இத்தாலிய நண்பர்களில் ஒருவன் “கலாச்சாரத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடிய வயதில், வகையில் சொல்லிக்கொடுப்பதுதான் பெற்றோர்களின் கடமை. அதைவிட்டு, வயது மேற்பட்ட பிள்ளைகளின் சுயவிருப்பின் மேல், தங்களுடைய கலாச்சாரப்பிடிமானங்களை வன்முறையாகத் திணிப்பது என்ன நியாயம் ? ” எனக் கேட்டான்.


இதை என்னுடன் கதைத்த இத்தாலிய நண்பர்கள், நான் ஒரு ஆசியன் என்பதனாலேயே என்னுடன் இதுபற்றிக் கதைத்தார்கள். இச்சம்பவத்தில் உள்ளடங்கபட்டது பாகிஸ்தானியக்குடும்பம் எனினும், இது பொதுவாக ஆசியர்களுக்கான பிரச்சனையாயினும், குறிப்பாக இலங்கையர், இந்தியர், பாகிஸ்தானியர்கள், எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையே. கலாச்சார வெறியும் கருணையற்ற கொலையும் எனத்தலைப்பிட உத்தேசித்த போதும், அத்தலைப்பின் கடுமைகருதியும், புலச்சூழலின் அவசியம் கருதியுமே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.

இந்தப்பொதுத் தன்மையினையும், பிரச்சனையின் தாக்கத்தினையும் புரிந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பரிமாற விரும்புவர்கள் மட்டும் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அதைத் தவிர்ந்த மனப்போக்கில் எழுதப்படும் எந்தக்கருத்தும் வெளியிடப்படமாட்டாது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் நண்பர்களே!

Monday, August 14, 2006

எரியும் கொள்ளி எடுத்து.....


14.08.06 திங்கள் (இன்று) காலையில், வன்னிப்பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவுக்கு அண்மையில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில், சிறிலங்கா வான்படைகள் நடத்திய கோரத்தாக்குதலில் 60 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். அண்மைக்காலமாக, யுத்த நிறுத்த உடன்பாடு இன்னமும் செயற்பாட்டிலுள்ளது, எனச் சொல்லிக் கொண்டு தமிழர்கள் மீது தொடர்ச்சியாக பல வழிகளிலும் தாக்குதல் தொடுப்பதன் மூலம் அப்பாவித்தமிழர்கள் பலரைக் கொன்றுள்ளது. அந்த வரிசையில் இன்று நடந்துள்ளது மிகக்கொடூரமானதும், மிலேச்சத்தனமானதுமாகும். இந்த அநாகரிகச் செயலினை வன்மையாகக் கண்டிப்பதுடன், இக்கோரச் சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து அஞ்சலிக்கின்றோம்.


சிறிலங்கா அரசின், பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதல் இதுவொன்றும் முதல் தடவையல்ல. இருப்பினும் இம்முறை நடந்திருக்கும் இத்தாக்குதல் மூலம், சிறிலங்காஅரசு, எரியும் கொள்ளி எடுத்து முதுகு சொறிகிறது என்று சொல்லலாம்.